(Reading time: 17 - 33 minutes)

அவன் முகத்தை பார்த்திடும் முயற்சியோடு, “என்னை பாரு சஞ்சு! என்னாச்சு உனக்கு? சின்ன பிள்ளையாட்டம் என்னதிது சஞ்சு?” என்றவளின் கனிவில் நிமிர...

துப்பட்டாவால் அவன் முகத்தை துடைத்து, கன்னம் தாங்கி, “என்னாச்சு கண்ணா? எதுக்காக இந்த அழுகை?” என்று மீண்டும் கண்ணீர் துடைக்க...

காதலனாக அன்று அவளை காக்கவில்லையே என்ற வருத்தத்தில், “சாரி சரூ! என்னாலதானே உனக்கு இந்த கஷ்டம்?” குரல் கரகரக்க கேட்டவனுக்கு...

அவசரமாக மறுத்து தலையை இடம் வலமாக ஆட்டி, “சொன்னா கேட்கனும்...அழக்கூடாது....அப்படியெல்லா எதுவுமில்ல” என்று சொல்ல...

எந்தவித சமாதானமும் எடுபடாது போக, அவன் ஏதேதோ பிதற்றியபடி இவளிடம் மன்னிப்பு வேண்டுவதை நிறுத்தவில்லை.

மனஅழுத்ததில் ஜெய் தன்னிலை மறந்திருப்பதை புரிந்து, அவனை திசைதிருப்ப முடியாது திணறியவள் ஒரு கட்டத்தில் அவனை அறைந்திருந்தாள்.

அதிர்ச்சியில் சில நொடிகள் உறைந்தவன், பிறகு, “அடி சரூ! இன்னும் நல்லா அடி...நீ அடிச்சே கொன்னா கூட தப்பில்ல.  என்னால தானே உனக்கு இவ்வளவு பிரச்சனை? அடி என்னை அடி” என்று பிதற்றியபடி அவள் கையை இழுத்து அவன் கன்னத்தில் அறைந்து கொண்டான்.

கையை இறுக்கி, பின்னுக்கு இழுத்து என அவனை தடுக்க போராடியும் எந்த பயனுமில்லாமல் போக.... இதழோடு இதழ் சேர்த்து, இடைவிடாது வெளிவந்த வார்த்தைகளையும், அவனுள்ளிருந்த வேதனையையும் உரிந்தெடுத்தாள்.

முதல் சில நொடிகள் கன்னம் தாங்கியிருந்த அவள் கைகளை இழுத்து தன்னை அறைவதை நிறுத்தாது, தன்னிலை மறந்திருந்தவனிடம், நேரம் செல்ல செல்ல மாற்றம் தெரிந்தது.  ஒரு கட்டத்தில் அவள் செயல் அவன் செயலாக மாறியிருந்தது.

சரயூவினுள் ஒளிந்திருக்கும் காதலை அறிந்திருந்தாலும் முதன்முறையாக இன்று அது வெளிபட்டுவிட்ட மகிழ்ச்சியில் மற்றதெல்லாம் மறந்துபோனது. 

அவனிடமிருந்து விலகியவளின் பார்வை நிலம்நோக்க கன்னங்களில் ஏறியிருந்த சிவப்பில் மனம் கிறங்கியது.  உதட்டுச்சாயம் கன்னத்தில் ஒட்டுவது போல் அவளின் கன்னத்து சிவப்பு அவன் இதழிலேறுமோ என்று அறிந்து கொள்ள அவசரமாக குனிந்து சிவந்த கன்னத்தில் முத்தமிட்டான்.  அச்சிவப்பு இதழ்சேராது என புரிந்ததும், அதை பொய்யாக்கிட எண்ணியவன் திரும்ப திரும்ப சோதனையில் இறங்க, வெட்கத்தில் குளித்தவள் அவன் நெஞ்சத்தில் தஞ்சமடைந்தாள். 

மடியில் மனைவியும் மனதில் காதலும் அவளை வென்றுவிட்டதை அறிவுறுத்த...சரயூவை தன்னோடு இறுக்கிகொண்டவனிடத்தில் எல்லையில்லா நிம்மதி பரவியது.  

ரூபினிடம் யஷ்விதாவை பற்றியும் அவள் சொன்னதை பற்றியும் விசாரிக்க சொல்லியிருந்தான். 

அவளை ஒரு மாதமாக பின் தொடர்ந்தும், கைபேசியை ஒட்டு கேட்டும் எந்த பயனுமில்லை.  அவளுடைய எச்செயலும் சந்தேகபடும்படியாக இருக்கவுமில்லை.

அன்று கோயிலில் நடந்ததை மனதில் ஓட்டி பார்த்தவனுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.  இவனை கோபப்படுத்தும் நோக்கத்தோடு அந்த விஷயத்தை சொன்னாளோ? அது மட்டுமல்லாது அவளுடைய பார்வை....அந்த பார்வைக்கு என்ன அர்த்தம்? அதில்தான் எத்தனை ஏக்கம்....அதோடு வேறேதோ இருந்ததே....அது...அது....என்ன? தன்னை ஒரு நிமிடம் தடுமாற செய்ததே!

எவ்வளவு யோசித்தாலும் யஷ்விதாவின் பார்வைக்கான அர்த்தம் புரிபடவில்லை.  அதை அறிந்து கொள்ள மனதிலெழுந்த சிறு ஆர்வத்தில் புது கேள்விகளும் குழப்பங்களும் துளிர்விட்டன.  ஒருவேளை அதற்கும் சரயூவிற்கும் ஏதாவது தொடர்பிருக்குமோ? இல்லையென்றால் திடீரென எப்படி மனைவியும் அவளும் உற்றத் தோழிகளானார்கள்? கூர்க்-கிலிருந்து திரும்பிய பின்னர் எல்லோரையும் தள்ளி நிறுத்திய சரயூ, இவளோடு மட்டும் பேசி பழகினாளே! ஆனால் ஏன் சில மாதங்களாக சரயூவை சந்திக்க வரவில்லை? தன்னை சந்தித்து திருமணத்தை நிறுத்திட சொன்னாளே! அது ஏன்?

சில மணிநேர யோசனைக்கு பிறகு அவனுக்கு தெளிவாகியிருந்தது ஒன்றுதான்.  சரயூ நான்கு வருடங்கள் இவனை பார்க்காது பேசாது தவிர்த்தற்கும், இவர்கள் திருமணத்திற்கு பிறகு அறையில் அடைந்தது கொண்டு இவனிடமிருந்து விலகியிருந்ததற்கும் காரணம் யஷ்விதா!

ஏனெனில் அவள் வீட்டிற்கு வராது போன இந்த சில மாதங்களில் மனைவியிடம் ஏற்பட்டிருந்த அபாரமான மாற்றங்கள் தான்.  இவன் வேதனையை பொறுக்காது அன்று முத்தமிட்டு இவனை வியப்பில் ஆழ்த்தினாளே! தன் அன்பும் காதலும் மெல்ல மெல்ல அவளை மாற்றிக் கொண்டிருப்பதை உணர்ந்தவனுக்கு, அவள் தற்போது ஒளிந்திருக்கும் கூட்டை உடைத்து பழைய சரயூவை முழுமையாக மீட்டெடுப்பது அவனுடைய பெரும் கடமையாகத் தோன்றியது.

ஆகமொத்ததில் அவன் நினைப்பு சரியென்ற பட்சத்தில், தன்னுடைய சுயத்தை முழுதாக தொலைத்திருக்கும் சரயூவின் இந்நிலைக்கு காரணமான யஷ்விதா உயிர் வாழ தகுதியற்றவள்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.