(Reading time: 14 - 28 minutes)

வந்தவங்க சும்மா போகாமே, கணேசன் அவங்க அப்பா மாதிரின்னு ஏதாவது சொல்ல ஆரம்பிச்சாங்க.. அதுக்கு ஏத்தாப்புலே கணேசன் சித்த சுமாரா படிக்க, வேலன் நல்லா படிச்சான்.. அதையும் எங்கள ஓரவஞ்சனை செய்யுறதா பேச ஆரம்பிச்சாங்க.. அதுலேர்ந்து ஊர்லேந்து உறவுக்காரங்க யாரையும் இங்கன வர விடமாட்டாரு உங்க தாத்தா..

ஊர் விஷேசம்ன்னா அவர் மட்டும் போயிட்டு வருவார். அப்போ ஒருமுறை போயிட்டு வரும்போது, பஞ்சம் பொழைக்க ஊர விட்டு வந்த ஒரு கூட்டத்த பத்தி பேசினவரு, அதிலே ஒரு சின்ன பையன் இந்த வயசிலேயே மத்தவங்கள பத்தி கவலைப்பட்டு, தனக்காக எதுவும் கேக்காம இருக்கான்.. அவன மாதிரி புள்ளைங்க நல்லபடியா இருக்கனும்ன்னுட்டு பள்ளிக்கூடத்துலே சேர்த்து விட்டதா சொன்னாரு..

அதிலேர்ந்து ஊர் போயிட்டு வரும்போது எல்லாம் அவன பத்தி பேசுவார்.. அவன் படிச்சு முடிச்சது, அவனுக்கு ஊர் நிலத்துலே கொஞ்சம் குத்தகைக்கு கொடுத்தது, கொஞ்ச நாள் கழிச்சு அவனுக்கே அந்த நிலத்த வித்துட்டது எல்லாம் சொல்லிருக்காரு.

இங்க கணேசன், வேலன் ரெண்டு பேரும் பெரிய பசங்களா இருந்தாங்க.. கணேசன் அவன் பெரியப்பா வியாபரம் பார்க்க, வேலன் படிச்சு அரசாங்க உத்தியோகம் பார்க்க ஆரம்பிச்சான்.

கணேசனுக்கு கல்யாணம் செஞ்சோம்.. கொஞ்ச நாள் கழிச்சு வேலனுக்கும் கல்யாணம் செஞ்சு வச்சோம். சொல்லி வச்ச மாதிரி எங்கள மாதிரி அவங்களுக்கும் கொழந்தை பொறக்க தாமதம் ஆச்சு..

எங்களுக்கும் இதே கஷ்டம் இருந்ததாலே, நாங்க என் மருமக ரெண்டு பேரையும் எதுவும் சொல்ல மாட்டோம்.. யாராவது ஏதும் பரிகாரம் சொன்னால், நாங்க போய் அத செஞ்சிட்டு வந்துருவோம்,

அப்போதான் நாங்க முன்னாடி போன கோவிலுக்கு போயிட்டு வர சொல்லி ஒருத்தர் சொல்ல, நான் வர மாட்டேன்னுட்டேன்.. இதுக்கு மேலே நம்ம குடும்பத்துக்கு இழப்பு வேண்டாம்ன்னு அழுதுட்டேன்..

ரொம்ப நாளா என்னை கேட்டவர், ஒருமுறை ஊருக்கு போயிட்டு வரும்போது , அந்த கோவிலுக்கு போயிட்டு வந்தார். அப்படியும் ரொம்ப நாள் எதுவும் தெரியல..

கிட்டத்தட்ட ஐஞ்சு வருஷம் கழிச்சு மொத வள்ளி உண்டாக, உடனேயே கணேசன் பொண்டாட்டியும் உண்டானா. ரெண்டு மருமவளுங்களும் பதினைஞ்சு நாள் வித்தியசத்துலே ரெண்டு பேத்திகளையும் என் கையில் கொடுத்தாங்க.

உங்க தாத்தா வம்சத்துலே மூணு நாலு தலைமுறையா  பொம்பள புள்ளைங்க கிடையாது.. நீங்க ரெண்டு பேரும் பொறக்கவும் , இந்த வீட்டுக்கு மகாலகஷ்மிங்களே பொறந்ததா நினைச்சு, ரெண்டு பேரையும் வளர்த்தோம்..

