(Reading time: 19 - 37 minutes)

ங்காவுக்கும் எனக்கும் எப்போ மாமா கல்யாணம் ஆச்சு..” இப்படித்தான் துஷ்யந்த் அண்ணாமலையை பார்த்துக் கேட்டான்.

அதைக் கேட்டு அண்ணாமலையின் முகம் சுருங்கியது. இப்படி ஒரு நிலை வந்துவிடக் கூடாதென்று தான் இந்த திருமணத்தை நடத்துவது பற்றி மிகவும் அவர் முன்பு யோசித்தார்.

ஆனால் துஷ்யந்தை கண்டிப்பாக குணமாக வேண்டும் என்ற கட்டாயத்தில் தான் இந்த நாடக திருமணத்தை நடத்தினார். இருந்தும் துஷ்யந்த் குணமாகும் நேரம் கங்காவை மனைவியாய் அவன் உணருவதற்கு முன்பே அவளை அவன் வாழ்க்கையை விட்டு விலக்க வேண்டும் என்று அவர் நினைத்திருந்தார்.

இங்கிருந்து சென்னைக்கு செல்ல அவருக்கு மனமே இல்லை. செல்வாவை பற்றி யோசித்து தான், அவர் மேனேஜர் பொறுப்பில் அவனை விட்டுவிட்டு கிளம்பினார். அப்போதும் துஷ்யந்த் குணமாகும் அறிகுறி தெரியும்போதே எனக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அவர் சொல்லியிருந்தார். அதன்பின் நடுவில் ஒருமுறை வந்து போனார். அந்த சமயமும் மேனேஜரிடம் அந்த விஷயத்தில் கவனமாக இருக்க சொல்லி எச்சரித்து சென்றார். ஆனால் மேனேஜர் கொஞ்சம் கவனகுறைவாக இருந்துவிட்டான். அதன்பின் துஷ்யந்திடம் வந்த மாற்றத்தை அவன் கண்டுக்கொண்டு அண்ணாமலைக்கு தெரியப்படுத்திய போது, அவரால் உடனே புறப்பட்டு வர முடியாமல் ஆகிவிட்டது.

ஏனெனில் செல்வாவிற்கு அந்த நேரம் கல்லூரி இறுதி ஆண்டிற்கான தேர்வு ஆரம்பித்திருந்தது. தேர்வு சமயத்தில் அவனால் தொடர்ந்து அலுவலகத்திற்கு செல்ல முடியவில்லை. அப்போது தான் அவர்கள் தொழிலை ஒரு நிலைக்கு கொண்டு வந்திருந்தனர். செல்வா அலுவலக மேனேஜரிடம் அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைத்துவிட்டு தான் வந்தான். இருந்தும் முதலாளி அங்கு இருந்தால் தான் ஒழுங்காக வேலை நடக்கும், அதிலும் அவர்கள் நிலைமை சரியில்லாத சமயத்தில் யாரையும் முழுமையாக நம்ப முடியவில்லை. அதனால் அண்ணாமலையை தினமும் அலுவலகத்திற்கு போக சொல்லியிருந்தான். அதை அண்ணாமலையால் மீற முடியவில்லை.

செல்வா திரும்ப வந்து பொறுப்பேற்றும் கொள்ளும் வரை அவரால் அங்கிருந்து வரமுடியவில்லை. திரும்ப வந்தபோது துஷ்யந்த் பழையபடி கூட இல்லாமல் மிக தெளிவாகவே இருந்தான். அண்ணாமலையும் மேனேஜரும் கூட அவன் இந்த குறுகிய காலத்திற்குள் சரியாகிவிடுவான் என்று எதிர்பார்த்திருக்கவில்லை என்றே சொல்லலாம். இப்போது இப்படி ஒரு கேள்வியோடு வந்து நிற்கிறான்.

“இப்படி கேட்ட வாயை போய் முதலில் கழுவுடா.. அவ உனக்கு பொண்டாட்டியா? நல்லவேளை அதை என்கிட்ட கேட்டியே” என்று அவர் சொன்னதும் துஷ்யந்த் முகம் மாறியது. கங்கா அவன் மனைவி இல்லை என்ற சொல்லே அவனுக்கு கசப்பாக இருந்தது. மனைவி இல்லையென்றால் கங்கா அவனுடன் ஏன் இருக்க வேண்டும் என்ற கேள்வி உதித்தது. அவன் குழப்பத்தில் இருந்தான்.

