(Reading time: 19 - 37 minutes)

காலையில் சென்ற கங்கா மீண்டும் எஸ்டேட் பங்களா வரும்போது மாலை நேரம் முடிந்து இரவு நேரம் ஆரம்பித்திருந்தது. யமுனா சீக்கிரத்தில் அவளை விடவில்லை. “என்னோட கொஞ்ச நேரம் இரு க்கா.. எனக்கு நீ வீட்ல இல்லாததது ஒரு மாதிரி இருக்கு..” என்று கெஞ்சிக் கேட்டாள். அதை கங்காவால் மறுக்க முடியவில்லை. ஏற்கனவே யமுனாவிடம் தன் திருமணத்தை மறைத்தது அவளுக்கு குற்ற உணர்வாக இருந்தது. திருமணத்தை மறுத்தாலும் தன் கழுத்தில் இருக்கும் தாலியை அவள் மறைக்கவில்லை. யமுனாவை சந்திக்கும் போதெல்லாம் அவளது கேள்வி பார்வை தன்னை துளைத்தாலும், அதை கண்டும் காணாமல் இருப்பாள். யமுனாவும் கங்காவே ஏதாவது சொல்கிறாளா? என்று பார்ப்பாள். ஆனால் எதுவும் வாய்மொழியாக கேட்க மாட்டாள்.  அதுவரைக்கும் யமுனா எதுவும் தன்னிடம் கேட்டுக் கொள்ளாததை நினைத்து அவள் மனதில் நிம்மதியடைந்துக் கொள்வாள்.

ஆனால் யமுனாவிற்கு விளக்கம் அளிக்கும் கடமை தனக்கு உள்ளது. அவளை தன்னுடனே வேறு வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது துஷ்யந்தும் குணமாகிவிட்டான். சீக்கிரம் அவர்கள் திருமணத்தை துஷ்யந்த் வீட்டாருக்கு தெரிவித்துவிட்டால் அதன்பின் யமுனாவையும் உடன் அழைத்துக் கொள்ளலாம். துஷ்யந்தின் மாமா வேறு வந்திருக்கிறார். அவர் துஷ்யந்த் முழுதும் குணமானது தெரிந்ததால் ஏதாவது முடிவெடுப்பார் என்று கற்பனை கோட்டை கட்டியிருந்தாள்.

கங்கா துஷ்யந்தை பார்க்க அறைக்கு செல்வதற்கு முன்னர் வாணியை தான் பார்க்கச் சென்றாள். பொதுவாக துஷ்யந்தை விட்டு வெளியில் அதிக நேரம் இருக்கமாட்டாள். அப்படி போகும் நேரத்தில் வாணியிடம் தான் அவனை பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு செல்வாள். இன்று அதிக நேரம் ஆகிவிட்டது. துஷ்யந்த் மாமா வேறு இங்கு இருக்கிறார். அதனால் இவள் இன்னும் வீட்டிற்கு வராததை குறித்து ஏதும் கேட்டிருப்பாரோ என்று வாணியிடம் கேட்க சென்றாள். ஆனால் அவரோ துஷ்யந்த் பற்றி தான் கூறினார். காலையிலிருந்து துஷ்யந்த் அறைக்குள்ளேயே அடைந்து கிடப்பதாகவும், எது சாப்பிட கொடுத்தாலும் சாப்பிடவில்லை என்று சொன்னார். அவளிடமும் யமுனாவிடமும் அலைபேசி இல்லை. கனகாவிற்கு அதெல்லாம் உபயோகிக்க தெரியாததால் வாங்கிக் கொள்ளவில்லை. அப்படியும் அதெல்லாம் வாங்கிக் கொள்ளும் ஆசை இருந்தது. இனிமேல் தான் அலைபேசி வாங்க அவர் யோசித்திருந்தார். மூவரிடமும் அலைபேசி இல்லாத காரணத்தால் வாணியால் கங்காவை தொடர்புக் கொள்ள முடியாமல் போய்விட்டது.

வாணியிடம் துஷ்யந்திற்கான இரவு உணவை தயார் செய்ய சொல்லிவிட்டு, அவள் அவனை பார்க்கச் சென்றாள். அறையில் விளக்கு கூட போடப்படாமல் இருந்தது. கங்கா இருட்டில் விளக்கிற்கான சுவிட்சை தேடி விளக்குகளை ஒளிர்க்க விட்டாள். துஷ்யந்தோ அங்கே கட்டிலில் கால்களை தொங்கப் போட்டப்படி அமர்ந்திருந்தான். அவன் அருகில் சென்றவள்,

“என்னப்பா.. காலையிலிருந்து நீங்க சாப்பிடவே இல்லையாமே? உடம்புக்கு ஏதாச்சும் சரி இல்லையா? என்று தொட்டுப் பார்த்தாள். சாதாரணமாக தான் இருந்தது.

