(Reading time: 13 - 25 minutes)

"ஜெஸ்ஸி, நீ வீட்டுல தங்கிக்க" என்றான் வசந்த்.

"அங்கேயா?"

"சில அறைகள் சேதமில்லாம இருக்கு"

"இருந்தாலும்....தனியா?"

"ஜெஸ்ஸி, வேணும்னா நான்...?"

"ஜான்!" என்று கத்தினான் வசந்த்.

"மெழுகுவர்த்தியை எடுத்து தரட்டுமான்னு கேக்க வந்தேன்"

"எங்க வச்சிருக்க?"

"என்னுடைய ரூம்ல இருக்கு"

"ஜெஸ்ஸி வா" என்று அழைத்தபடி வீட்டிற்குள் அழைத்து சென்று அவளுக்கு அறையை ஏற்பாடு செய்து கொடுத்து வெளியே வந்தான் வசந்த்.

"ஜான் உனக்கு தூங்குறதுக்கு அறை ஏற்பாடு செய்யவா?"

"என்னை விடுப்பா. நான் குரங்கு போல மரத்துல தொங்கிட்டு தூங்குறேன்"

வசந்த் அமேலியாவின் எதிரில் அமைதியாக அமர்ந்தான். இருளில் அவள் முகத்தை தெளிவாக பார்க்க முடியவில்லை. கீழே கிடந்த மரக்குச்சிகளை பொருக்கி பற்ற வைத்தான். அந்த வெளிச்சத்தில், அமேலியா அமர்ந்தபடியே உறங்கிக்கொண்டிருப்பது தெளிவாக தெரிந்தது.  

குளிர் காய்ந்தபடி அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் வசந்த். சுற்றி எங்கும் இருள். அமேலியாவின் முகத்தில் மட்டும் வெளிச்சம். மனமெங்கும் காதல் பரவசம்! மௌனத்தோடு இமை கொட்டாமல் அமேலியாவையே பார்த்துக்கொண்டிருந்தான்.

திடீரென, யாரோ தன்னை எழுப்பியது போல் உணர்ந்த அமேலியா மெதுவாக கண்விழித்தாள். தன் எதிரே வசந்த் அமர்ந்திருப்பதை பார்த்து திகைப்படைந்தாள். வசந்த் மெதுவாய் புன்னகைத்தான். அவர்களின் விழிகள் பேசிக்கொண்டன. இதயத்தில் புதுமையான வலி உருவாகி உடல் முழுவதும் பரவியது. ஏக்க மூச்சு காற்றில் கலந்தது.

வசந்திற்கு அவளிடம் பேசவேண்டும் என்ற ஆசை உருவானது. ஆனால், என்ன பேசுவது? அவளுக்கு புரியவா போகுது? கடவுள் அவளுக்கு இங்கிலீஷா தமிழோ கற்றுக் கொடுத்திருக்கலாம் என்று தனக்குள்ளாகவே கூறிக்கொண்டான்.  

வேறு என்ன செய்வது என்று யோசித்தவன் காதல் பாடல் ஒன்றை பாடத் தொடங்கினான். அமேலியாவின் முகத்தில் ஏதேனும் மாற்றம் தெரிகிறதா என்று பார்ப்பதையும் தவறவில்லை. அவன் எதிர்பார்த்தபடியே அமேலியாவின் முகத்தில் மாற்றங்கள் தெரியத் தொடங்கின.

வசந்தின் பாட்டு சத்தம் ஜானை உசுப்பியது. கண்களை திறந்து நடப்பவற்றை நோக்கினான். அந்த காட்சி அவனுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. 'இதுக்கு தான் நீ எல்லோருக்கும் ரூம் ஏற்பாடு செஞ்சு கொடுத்தியா' என்று தனக்குள்ளாகவே கூறிக் கொண்டவன் மெதுவாக கொட்டாவி விட்டபடி எழுந்தான்.

அதை சற்றும் எதிர்பாராத வசந்த் பாடுவதை நிறுத்திவிட்டு உறங்குவது போல் நடித்தான். அமேலியாவும் தலையை தாழ்த்திக்கொண்டாள்.

அவற்றை கவனித்த ஜான், அங்கும் இங்கும் உலாவினான். பின்னர் மீண்டும் தான் படுத்த இடத்தில் சென்று படுத்தான்.

வசந்திற்கு சற்று நிம்மதி பிறந்தது. இருந்தும், ஜான் தூங்கும் வரை அமைதி காக்க முடிவெடுத்தான். சரியாக பதினைந்து நிமிடங்கள் கழித்து எழுந்த வசந்த்,  ஜான் இருக்கும் இடத்தை நோக்கினான். அவன் நிச்சயம் தூங்கியிருக்க வேண்டும் என்று எண்ணியவன் அமேலியாவை நோக்கினான். அவள் உறங்கிவிட்டிருந்தாள். அவளை எழுப்புவதற்கு மீண்டும் பாடலை முணுமுணுத்தான் வசந்த். அமேலியா கண் விழித்தாள்.

வசந்த் அவளை பார்த்து புன்னகைத்தபடியே பக்கவாட்டை நோக்கியவன், அருகில் ஜான் அமர்ந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தான். இருவரையும் மாறி மாறி நோக்கினான் ஜான்.  

"ஏன் பாட்டை நிறுத்திட்டீங்க? பாடுங்க"

"ஜான், நீ தூங்கலையா?"

"தூங்கிட்டு தான் இருந்தேன். காற்றில் ஒரு கீதம் பறந்து வந்து காதுக்குள்ள நுழைஞ்சு என்னை எழுப்பி இங்க வந்து உட்கார வச்சிடுச்சு"

"அமேலியா தூக்கம் வரலைன்னு சொன்னா. அதான் பாடினேன்"

"எனக்கும் தூக்கம் வரல. பாட்டு பாடி தூங்க வை"

"ஜான் நீ ஒண்ணும் சின்ன குழந்தை இல்லை"

"இந்த அம்மா இப்போ தான் புட்டிப்பாலை குடிச்சு முடிச்சாங்களா?"

அந்த நேரத்தில், "வசந்த்..வசந்த்.." என்றழைத்தபடி ஜெஸிகா ஓடி வந்தாள்.

"என்ன ஜெஸ்ஸி?"

"தனியா படுக்க பயமா இருக்குடா. நான் இங்கயே இருந்திடுறேன். என்ன, தூக்கம் தான் வராது"

"சார் நல்லா பாட்டு பாடி தூங்க வைப்பாரு. நீ உட்காரு"

"டேய் சும்மா இருடா"

"இவன் என்ன சொல்லுறான்?"

"அது ஒண்ணும் இல்லை. நீ உட்காரு ஜெஸ்ஸி"

அமேலியாவின் அருகில் ஜெஸிகா அமர்ந்தாள். ஜான் வசந்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.