“என்ன மாமா சொல்றீங்க? கங்கா என் மனைவி இல்லையா?”

“அவ உன் கூட இருந்தா அவ உனக்கு மனைவியா? அவ உனக்கு மனைவி இல்லடா.. அவளை அப்படி சொல்ற அளவுக்கு தகுதி அவளுக்கு இல்ல.. அவளுக்கு பணம் தேவைன்னு தான் அவ உன் கூட இருக்கா.. அவ ஒரு தப்பான தொழில் செய்றவ..” என்று வாய்கூசாமல் பொய் கூறினார். அப்படி சொன்னால் தான் துஷ்யந்த் கங்காவை விட்டு சுலபமாக விலகிவிடுவான் என்று சொன்னார்.

ஆனால் அதைக் கேட்டவனோ, “மாமா..” என்று கத்தியவன், “கங்காவை பத்தி இப்படி தப்பா பேசாதீங்க..” என்று கோபமாக கூறினான்.

“நான் ஒன்னும் தப்பா சொல்லல.. உண்மையை தான் சொல்றேன், கங்கா ஒரு தப்பான தொழில் செய்யற பொண்ணு.. உனக்கு உடம்பு சரியாக நாங்க தான் அந்த பொண்ணுக்கு பணம் கொடுத்து கூட்டிட்டு வந்தோம். அவளோட தங்கச்சி ஆபரேஷன்க்காக பணம் தேவைப்பட்டுதுன்னு உன்கூட அவ இருக்க ஒத்துக்கிட்டா.. இல்லன்னா அவளை மாதிரி பொண்ணுங்க ஒரே இடத்துல இத்தனை நாள் இருக்க மாட்டாங்க..”

“அப்போ அவ கழுத்துல இருக்க தாலி?”

“இந்த மாதிரி பொண்ணுங்கல்லாம் போலீஸ்கிட்ட இருந்து தப்பிச்சிக்கறதுக்காக இப்படி ஒரு தாலியை கழுத்துல போட்டுப்பாங்க.. இல்ல இந்த தொழிலுக்கு வர்றதுக்கு முன்னாடி யாராச்சும் அந்த பொண்ணை ஏமாத்திட்டு போயிருக்கலாம். அந்த தாலியை பார்த்து அதை நீ கட்னதுன்னு நினைச்சிக்கிட்டியா?”

“இல்ல மாமா நீங்க சொல்றதெல்லாம் உண்மையா இருக்காது.. கங்கா அப்படிப்பட்ட பொண்ணு இல்ல..” என்று சொல்லியவன்,

“நீங்க ஏன் இப்படி செஞ்சீங்க? நான் குணமாக இப்படி ஒரு காரியத்தை செய்வீங்களா?” என்று கோபமாக கேட்டான்.

“நம்ம குடும்பத்துக்கு நீ வேணும்டா.. அதுக்காக தான் நான் இப்படியெல்லாம் செஞ்சேன். இங்கப்பாரு அந்த பொண்ணு உனக்கு சரியானதும் போக ரெடியா இருக்கு.. சீக்கிரம் எனக்கு செட்டில் பண்ணி அனுப்புங்கன்னு  சொல்லுது.. நான் ரெண்டு நாளில் அவளை அனுப்பிடறோம்னு சொல்லியிருக்கேன்..” என்றதும்,

“கங்கா என்னை விட்டு சென்று விடுவாளா?” என்று அதிர்ச்சியாக நின்றான்.

“இங்கப்பாரு இந்த 3 மாசத்துல அந்த பொண்ணு மேல உனக்கு ஒரு மாதிரி பாசம் உருவாகியிருக்குன்னு புரியுது. அதுக்காகல்லாம் அவளை கூட வச்சுக்க முடியாது.. சீக்கிரம் அனுப்பிடனும், அங்க ஊர்ல அக்கா, விஜி, செல்வால்லாம் நீ எப்போ வரப் போறன்னு எதிர்பார்த்துட்டு இருக்காங்க.. நீ அங்க வந்து சரிப் பண்றதுக்கு நிறைய இருக்கு.. அப்புறம் உனக்கு ஒரு கல்யாணம் செஞ்சா, உன் பொண்டாட்டி எல்ல பார்த்துக்குவா.. போ கொஞ்சம் ரெஸ்ட் எடு, எதையும் போட்டு குழப்பிக்காத” என்று சாதாரணமாக சொல்லி அவனை குழப்பிவிட்டு சென்றார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.