(Reading time: 17 - 33 minutes)

இத்தனை நேரமாக ஜெய்யின் செயலால் ஆச்சரியத்திலும் குழப்பத்திலும் மூழ்கியிருக்க....மேனியில் ஊர்ந்த அவன் கைகள் கொடுத்த பயத்தினால், அவனை விலக்க முயன்றாள். 

யஷ்விதாவின் வார்த்தைகளும், தன்னுடைய கனவும், சரயூவின் நிலையுமென எல்லாவற்றிலும் தன்னிலை மறந்து அவளை அணைத்திருந்தவனுக்கு இவளுடைய முயற்சி புரியவில்லை.  எங்கே அவளை பிரிந்தால், தன்னவளுக்கு துன்பம் வந்திடுமோ என்று மேலும் அணைப்பை இறுக்கி.... 

“உன்னை விடமாட்ட... உன்னை விடமாட்ட” என்று பிதற்றினான்.

உடல் நடுங்க கணவனிடமிருந்து விடுபட போராடிக் கொண்டிருந்தவளுக்கு, அவனுடைய வார்த்தைகளை கேட்டதும் எப்படிதான் அத்தனை வலிமை வந்ததோ? ஆவேசமாக அவனை தன்னிடமிருந்து பிரித்து தள்ளியிருந்தாள்.

துன்பமேதுமினி அவளுக்கு நேர விடமாட்டான் என்று அவன் சொன்னதை கேட்டவளுக்கோ அவன் தன்னை அடைய நினைக்கிறான் என்று புரிந்து வைத்தது.

கோபத்தினால் சிவந்திருந்த அவளின் முகமும், சீற்றத்தை ஒட்டு மொத்தமாய் தத்தெடுத்திருந்த கண்களினால் இவனை எரித்திடும் பார்வை பார்த்தவள் விடுவிடுவேன அங்கிருந்து நடக்கலானாள்.

சரயூவின் கோபத்தில் தெளிந்தவனுக்கு இப்போது தான் அவளை அணைத்திருந்தது உறைத்தது.  கடந்த சில நாட்களாக ஜெய்யின் அன்பும் காதலும் அவளை சற்று மாற்றியிருக்க, ஓரவளவுக்கு இவனோடு சகஜமாக பேசவும் பழகவும் ஆரம்பித்திருந்தாள்.  அப்படியிருக்கையில் இவன் திடீரென அவளை அணைத்ததை...இதற்காக மட்டுமே அவளுக்கு அன்பு காட்டினான் என்று தானே தோன்றும்! தன்னுடைய தவறு புரியவும் அவசரமாக அவள் பின்னோடு நடந்தான்.

“சாரிடா சரூ! அது....நா....” மன்னிப்புக் கோரி ஏதோ சொல்லத் தொடங்கியவனின் பேச்சு, திரும்பி நின்று அவள் பார்த்த பார்வையில் நின்று போனது.

“உங்களுக்கெல்லா பொண்ணுங்களை பார்த்தா எப்படிடா தெரியுது? நீங்க நினைச்சதும் எந்த பொண்ணா இருந்தாலும் உங்க காலடியில வந்து விழனும்....உங்களுக்கு ஒருத்திய பிடிச்சிருந்தா போதும்...உடனே நீங்க சொல்றத கேட்டு உங்களோட காதலுக்கோ கல்யாணத்துக்கோ சம்மதம் சொல்லனும்...அவளுக்குன்னு ஒரு காதல் வராதா? இல்லை அவள் யாரையும் வாழ்க்கை துணையா தேர்ந்தெடுக்க கூடாதா? அவளோட மனசு முக்கியமில்லை..அவளோட கனவுக்கு இடமில்லை! என்ன உலகமோ இது?! பேருக்கு ஆணுக்கு பெண் சமம்னு சொல்லிக்கிட்டு இன்னமும் ஆணாதிக்கத்தை மறைமுகமா செலுத்திக்கிட்டுதா இருக்கு.  ஒருதலை காதல் பேரில் இன்னைக்கு எத்தனை கொலையும், ஆசிட் அட்டாக்கும்? உண்மைய சொல்லனும்னா அவங்களுக்கெல்லா காதல்னா என்னன்னு கூட தெரியாது” கண்களில் கண்ணீர் வழிய பொரிந்தவள் தனதறைக்குள் புகுந்துகொண்டாள்.

றுநாள் காலையில் அறைக்கதவை திறந்தவள் கணவனின் நிலையை கண்டு உறைந்துபோனாள்.

அவள் அறையினருகே தரையில் உட்கார்ந்து சுவற்றில் சாய்ந்திருந்தவனின் தோற்றம் ஏனென்றே தெரியாது அவள் உயிரை உலுக்கியது.  கலைந்த கேசமும் கலையிழந்த முகமும் இலக்கில்லாமல் வெறித்திருந்த சிவந்த கண்களுமாக நேற்று அணிந்திருந்த அதே உடையிலிருந்தவனை பார்த்ததும் புரிந்து போனது, இவள் கதவை அடைத்ததிலிருந்து இங்கேயே உட்கார்ந்திருக்கிறான் என்பது.  அவனை பார்க்க பார்க்க குற்றவுணர்வு தலைதூக்கியது.  அவளின் பேச்சு ஏற்படுத்திய தாக்கத்தினால் தான், நேற்று மதியத்திலிருந்து இப்படி ஒரே இடத்தில் இருந்திருக்கிறான். 

இவள் வந்ததை கூட உணராது அமர்ந்திருப்பவனை கண்டு உள்ளம் உருகியது.  சட்டென அவனருகில் மண்டியிட்டவள், “சஞ்சு!” என்றாள்.  அந்த அழைப்பிலிருந்த உருக்கம் கூட அவனை கலைக்கவில்லை.

மறுபடியும், “சஞ்சு!” என்றவளின் குரல் சற்று உயர்ந்திருக்க...இம்முறையும் அவனிடத்தில் அசைவேதுமில்லாமல் போக பயம் பிடித்து கொண்டது.

அவன் தோள்களை பிடித்து உலுக்கி, “சஞ்சு என்னை பாரு! என்னாச்சு உனக்கு? ஏன் இப்படி உட்கார்ந்திருக்க?” என்று பதற்றத்தில் கத்த, மெல்ல கண்களால் அவளை அளந்தவன், “சரூ! வந்துட்டியா? சாரிடா! நான் வேணு...” ஏதோ விளக்கியவனை சட்டென தன் மார்போடு சேர்த்தணைத்து கொண்டாள்.

அவள் தன்னை புரிந்துகொள்ளவில்லையே என்ற கவலையில் மூழ்கியிருந்தவனுக்கு சரயூவின் பதற்றத்திலும், வேகமான இதயத்துடிப்பிலும், அவளோடு தன்னை இறுக்கியிருந்த விதத்திலும் தெரிந்த தாய்மையில் கண்கள் கரித்தது.

மெல்லிய மலரானவள் கசக்கப்பட்டுவிட்டாளே என்ற வேதனையில் கண்கள் உடைப்பெடுக்க, ஈரத்தை உணர்ந்தவள் அவன் முகத்தை பிரிக்கவிடாது முதுகு குலுங்கியது.  அவன் செய்கையின் காரணம் புரியாவிடினும் அவனுடைய துன்பத்தை போக்கிட, “சஞ்சு, என்னடா?” அழும் குழந்தையிடத்தில் அம்மாவின் கேள்வியாகவே ஒலிக்க அவனுடைய வலி அதிகரித்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.