(Reading time: 19 - 37 minutes)

37. உன் நேசமதே.. என் சுவாசமாய்..!! - சித்ரா. வெ

love

நீ என் கணவன், நான் உன் மனைவி இப்படி கணவன் மனைவி இருவரும் சொல்லிக் கொள்வது எப்போது? அதீத கோபத்திலும் பாசத்திலும் அந்த உரிமை வெளிப்படும். செல்ல கொஞ்சல்களிலும் அப்படி சில சமயம் சொல்லிக்  கொள்வது உண்டு. மற்றவரிடம் நடக்கும் அறிமுகப்படலத்தின் போதோ, இல்லை தங்கள் உறவு முறையில் உள்ள உரிமையை மற்றவரிடம் வெளிப்படுத்தும் போதோ கூறுவர். ஆனால் கங்காவிற்கு இதுவரை அப்படி சொல்லிக் கொள்ளும் நிலை வந்ததில்லை.

மற்றவர்களுக்கு அவர்கள் உறவை பற்றி தெரிந்து விடக் கூடாது என்று கனகா சொன்னதால் கங்கா அதில் எப்போதும் கவனமாக இருப்பாள். அங்கே வேலை செய்பவர்களுக்கு கங்கா, துஷ்யந்த் உறவு முறையை பற்றி தெரியும். இருந்தும் அதைப்பற்றி யாரிடமும். ஏன் அவர்கள் இருவரிடமே கூட அதைப்பற்றி பேசக் கூடாது என்று உத்தரவு.அதேபோல் வெளி ஆட்களிடமும் கங்காவோ  எப்போதும் சொல்லிக் கொண்டதில்லை. அப்படி ஒரு நிலையும் இதுவரை வந்ததில்லை. மேனேஜர் எப்போதும் எஸ்டேட் பங்களாவிலேயே சுற்றிக் கொண்டிருப்பதால், அனாவசியமாக வெளி ஆட்கள் யாரும் வரமாட்டார்கள். அதேபோல் எஸ்டேட் பங்களாவிலிருந்து எஸ்டேட்டிற்கு செல்லும் பாதை வரைக்குமே இவர்களுக்கு செல்ல அனுமதி உண்டு. அதை தாண்டி எஸ்டேட்டில் வேலை செய்பவர்கள் பார்வையில் இவர்கள் பட்டுவிடக் கூடாதென்று அண்ணாமலை எச்சரித்து இருக்கிறார்.

எதிரிகளுக்கு இப்போதைக்கு இந்த விஷயம் தெரிந்து விடக் கூடாது.. அதனால் இப்படி ஒரு ஏற்பாடு என்று கனகாவும் அண்ணாமலையும் சொல்லி வைத்திருந்ததால், கங்கா அதில் கவனமாக இருந்தாள். ஆனால் தன் கணவனிடமே நான் உன் மனைவி என்பதை சொல்லியிருந்திருக்க வேண்டும் என்ற நிலையில் தான் அவள் இருக்கிறாள் என்பதை அவளே அறிந்திருக்கவில்லை. இந்த மூன்று மாத உறவில் அவனிடம் அன்பையும் அக்கறையும் வெளிப்படுத்தியிருந்தாலும், இன்னும் அவர்களுக்குள் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அன்னியோன்யம் இருந்ததில்லை. முதலில் அவன் முழுமையாக குணம் அடையட்டும் என்பதில் தான் அவளது கவனம் இருந்தது. அதற்காக இயல்பாக ஒரு மனைவியாக அவளுக்கு இருந்த எதிர்பார்ப்புகளை தனக்குள்ள்ளேயே ஒளித்து வைத்திருந்தாள்.

அவனிடம் தினம் தினம் நிறைய பேசியிருக்கிறாள். அவள் குடும்பம், படிப்பு பற்றி சொல்லியிருக்கிறாள்.  ஆனால் அனைத்தும் தன் அப்பா, அம்மா உடன் இருந்த போது நடந்ததைப் பற்றி சொல்லியிருந்தாளே தவிர, அவளின் அவனுடனான திருமணத்திற்கு முன்னதான நிலை குறித்து சொன்னதில்லை. தன் தங்கையின் உடல்நலம் பற்றி மட்டும் தற்போது சொல்லியிருந்தாள். அதுவும் அவளை பார்த்துவிட்டு வர வேண்டும் என்பதற்காக.. அதேபோல் கங்கா பேசுவதை அமைதியாக துஷ்யந்த் கேட்டுக் கொண்டிருப்பானே தவிர, அவள் சொன்ன விஷயங்களை உள்வாங்கிக் கொண்டானா? என்பது கூட அவள் இன்னும் அறியாதது. இதில் நான் உன் மனைவி என்ற உரிமையை அவள் எப்போதும் வாய் வார்த்தையில் சொன்னதில்லை.

