(Reading time: 17 - 33 minutes)

27. என் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்

En sippikkul nee muthu

ஷ்விதா, வார்த்தைகளின் வீரியத்தை அறிந்து தான் சொன்னாளோ என்னவோ?

ஜெய்யோ மதம் பிடித்த யானையாய் மாறிப் போனான்.  யானை எப்படி எதிரிலிருப்பவரை தூக்கி வீசுமோ அது போல கார் கதவை ஓங்கி உதைத்ததில்....அதை பிடித்தபடி நின்றிருந்த யஷ்விதா, சற்று இடைவெளி விட்டு நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு காரின் மேல் விழுந்திருந்தாள்.  மோதிய வேகத்தில் முதுகிலும் பிடறியிலும் பரவிய வலியில் துடித்து நிற்க முடியாது தள்ளாடி, அந்த காரின் மீதே சாய்ந்து கொண்டாள்.

அடுத்த நொடி பெருங்கோபத்தோடு அவளருகில் வந்திருந்த ஜெய், “யாரை பத்தி என்ன வார்த்தை சொன்ன?” என்று கர்ஜித்து, கழுத்தை நெறித்தவன், “உனக்கு எவ்வளவு தைரியமிருந்தா வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லுவ... ப்ரியாவோட முகத்துக்காக போனா போகுதுனு உன்னை விட்டத, தப்பா புரிஞ்சுக்கிட்டு என்ன வேணாலும் சொல்வியா? என்ன போசுறனு பார்த்து பேசு இல்ல அடுத்த வார்த்தை பேச உயிரிருக்காது.  இன்னொரு முறை சரூவை பத்தி ஏதாவது உளறின....” என்று நிறுத்தி, வார்த்தைகளை பிரதிபலிக்கும் தன் கண்களை மூடி திறந்தவன், “ம்ஹீம்...அவளை பத்தி நினைச்சினா கூட உயிரோட இருக்கமாட்ட”

கழுத்தை நெறித்ததில் மூச்சு திணறிய போதும், தடுக்காது அவனையே ஆழ்ந்து பார்த்திருந்தாள் யஷ்விதா.  பயமென்பது சிறிதுமின்றி எதையோ சொல்ல துடித்த அவளின் முகத்தையும் கண்களையும் எதிர்கொண்டவனுக்கோ தன்னிலை புரிய அவனுடைய செய்லில் வெட்கினான்.  பெண் என்பதையும் மறந்து அவள்தான் எதையோ உளறுகிறாள் என்றால் இப்படி நடந்து கொள்வது தன்னுடைய ஆண்மைக்கு அழகில்லை என்று அவளை விடுவித்தான்.

கைகள் காரை செலுத்திக்கொண்டிருக்க உள்ளத்திலோ வார்த்தைகளில் வரிக்கமுடியாத வேதனை மூண்டிருந்தது. 

அவளால் எப்படி சரயூவின் கற்பை பற்றி பேசமுடிந்தது? அவளும் ஒரு பெண்தானே! அவளுக்கு தெரியாதா? உயிரை விட மானத்தை பெரிதாக நினைப்பது பெண்களின் குணமென! உற்றத்தோழியாக சரயூவிடம் பழகிவிட்டு இப்படியொரு வார்த்தையை சொல்ல முடியுமா? மனைவிக்கு தெரிந்தால் துடித்து போவாளே என்றதும் சரயூவின் மலர்ந்த முகம் மனக்கண்ணில் வந்து போனது. 

சில காலமாக அவளிடமிருந்து தொலைந்து போன மலர்ச்சி! காரணத்தை தேடிக் கொண்டிருந்தவனுக்கு யஷ்விதா சொன்னது உண்மையோ என்ற கேள்வி எழும்போதே, “நோ! நோ! நோ......” என்று கத்தியபடி ஸ்டேரிங்கை கைகளால் குத்த...சிறு ஆட்டம் கண்டு நின்றிருந்தது வண்டி.

இருக்காது! அப்படியேதும் நடந்திருக்காது! யஷ்விதா தான் உளறினால் என்றால் தானும் அதையே உண்மையென்று நினைப்பது முட்டாள் தனமென சொல்லிக்கொண்டவன் தண்ணீரை குடித்து தன்னை சமன்படுத்த முயன்றான்.

தண்ணீர் உள்ளிறங்க, நெஞ்சின் வேதனை குறைவது போலிருந்த வேளை....தேவையில்லாமல் அந்த பாழும் கனவு நினைவுக்கு வரவும், தொண்டையில் இறங்காது தடைபட்ட தண்ணீர் மண்டைக்கு ஏறி மூக்கில் எரிச்சலை கொடுத்து வாய்வழியாக வெளிவந்து காரின் விண்ட் ஷீல்டில் பட்டுத் தெறித்தது.  

ரிசார்ட்டின் முதல் முத்தம்...சரயூ வெளியேறிய சி.சி. டி.வி. ஃபூட்டெஜ்....யாரோ ஒருவன் துரத்த தன்னை காத்துக்கொள்ள ஓடும் சரயூ....யஷ்விதாவின் வார்த்தைகளென மனம் தறிக்கெட்டு ஓடியது!

எல்லாவற்றையும் முடிச்சிட்டு பார்த்தவனுக்கு யஷ்விதா சொன்னது உண்மையென்று உறைக்க....

பதற்றமும் குற்றவுணர்வும் ஒருங்கே எழுந்து இம்சிக்க, தலையை பிடித்தபடி உட்கார்ந்துவிட்டான்.

அவனால் தானா?!

அவன் தானா காரணம், சரயூ தன்னுடைய சுயத்தை தொலைத்ததற்கு!

அறிந்த செய்தி நெஞ்சை அறுக்க, உடலெல்லாம் எரிய, அவளை பார்த்திடும் நோக்கத்தோடு வீட்டை நோக்கி விரைந்தான்.

தோட்டத்திலிருந்த ஊஞ்சலில் அமர்ந்திருந்தவள், வேக நடையும், இறுகிய முகமும், தவிப்பை சுமந்த கண்களுமாக வரும் ஜெய்யை கண்டு எழுந்து கொள்ள....

“சரூ!” என்றவனின் அழைப்பிலிருந்த உணர்வை உணரும் முன்பாக அவனுடைய இறுகிய அணைப்பில் சிக்கியிருந்தாள்.  என்ன ஏதேன்று இவள், அடுத்து யோசிக்க கூட அவகாசம் கிடைக்காது மூச்சுக்கு திணறும்படியாக மாறியிருந்தது அவனுடைய அணைப்பு.

சரயூ, தன்னுடைய பெண்மையை காத்துக்கொள்ள எப்படியெல்லாம் போராடியிருப்பாள்? எத்தனை வேதனையில் துடித்திருப்பாள்? அவளின் மனதும் உடலும் புண்பட்டிருக்குமோ என்று என்றோ நடந்த நிகழ்வு, இன்று தான் நடந்தது போல் பதறியவனின் கைகள் அவசரமாக அவளின் நலத்தை ஆராயத் தொடங்கின.  தலை மேலிருந்து கீழாக முதுகுக்கும், முதுகிலிருந்து தலைக்குமாக கைகள் அலைந்தது, ஒரு நிலையில்லாமல் செய்வதறியாது தடுமாறிக் கொண்டிருக்கும் அவன் நெஞ்சின் நிலையை சொல்லுவது போல் இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.