(Reading time: 14 - 27 minutes)

“தேவா சிஸ்கு, ஒரு நல்ல அடிமை சிக்கிட்ட.  உன்னை பிழிஞ்சு, எடுக்க போறாங்க பார்.  சரி உன்னோட சூப்பர் சமையலுக்கு, உனக்கு என்ன பரிசு  வேண்டும் சொல்லு.” என்றான் அபி.

“ஒரு டிரைவ் போலாமா வெளியே?” என்று கண்கள் மின்ன கேட்டாள் உத்ரா.

“கொஞ்சம் வேலை இருக்குடா. முடித்த பின் மாலை நேரம் வெளியே போகலாம்.  வெளியே போகும் போது அப்படியே, காய்கறி கடைக்கு சென்று புதியதாக வாங்கி வரலாம்”. என கூறி அவனது அறைக்குள் அடைந்து கொண்டான்.

மாலை வெயில் சாயும் நேரம், உத்ரா போட்ட காபியை குடித்து, பின் பக்கத்தில் இருந்த ஓடையை ஒட்டி இருந்த நடை மேடையில் சிறிது தூரம் நடந்தனர். அந்த இடம் பார்க்கவே ரம்யமாக இருந்தது. சலசலாவென ஓடும் நீரும், அதன் கரை ஓரம் இருந்த உயர்ந்த மரங்களும், நடுவே ஒரு இடத்தில் ஒரு மரம் விழுந்து, ஓடையின் குறுக்கே கிடந்ததை பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது. அதன் மேல் அணில்கள் சில விளையாடிக் கொண்டு இருந்தன. நம் ஊர் அணிகள் போல் சிறிதாக இல்லாமல், கீரி பிள்ளை அளவிற்கு இருந்தது.

காரில் அவளை அழைத்து சென்று அங்கிருந்த இந்திய கடைகளில் காய்களும், அடுத்து இருந்த கோழி கடையில் கோழியும் வாங்கியபடி வீடு வந்து சேர்ந்தனர்.

மறு நாளில் இருந்து அபி, அலுவலகம் கிளம்பிச் சென்றான். ஒரு வழியாக அவர்கள் வாழ்க்கையும் நண்பர்களாக அழகிய ரிதத்துக்குள் வந்தது.

அபி அலுவலகம் சென்ற நேரங்களில், தான் செய்யும் சமையலை வீடியோவாக எடுத்து, அதை  யூ டியூபில் பதிவேற்றம் செய்தாள். மீதி நேரங்களில் ஆன் லைனில் தேடி, சில்சியில் கதை படிக்க ஆரம்பித்தாள் உத்ரா. இவ்வாறாக மூன்று மாதங்கள் ஓடி இருக்க...

ரு மாலை நேரம் வீடு வந்த அபிமன்யு “அடுத்த வாரம் வார கடைசியில் மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது உத்ரா, நாம்  இருவரும், நயாகரா நீர்வீழ்ச்சியைப் போய் பார்த்து வரலாமா? போகும் பொழுது சில இடங்களையும், வரும் பொழுது வாஷிங்டனும் பார்த்து வரலாம். இந்த மூன்று நாள், எனக்கும் உன்னோடு மனம் விட்டு பேச கொஞ்சம் நேரம் கிடைக்கும். இங்கிருந்தால் எப்பொழுதும் வேலை தான். உனக்கு லாங் டிரைவ் போக பிடிக்கும் தானே?” என கேட்டு உத்ராவை மகிழ்ச்சியில் ஆழ்த்தினான்.

இந்த மூன்று மாதத்தில், அவனது காதலை சொல்லவில்லையே தவிர, ஒரு நல்ல கணவன் எப்படி எல்லாம் நடந்து கொள்வானோ அதற்கு மேலாகவே, உத்ராவை நன்கு பார்த்துக் கொண்டான் அபி. அதனால் இந்த பயணத்தில் அவனிடம், அவள் இத்தனை ஆண்டுகளாக, அவனைத் தான் விரும்பினாள் என்ற உண்மையை கூறி விட முடிவெடுத்தாள் உத்ரா. அதனால் உற்சாகமாகவே தலை ஆட்டினாள் அபியிடம்.

