வீட்டை அடைந்ததும் அவனை பார்க்க முடியாமல் வெட்கத்தோடு கீழேயிறங்கியவள் உள்ளே ஓடிவிட தமிழ் சிரிப்போடே பின்னே சென்றான்..இரண்டு மூன்று பெண்குரல்கள் கிட்சனில் கேட்க ஹாலிற்கு வந்தவன் வேண்டுமேன்றே சத்தமாய்,
” நிர்பயா நா ஒரு கேரி பேக் ஊர்ல இருந்து வரும்போது பத்திரமா வச்சுக்கோநு கொடுத்தனே அத கொஞ்சம் எடுத்துதர்றியா உன் பேக்ல தான் இருக்கும்நு நினைக்குறேன்”, என சீரிஸாய் கூற
கேசவன் அவளை ஏறிட ஒன்றும் பேசாமல் எந்த பேக் என்பதே புரியாமல் மாடிக்குச் சென்றவளை பின்னே சென்று இழுத்து கதவோடு சாய்த்து நிறுத்தினான்..சட்டென இழுத்ததில் தடுமாறியவள் அவன் மார்பில் கைவைத்து நிற்க தலையை மட்டும் நிமிர்த்தவேயில்லை..
“என்ன மேடம் ரொம்ப ஹேப்பியா இருக்கீங்க போல??”
ஆம் என்பதாய் தலையசைத்தவள்,”நா கீழே போறேன்ங்க எல்லாரும் தேடுவாங்க..”
“அப்படியா எனக்கு தெரிஞ்சு கல்யாணம் ஆன இரண்டாவது நாள் பொண்ணை புருஷன் மட்டும்தான் தேடுவான் “,என மீசையை முறுக்கி விட்டவாறு கூற நிர்பயாவிற்கு இன்னமும் வெட்கமாகிவிட்டது..அறைவாசலில் நிற்பதால் அவனைமீறிஉள்ளேயும் செல்ல முடியாமல் வெளியேவும் நகர முடியாமல் இன்ப அவஸ்தயாய் இருந்தது பெண்ணவளுக்கு…
நா போகணும் என மெதுவாய் அவனை நிமிர்ந்து பார்க்க,தோளை குலுக்கியவாறு லேசாய் நகர்ந்தவன் போ என்பதாய் தலையசைக்க மெதுவாய் அவனைவிட்டு நகர்ந்தவள் அவனைப் பார்த்தவாறே நிற்க..
“என்ன போகலையா??”
வேகமாய் இரண்டடி அவனை நோக்கி வந்தவள் சட்டென கைப்பற்றி அவனை இழுக்க லேசாய் சாய்ந்தவனின் கன்னத்தில் இதழ்பதித்து ஓடிவிட்டாள்…தமிழுக்கு நடந்ததை இன்னமும் நம்பமுடியவில்லை..கன்னத்தை தடவியவாறே கீழே சென்றான்..
அன்றைய பொழுது முழுவதும் தமிழின் கண்கள் அவளை வண்டாய் வட்டமிட்டுக் கொண்டுதான் இருந்தது..மற்றவர்களின் கேலிப்பார்வை அவர்களை நோட்டமிடுவதை கண்டவள் அவனைவிட்டு விலகி கண்ணாமூச்சிஆடிக் கொண்டிருந்தாள்..
இரவு அனைவருமாய் உறங்கச் செல்ல நிர்பயா மெதுவாய் மாடிக்குச் சென்றாள்..காலையில் தான் அப்படி நடந்து கொண்டது அவளுக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது..
தமிழுக்கு எப்படியிருந்திருக்கும்..நேத்துதான் மனசு இன்னும் பக்குவபடல அதுஇதுநு சொல்லிட்டு இன்னைக்கு நானே..ஆனா இப்பவும் என் மனசுல பயம் அப்படியேதான் இருக்கு..எனக்கே ஒண்ணும் புரில அவரை மட்டும் தப்பு சொல்ல முடியாது..என ஏதேதோ யோசித்தவாறே உள்ளே வந்தவள் வழியில் நின்றவனை கவனியாது அவன்மேல் மோதிக் கொள்ள,
“ஸ்ஸ் ஸாரிங்க..கவனிக்கல..”
“அது பரவால்ல நீ இடிச்சு எனக்கு ஒண்ணும் ப்ரச்சனையில்ல உன் எலும்புக்கு சேதாரம் ஆகலனா சந்தோஷம்தான்..சரி அப்படி எதை பத்தி இப்படி யோசிசுட்டு வர??”
“அது..அது..ஒண்ணுமில்லங்க சும்மாதான்..”
“ம்ம் சரி நிரு நீ போய் ரிபெப்ரெஷ் ஆய்ட்டு வாகொஞ்ச நேரம் பேசிட்டு தூங்கலாம்..”
உடைமாற்றி வந்தவளை ஒன்றும்பேசாமல் தன் மடியில் சாய்த்து கொண்டான்..மென்மையாய் அவள் தலைமுடியை வருடிவாறே அவளை பார்க்க அவளும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்..
“நிரு..”
“ம்ம்”
“காலைல இருக்குற நிரு தான் நிஜமானவ..அந்த சந்தோஷம்தான் அவளுக்கானது..ஆனா நேரம் ஆகஆக ஏன் ஒருமாதிரி குழப்பமா பயத்தோட இருக்க??”
சட்டென எழ எத்தனித்தவளை பிடித்து மீண்டுமாய் சாய்த்து கொண்டவன் இப்படியே பேசு என்றான்..
நா மனசுல நினைச்சத நீங்க எப்படி???என நிறுத்தியவள் மீண்டும் அவளே தொடர்ந்தாள்..
“தெரிலங்க என்ன நினைக்குறேன் என்ன பண்றேன் எனக்கே ஒண்ணும் தெரில..”
“ம்ம் குட் சரி இப்போ நா சொல்றேன் கேட்டுக்குறியா??”
“ம்ம்”
நிரு கல்யாணம்ங்கிறது ஒரு ஆணையும் பெண்ணையும் ஒரே வாழ்க்கை பாதைல அவங்க சுக துக்கம் எல்லாத்தையும் ஷேர் பண்ண வைக்குற ஒரு அழகான விஷயம்..கிட்டதட்ட இதுவும் ப்ரெண்ட்ஷிப் தான்..ஒருவேளை அதோட இறுதிப்படினு கூட சொல்லலாம்..கல்யாணம் ஆன எல்லாருக்கும் அவங்க அவங்க பார்ட்னர்ஸ்தான் பர்ஸ்ட் பெஸ்ட் ப்ரெண்டா இருக்கணும்..
சோ இப்போ உன் ப்ரெண்டை நீ கோபபட்டா அடிக்கலாம் வருத்தப்பட்டா தோள் சாய்ஞ்சு அழலாம் சந்தோஷமா இருந்தா அதை உனக்கு பிடிச்ச விதத்துல வெளிப்படுத்தலாம் உதாரணத்துக்கு காலைல நீ எக்ஸ்பெரஸ் பண்ண மாதிரி..அதுல தப்பா நினைக்கவோ இல்ல பார்ட்னரா இருக்குறவங்க என்ன நினைப்பாங்கனோ கவல பட கூடாது..உன் பெஸ்ட் ப்ரெண்ட் கண்டிப்பா உன்னை தப்பா நினைக்க மாட்டேன் தான..என நிறுத்த நிர்பயா இன்னுமாய் சிறு குழந்தையாய் அவனோடு ஒன்றிக் கொண்டாள்..