துஷ்யந்திற்கு குணமாக குணமாக கங்கா யார் என்ற கேள்வி மனதிற்குள் பெரிதாகி கொண்டே இருந்தது அவனுக்கு.. அவர்களுக்கிடையேயான அந்த உறவு ஒரு கணவன், மனைவி இடையேயான உறவு தான். ஆனால் அது எப்படி? அவள் கழுத்தில் இருக்கும் மஞ்சள் கயிறை பார்க்கும்போது அவள் என் மனைவியா? என்ற கேள்வி அவன் மனதில் எழாமல் இல்லை. ஆனால் அவள் எப்படி என் மனைவியானாள்? என்று தான் அவனுக்கு தெரியாமல் இருந்தது. எங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா? என்று எவ்வளவு யோசித்தாலும் அப்படி ஒரு சம்பவம் நடந்தது அவனது ஞாபகத்திற்கு வரவே இல்லை.

அவனுக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்ததெல்லாம் இப்போது அவன் குணமாகும் நேரத்தில் அவனுக்கு புரிந்து தான் இருந்தது. ஆரம்ப நாட்களில் தனக்கெனவே உடன் இருக்கும் கங்காவை அவன் உணர்ந்தது கூட இல்லை. ஆனால் பிறகு அதையெல்லாம் புரிந்து கொள்ளும் நேரத்தில் தான், “ஒருவேளை கங்காவிடம் நான் ஏதாவது தவறாக நடந்துக் கொண்டு விட்டேனா? அதனால் தான் என்னோடு அவளுக்கு திருமணம் செய்துவிட்டார்களா? என்று கூட யோசித்து, இப்படி கீழ்த்தரமான நிலையிலா நாம் இருந்தோம் என்று வருத்தம் கூட கொண்டிருந்தான். இப்படி எத்தனை யோசித்தும் தங்களுக்கு திருமணம் ஆகியிருக்கும் என்பது போல ஒரு முடிவுக்கு தான் அவனால் வர முடிந்தது.

ஆனால் நடந்தது என்ன? எந்த முறையில் கங்கா அவனோடு இருக்கிறாள்? என்பதை தெரிந்துக் கொள்ள நினைத்தான். அதை கங்காவிடமே வெளிப்படையாக கேட்க  அவனுக்கு தயக்கமாக இருந்தது. கங்கா அவன் அருகில் இருக்கும் போதெல்லாம் அவனுக்கு இப்படிப்பட்ட சிந்தனைகள் தோன்றாது. ஆனால் அவனை விட்டு அவள் தள்ளி இருக்கும் சமயங்களில் அவன் மனதில் அந்த கேள்விகள் தோன்றாமல் இருக்காது.

கங்கா ஒரு தாயாக நின்று அவனை அரவணைத்திருக்கிறாள். தந்தையாக தன் பேச்சால் அவனை வழி நடத்தியிருக்கிறாள். மனைவியாக அவள் கடமைகளை செய்திருக்கிறாள். ஆனால் இன்னும் அவள் ஒரு தோழியாக அவனுக்கு மாறவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.. துஷ்யந்த் முழுமையாக குணமடைந்து விட்டாலும், இன்னும் அவனது சுபாவம் மாறவில்லை. கங்கா பேசிக் கொண்டே இருந்தால் நாள் முழுதும் கேட்டுக் கொண்டிருப்பான். ஆனால் இன்னும் அவன் மனதில் இருப்பதை அவளிடம் பகிர்ந்துக் கொள்ளும் அளவுக்கு வரவில்லை. ஒருவேளை அதற்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படுமோ என்னவோ, ஆனால் அதற்குள் அவர்களுக்குள் பிரிவு வரும் நிலை வரவிருக்கிறதே!!

கங்கா பற்றிய தன் குழப்பத்தை அவளிடம் நேராக கேட்க தயங்கியவன், அதைப்பற்றி தன் மாமாவிடம் கேட்க நினைத்தான். அந்த ஒரு விஷயம் தான் அப்போதைக்கு அண்ணாமலை நினைத்ததை செயலாக்க வைத்தது.  அதில் அவர் தான் வென்றார் என்ற பெருமிதத்தை அவருக்கு கொடுத்தது.

அவன் அண்ணாமலையிடம் பேச நினைத்த அந்த வாரக் கடைசியிலேயே அவர் குன்னூருக்கு வந்தார். கங்கா அந்த நேரம் தன் தங்கையை பார்க்க சென்றிருந்தாள். யமுனா மருத்துவ சிகிச்சைகள் முடிந்து வீட்டுக்கு இரண்டு வாரத்திற்கு முன்பு தான் வந்திருந்தாள். இப்போது அவர்கள் வேறு வீட்டிற்கு குடி பெயர்ந்திருந்தனர். முன்னே இருந்த வீட்டில் இப்போது யாராவது கங்காவை பார்த்தால் தேவையில்லாத கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டி வரும் என்ற காரணத்தினால், கனகா தான் வேறு வீட்டிற்கு செல்ல முடிவெடுத்திருந்தார். அந்த வீட்டுக்கு தான் தற்போது கங்கா சென்றிருந்தாள்.

அதனால் இந்த நேரம் தான் சரியான நேரம் என்று முடிவு செய்து துஷ்யந்த் அண்ணாமலையிடம் பேச வேண்டும் என்று அவர் முன் சென்று நின்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.