(Reading time: 14 - 27 minutes)

தொடர்கதை - என் அருகில் நீ இருந்தும்!!! - 05 - பூஜா பாண்டியன்

En arugil nee irunthum

மையலா? அப்படினா!!! என்று திரும்பி அவனையே கேட்ட  உத்ராவை சிறிது பயத்துடனே பார்த்தான்  அபி. மூன்று வருடங்களாக அமெரிக்காவில் கிடைக்கும்  வெளி உணவு பிடிக்காமல்,  தானே சமைத்து சாப்பிட்டு கஷ்டப்பட்டது நினைவுக்கு  வந்தது.

“அம்மாவிடம், எனக்கு பெண் பார்க்கும் பொழுது நான் கேட்ட  ஒரே வேண்டுகோள்  இது தான். பெண்ணிற்கு சமைக்க தெரிந்து இருக்க வேண்டும் என்பது. அதையும் எங்கம்மா நிறைவேற்றவில்லையா?” என பரிதாபமாக புலம்பினான் அபி.

“அத்தையை குறை சொல்லாதிங்க அபி. அத்தை சரியாகத் தான் பார்த்தார்கள். பூமி அக்கா நல்லா சமைப்பா. உங்களுக்கு தான் கொடுத்து வைக்கவில்லை.” என்று உதட்டோர புன்னகையுடன் கூறினாள் உத்ரா.

“சரி விடு, நானே ரெண்டு மாதத்தில் நல்லா சமைக்க கற்றுக் கொண்டேன். உனக்கு ஒரு மாதம் போதும் உத்ரா. யூ டியூபில் பார்த்து சீக்கிரம் பழகிக் கொள்ளலாம்.” என்று வருத்தமே படாத உத்ராவிற்கு ஆறுதல் கூறினான் அபி.

“சரி இன்று பூவாவுக்கு என்ன செய்வது? என்று உத்ரா வினவ....

“இன்று நான் தான் வீட்டில் இருக்கிறேனே, நானே சமைக்கிறேன்.” என்று கூறிய பொழுது... வீட்டின் அழைப்பு மணி ஓசை கேட்டது.

சென்று திறந்து பார்த்த பொழுது, ஒரு கையில் வருணுடனும், மறு கையில் டிபன் டப்பாவுடனும் உத்தமன் நின்று கொண்டிருந்தான்.

“உள்ளே வாங்க அண்ணா” என்று அழைத்தபடி முன் சென்றாள் உத்ரா

“காலையில் சமைக்க நேரம் இருந்திருக்காது என்று தான், நானே டிபன் எடுத்து வந்தேன்.” என்று கூறி டேபிளில் உணவை வைத்தான் உத்தமன்.

உத்தமனை சந்தேகமாக பார்த்த அபி, “இப்படி எல்லாம் எடுத்து வரும் ஆள் இல்லையே  நீ“ என்று கூறினான். தேவ சேனா சுமாராகத் தான் சமைப்பாள். உத்தமனே அதனை கஷ்டப்பட்டு தான் சாப்பிடுவான்.

அதனால் யாரையும் வீட்டிற்கு சாப்பிடக் கூட அழைப்பதில்லை உத்தமன். ஏதாவது விசேஷ தினத்திலோ, அல்லது சுற்றுலா சமயத்திலோ அவர்கள் வீட்டு பதார்த்தமாக தயிர் சாதம் தான் இருக்கும்.

“இன்று ஏதாவது உங்களுக்கு கொடுத்தால், நாளைக்கு இந்த டப்பாவை திருப்பி தரும் பொழுது, சிஸ்டர் நல்லதாக ஏதாவது சாப்பிடக் கொடுப்பார்கள் என்ற ஆசையில் தான் “ என்று சிறிதும் வெட்கப்படாமல் சிரித்துக் கொண்டே கூறினான் உத்தமன்.