உங்க தாத்தா கண்ணை மூடுறதுக்கு கொஞ்ச நாளு முன்ன எங்கிட்ட பேசிட்டு இருக்கும்போது, அந்த கோவிலுக்கு போயிட்டு வரும்போது அவரும் தண்ணியிலே மூழ்க இருந்ததாவும், அந்நேரம் அவர் கூட வந்த இவர் வளர்த்து விட்ட அந்த பையன் தான் காப்பதினதாவும், அதுக்கு நன்றி சொல்லும்போது அவர் கல்யாணத்த பத்தி பேசினதையும் சொன்னார்.

அப்போவும் நான் கேட்டேன், அவருக்கு பையன்தான் பொறந்துருக்குன்னு உங்களுக்கு தெரியுமான்னு?

அதுக்கு “ஆமாம்.. அது தெரியும்.. ஆனா இப்போ அவன் வியாபாரம் செய்ய வெளியூர் போயிட்டான்.. நான் அவங்ககிட்டே விலாசம் எல்லாம் வாங்கலை.. ஆனா எனக்கு நம்பிக்கை இருக்கு.. அந்த வீட்டுக்குத்தான் என் பேத்தி வாழபோவான்னு.. எனக்கு மலர், கயல் ரெண்டு பேரும் ஒண்ணுதான்.. ஆனால் மலர் தான் நாள் கணக்கிலே மூத்தவ. அதோட கொஞ்சநாளா ஒரு எண்ணம்.. கணேசன் நம்ம கூடவே இருந்துட்டான்.. அவன் அம்மா வழி உறவுங்க எல்லாம் அவன அடிக்கடி கேக்கறாங்க.. ஒரு வேளை அந்த உறவுலே பையன் வந்தா அத நம்ம பேத்தி கயலுக்கு கட்டி கொடுத்திடலாம்.. அப்படின்னு சொன்னார்..”

“எனக்கு அவர் சொல்றது சரியாதான் தோனுச்சு.. அதான் நானும் மலர் , அவர் சொன்ன பையனுக்கு கட்டி கொடுதுடலாம்ன்னு வாக்கு கொடுத்துட்டேன்.. இப்போ அதான் இந்த தம்பிக்கு மலர கல்யாணம் செஞ்சு கொடுக்க முடியாதுன்னு உங்க கிட்டே சொல்றேன்... “ என்று முடித்தார்.

ற்று நேரம் அங்கே அமைதியாக கழிந்தது. நமசிவாயத்தின் எண்ணம் தவறு என்று சொல்ல முடியாது.. ஏற்கனவே  பேரிழப்புக்களை சந்திச்ச அதே இடத்தில், மீண்டும் ஒரு இழப்பு நேராமல் காத்த சிவஞானம், அவருக்கு தெய்வமாக தெரிந்தார். அதே சமயம் தன் கண் முன்னால் வளர்ந்த இவனுக்கு பிறக்கும் பிள்ளைகளும், அதே ஒழுக்கத்தோடும், பரந்த சிந்தனையோடும், அந்த உழைப்பையும் சொல்லி கொடுத்து வளர்ப்பான் என்று தோன்றியது. அந்த எண்ணத்தில் தான் இன்னும் இரு பக்கமும் வாரிசுகள் வராத நிலையில் கூட அந்த வாக்குறுதி அவரை கொடுக்க வைத்தது.

இதை எல்லாம் சொல்லித்தான் வடிவு ஆச்சியிடம் இந்த விஷயத்திற்கு சம்மதம் வாங்கி இருந்தார். ஆனால் அவர் இருந்து செய்ய நினைத்தது, காலன் அவரை சீக்கிரமாக அழைத்துக் கொண்டதில் முடியாமல் போய் விட்டது. அதனால் தான் வடிவு ஆச்சி இந்த விஷயத்தில் வெகு உறுதியாக இருந்தது.

இது எல்லாம் எல்லோர் மனத்திலும் ஓடிக் கொண்டு இருக்க, செழியன் அப்பா தான் தான் ஐயா வளர்த்து விட்டவன் என்று சொல்ல வந்தார். அதற்குள் மலர் பேச ஆர்மபித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.