அந்த வியாழன் இரவு, மூன்று நாட்களுக்கான துணிகள், கொஞ்சம் நொறுக்கு தீனி என்று அனைத்தையும் பெட்டியில் அடுக்கிக் கொண்டு இருந்த பொழுது சுனைனா வாட்சப்பில் அழைத்தார்.

“எல்லாம் பெட்டியில் அடுக்கி விட்டாயா உத்ரா?” என கேட்டார் சுனைனா. இரண்டு நாள் முன்பே இந்த பயணத்தைப் பற்றி கூறி இருந்தாள் உத்ரா.

“எல்லாம் தயார் அம்மா. அப்பா எப்படி இருக்காங்க?. என்ன இன்று உங்க குரலில் ரொம்ப மகிழ்ச்சி தெரியுது. அப்பா ஏதாவது உங்களை இரண்டாவது தேனிலவு அழைத்து செல்வதாக கூறி இருக்காங்களா?” என்று சிரித்தபடி கேட்டாள் உத்ரா.

“இந்த வயதில் எனக்கு என்னடி தேனிலவு வேண்டி கிடக்கு. இப்பொழுது  எங்களோட சந்தோஷமே, பேர பிள்ளைகள் தான். உன்னோட அக்கா அந்த சந்தோசமான விசயத்தை இப்பொழுது தான் சொன்னா. அதனால் தான் உடனே உன்னை கூப்பிட்டேன்.” என மகிழ்ச்சியோடு கூறினார் சுனைனா.

“வாவ், சூப்பர் அம்மா. அக்காவிடம் இப்பொழுதே பேசறேன்.” என்று கூறி அந்த மகிழ்ச்சியில் உத்ராவும் இணைந்து கொண்டாள்.

“அக்காவிடம் பேசுவது இருக்கட்டும், நீ எப்பொழுது எங்களுக்கு இப்படி ஒரு மகிழ்ச்சியான தகவலை கொடுக்க போகிறாய்” என சுனைனா கேட்க...

இங்கு உத்ராவின் முகம் வெட்கத்தால் சிவந்தது. “ சீக்கிரமே அம்மா.” என்று பதில் கூறி போனை வைத்தாள்.

அறைக்குள் அவள் முகத்தை பார்த்தவாறு வந்த அபிமன்யு, என்ன என்று கேட்க, அவளும், அக்காவைப் பற்றிய  அந்த மகிழ்ச்சியான தகவலை கூறி படுக்க சென்றாள்.

படுத்த பின்பும், இந்த பயணத்தில் அவனிடம் எப்பொழுது தனது விருப்பத்தைப்  பற்றி பேசுவது, எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதை எல்லாம் நினைத்தவாறே உறங்கிப் போனாள் உத்ரா.

மறு நாள் காலை இருவரும், காரில் கிளம்பி பயணத்தை ஆரம்பித்தனர். காரில் இருந்த ஜி.பி.எஸ். வழி காட்டியபடி வந்தது. போகும் வழியில் நான்கு மணி நேரத்தில் ஓர் இடத்தில் காரை நிறுத்தினான் அபி. மரத்தால் ஆன ஒரு கட்டிடம் மட்டும் இருந்தது, மற்றபடி அந்த  இடம் சமவெளியாகவே இருந்தது. பக்கத்தில் ஒரு ஏரி இருந்தது. அந்த ஏரியை காட்டத் தான் அழைத்து வந்திருக்கிறான் என்று நினைத்த பொழுது, அந்த மர கட்டிடத்திற்குள், நுழைவு சீட்டு வாங்கி உத்ராவை அழைத்துச் சென்றான் அபி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.