(Reading time: 14 - 28 minutes)

தொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 45 - தேவி

vizhikalile kadhal vizha

டிவு ஆச்சி தங்கள் வாழ்க்கை பற்றி சொல்ல ஆரம்பித்தார்..

“மலரு.. உங்க தாத்தாவும் , கயல் தாத்தாவும் அண்ணன் தம்பிங்க.. உங்க தாத்தா தான் மூத்தவங்க.. கயல் தாத்தா அடுத்து பொறந்தவங்க.. எங்களுக்கு கல்யாணம் ஆகி கிட்டத்தட்ட ஐஞ்சு வருஷம் கொழந்தை இல்லை.. கயல் தாத்தாவிற்கும் கல்யாணம் முடிஞ்சு கிட்டத்தட்ட மூணு வருஷம் கொழந்தை இல்ல.. எங்க மாமியா அதான் உங்க பூட்டி, அவங்க உறவு எல்லாம் ஒரு மாதிரி பேச ஆரம்பிச்சுட்டாங்க..  இத்தனைக்கும் நானும், கயல் பாட்டியும் நெருங்கின சொந்தம் இல்லாட்டியும், சொந்தக்காரங்க தான்.

அப்புறம் மொத கயல் பாட்டி உண்டாக, என்னை ரொம்ப பேச ஆரம்பிச்சாங்க. அப்போ எல்லாம் உன் தாத்தா தான் எல்லோரையும் அடக்கி வைப்பாரு.. அந்த குமரன் எங்களுக்கு இதுதான்னு நினைசான்னா , யாரு என்ன செய்ய முடியும்..? அப்படின்னு கேட்டு அடக்கிடுவாரு.

உன் சின்ன ஆச்சி, என்னோட விசனத்த பார்த்துட்டு, உங்க பெரியப்பா கணேசன் பொறக்கவும், என் கையிலே கொடுத்துட்டா. தாய்ப்பால் கொடுக்கிற நேரம் தவிர, மித்த நேரமெல்லாம் அவன் என்கிட்டதான் வளர்ந்தான்.

மூத்தவனுக்கு கணேசன்னு பேர் வச்சதே உங்க தாத்தா தான்.. அவர் அந்நேரமே, சொல்லுவாரு, கணேசனுக்கு தம்பியா அந்த வேலனே வந்து பொறப்பான்னு

அவன் என் மடியிலே விளையாடின நேரமோ என்னவோ , நானும் உண்டாகி, உங்க அப்பா பொறந்தான். எங்க நாலு பேருக்கும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு...  உங்க கொள்ளுத்தாத்தா ஆசைப்படி நாங்க எல்லோரும் குலதெய்வம் கோயிலுக்கு பொங்கல் வைக்க போனோம்..

எல்லோரும் சந்தோஷமா இருந்த அந்த நேரம் யாரு கண்ணு பட்டதோ, குடும்பமா சாமி கும்பிட போன நாங்க தனியா திரும்பி வந்தோம்.” என்று நிறுத்த,

மலரும். கயலும், இருபக்கமும் பாட்டியின் பக்கம் அமர்ந்து அவரை அனைத்துக் கொண்டனர். அதில் சற்று திடபட்டவராக,

“நம்ம கோவிலுக்கு போயிட்டு வார வழியிலே, காரையாறு பக்கத்திலே ஒரு கோவில் இருக்கிறதா சொல்லி, அங்க போயிட்டு வரலாம்ன்னு கணேசன் அம்மா சொன்னா... அந்த கோவிலுக்கு பரிசல்லே தான் போயிட்டு வரணும்.

நல்ல பாதுகாப்பான பரிசல் தான். அது எல்லாம் ரெண்டு ஆமப்ளைங்களும் பார்த்துட்டு தான் ஏத்தினாங்க..

எல்லோரும் சாமி கும்பிட்டு திரும்பி வரும்போது, புள்ளைங்க ரெண்டும் எங்கூட ஏறவே, எனக்கு துணையா உங்க தாத்தாவும் ஏறிட்டார்.. என் அத்தை, மாமா, கொழுந்தன், ஓரகத்தி எல்லோரும் ஒரு பரிசலே ஏறினாங்க..