“கொடுமை, கொடுமை ன்னு, காசிக்குப் போனா,  அங்க ரெண்டு கொடுமை குத்தாட்டம் போட்டுச்சாம். அந்த மாதிரி உன் நிலைமை ஆகிடுச்சே உத்தமா!!!” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான் அபி.

டிபனை கொடுத்து விட்டு உத்தமன் கிளம்பியதும், இருவரும் அந்த பூரியை கிழிக்க  முடியாமல், கார்ன் பிளேக்ஸ் சாப்பிட்டனர்.

அபி தனது வேலைகளை  பார்க்க கிளம்பியதும், “நான் சிறிது நேரம் அலுவலக வேலைகளை பார்கிறேன்.  பன்னிரண்டு மணிக்கு மேல் சமையலை ஆரம்பிக்கிறேன்.” என உத்ராவிடம் கூறி அவனது கணினி அறையினுள் நுழைந்து கொண்டான்.

உத்ரா சமையல் அறையில் என்ன, என்ன சாமான் எங்குள்ளது என அறிந்து கொண்டு , குளிக்க சென்றாள்.

அபியும் அவனது அறையில் இருந்தபடி அலுவலகத்துடன் தொலைபேசியில்  தொடர்பு கொண்டு பேசி, தான் வந்த விபரத்தை தெரிவித்து, நேரம் போனதே தெரியாமல்  அவனது வேலையில் மூழ்கிப் போனான்.  அடுத்து பசி வந்த பொழுதே மணியைப் பார்த்தான். மதியம் 1.30 என கடிகாரம் காட்டியது.

மதியமும் கார்ன் பிளேக்சா என்று பதறியபடி கிழே வந்து பார்த்த பொழுது, ரிக்னைனர் சோபாவில் சாய்ந்தபடி உத்ரா உறங்கிக் கொண்டிருந்தாள்.

அவள் உறங்கும் அழகை சிறிது நேரம் ரசித்தபடி சமையலை ஆரம்பிக்க சமையலறை சென்ற பொழுது அங்கிருந்த சாப்பாட்டு மேஜையின் மேல், அவனுக்கு பிடித்த, முருங்கைக்காய் சாம்பார், பருப்பு உசிலி, பாவக்காய் வறுவல், அப்பளம்  என சாப்பாடு தயாராக இருந்தது.  அதை பார்த்ததும், அபிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. அவனுக்கு இருந்த பசிக்கு, வெறும் இலை, தளையை கொடுத்தாலும் சாபிட்டு இருப்பான்.

இருந்த சந்தோசத்தில் முதலில் உத்ராவை கூட எழுப்ப மறந்து விட்டான். தட்டை எடுத்த பின்பே அவள் நியாபகம் வர, சென்று அவளை எழுப்பி வந்தான். அபி சாப்பிடும் அழகை பார்த்தவாறே, தானும் உண்டாள் உத்ரா.

அவனுக்கு எது, எது பிடிக்கும் என்று அவ்வப்பொழுது அத்தையிடம் கேட்டு அவைகளை மட்டுமே சமைக்க கற்றிருந்தாள் உத்ரா.

சாப்பிட்டு முடித்த பின்பே, உத்ராவிடம், “அருமையான சாப்பாடு, சமையலா அப்படின்னா என்று கேட்டு விட்டு இவ்வளவு அருமையா சமைச்சு இருக்க.  காய்கறிக்கு என்னடா செய்தாய்.” என கேட்ட அபியிடம்....

“எல்லாம் நம்ம தேவா அக்கா உபயம் தான். பக்கத்தில் காய்கறி கடை எங்கு உள்ளது என்று கேட்கப் போனேன். அவர்களிடம் இருந்ததையே கொடுத்தார்கள். சமைத்து முடித்ததும் பாதியை வாங்கிச் சென்று விட்டார்கள்” என்று முறுவலுடன் கூறினாள் உத்ரா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.