பரிசலிலே பாதி தூரம் போகும் போது, இன்னொரு பரிசல்காரன் அப்போதான் பழகுறான் போலே.. வேகமா துடுப்பு போட்டுட்டு வந்தவன், பெரியவங்க வந்த பரிசலை தட்டி விட்டுட்டான்.. இந்த பரிசல் ஓட்டறவன் எவ்ளோ சமாளிக்க பார்த்தும் முடியாம, பரிசல் ஒரு சுழலில் மாட்டிகிட்டு பெரியவங்க எல்லோரும் உள்ளே விழுந்துட்டாங்க..

உங்க தாத்தா உள்ளே குதிக்க போனாரு.. எங்க பரிசல் ஓட்டுறவன் தடுதுட்டான்..

“ஐயா நீங்களும் மாட்டிக்காதீங்க.. ரெண்டு சின்ன புள்ளைகள வச்சுக்கிட்டு உங்க பொஞ்சாதி என்ன செய்யும்?” ன்னு கேட்கவே, ஒன்னும் செய்ய முடியாம தவிச்சாரு.. எனக்கும் உங்க தாத்தாவ குதிக்க சொல்ல பயம்.. ஒரு பக்கம் மாட்டிகிடாவங்கள நினைச்சு தவிச்சா, இன்னொரு பக்கம் அவருக்கும் ஏதும் ஆயிட்டா இந்த புள்ளைங்க கதின்னு ரொம்ப தவிச்சேன்.

ரொம்ப நேரமாகியும் யாரும் வெளியில் வரலன்னவும், அங்க இருந்தவங்க இனிமே அதில் விழுந்தவங்க பொழைக்க மாட்டங்கன்னு சொல்ல, ரெண்டு பேரும் கதறி அழுதோம்.

மனசு கேக்காம, நாலு நாளு அந்த ஊருலே தங்கி இருந்தோம்.. ஒருத்தராவது பொழைக்க மாட்டாங்களான்னு... ஐஞ்சாம் நாள் தான், வேற இடத்துலே உடம்பு கரை ஏறிச்சு.. மனசு எல்லாம் தவிப்பா அங்கேயே காரியம் எல்லாம் செஞ்சுட்டு ஊருக்கு வந்தோம்.

எங்க துக்கத்த மேலும் கூட்ட, உறவுக்கறாங்க எல்லாம் ஒன்னு ஒண்ணா பேச ஆரம்பிச்சாங்க.. உங்க பையன் பொறந்த நேரம் சரியில்லை , அப்படின்னுட்டு.. நாங்க அத எல்லாம் கண்டுக்காம தான் இருந்தோம். கணேசன் அம்மா வழி உறவு எல்லாம், கணேசன அவங்க வளர்த்துட்டு, அவன் சொத்து எல்லாம் எடுத்துக்க முயற்சி செய்ய ஆரம்பிச்சாங்க.. அதிலேர்ந்து நாங்க யாரையும் வீட்டுக்குள்ளே சேர்க்கறது இல்லை.

இவங்க பள்ளிக்கூடம். போக வரையிலே அவன எதச்சையா பார்கிராப்புலே பார்த்து தேவை இல்லாம பேச ஆரம்பிச்சாங்க.. அவனுக்கு விவரம் புரியலை ஆனாலும், ரொம்ப சங்கடப்பட்ட ஆரம்பிச்சான்.

இத பார்த்த உங்க தாத்தா, நம்ம ஊர்லே இருக்கிற நிலத்த எல்லாம் குத்தகைக்கு விட்டுட்டு வெளியூர்லே வியாபாரம் செய்யலாம்னுட்டு, எங்களை எல்லாம் கூட்டிகிட்டு தனியா போயிட்டாரு. திருநெல்வேலி டவுன்லே ஒரு கடை ஆரம்பிச்சு, கிராமத்துலே விளயறது எல்லாம் இங்க நேரடியா விக்க ஆரம்பிச்சார்.

சுத்தமான காய்கறிக, இலை, கீரைன்னுட்டு நல்லதா கிடைக்கவும், வியாபாரம் நல்ல போச்சுது.. மொத கொஞ்சம் கொஞ்சம் ஊர்காரங்க வரும்போது வீட்டுக்கு கூட்டிகிட்டு வருவார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.