“ஏன் இப்படி இருட்டுல உக்கார்ந்திருக்கீங்க..? சாயங்காலம் தியானம் செஞ்சீங்களா?  வாங்க கொஞ்ச நேரம் தோட்டத்துல வாக்கிங் போய்ட்டு வரலாம்.. அப்புறம் உங்களுக்கு பிடிச்ச சப்பாத்தி காலிஃப்ளவர் குருமா செய்ய சொல்லி வாணிம்மாக்கிட்ட  சொல்லி இருக்கேன். சாப்பிட்டு தூங்கலாம்..” என்று அழைக்க, அவனுக்கோ அவன் மாமா சொன்ன, இரண்டு நாளில் கங்கா சென்று விடுவாள் என்ற வாக்கியமே காதில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. கங்கா பேசும் போது அதை நினைத்துக் கொண்டவன், கட்டிலில் உட்கார்ந்திருந்தப்படியே அவனுக்கு அருகில் இருந்தவளை இடுப்போடு அணைத்து வயிற்றில் முகம் புதைத்துக் கொண்டான்.

சில நிமிடங்கள் நீண்ட பிறகும் அவளை விட்டு விலக அவனுக்கு மனமே வரவில்லை. “என்னவாயிற்று இவனுக்கு?” என்று சிந்தித்தவள், அவன் தலையை சிறிது நேரம் கோதியப்படியே நின்றிருந்தாள். பின் அவனை விலக்கியவள்,

“இங்கப்பாருங்க.. நீங்க காலையிலிருந்து சாப்பிடவே இல்லை. நீங்க இப்போதைக்கு எங்கேயும் வர வேண்டாம். நீங்க இங்கேயே இருங்க.. நான் உங்களுக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்து ஊட்டி விட்றேன்..” என்று சொல்லிவிட்டு சென்றவள், சில நிமிடங்களிலேயே அவனுக்கு உணவை கொண்டு வந்தவள், சப்பாத்தியை பிட்டு குருமாவில் தொட்டு ஊட்டினாள். அவனும் மறுக்காமல் வாங்கிக் கொண்டான். முழுமையாக சாப்பிட்டு முடித்ததும், சாப்பிட்ட பாத்திரங்களை கொண்டு சென்று வைத்துவிட்டு வந்தவள், “சரி இப்போ கொஞ்ச நேரம் வாக்கிங் போயிட்டு வரலாமா? இல்லை கொஞ்ச நேரம் தியானம் செய்றீங்களா? அப்போ தான் நல்லா தூக்கம் வரும் என்றப்படி அவன் அருகில் அமர்ந்தாள். ஆனால் அவனுக்கு இப்போது தேவையாக இருந்தது அவளின் அருகாமை தான், அவளை அணைத்தவன், அவளிடம் அவனுக்கு வேண்டியதை எடுத்துக் கொள்ள முயன்றபோது, அவளும் அவனுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தாள்.

அந்த இரவு மட்டுமல்ல, அதன்பின் முழுமையாய் இரண்டு நாட்களும் பகலிலும் அவளை நாடினான். அவன் மன அலைப்புறுதலுக்கு அவளின் அருகாமையும் அவளுடான நெருக்கமும் அவனுக்கு தேவையான ஒன்றாக இருந்தது. அதே சமயம் அவள் எப்போதும் அவனுடன் இருப்பதற்கான வழிகளையும் அவன் மனம் யோசித்தது. கங்கா அவன் ஆயுள் முழுதும் அவனோடு இருக்க வேண்டும் என்று அவனுக்கு தோன்றியது. தன் மாமா சொன்னது போல் கங்காவை தவறாக அவனால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அதேபோல் அவர்களுக்கு திருமணம் ஆனது போலவும் அவனுக்கு நினைவில்லை. மாமா இவனிடம் பொய் சொல்வார் என்று தோன்றவில்லை. ஆனால் இவன் குணமாக கீழ்த்தரமான காரியத்தை செய்ய முடிவெடுத்தவர், ஏன் பொய்யும் சொல்லியிருக்கக் கூடாது என்றும் நினைத்தான்.

கங்கா எங்கேயும் போகக் கூடாது. அவளை எங்கேயும் போக விடமாட்டேன். ஒருவேளை இருவருக்கும் திருமணம் ஆகவில்லையென்றால் இனி திருமணம் செய்துக் கொள்ள வேண்டியது தான் என்று முடிவுக்கு வந்தான். அதைப்பற்றி மாமாவிடம் பேச வேண்டும்.  கங்காவை அவர் அனுப்பிட கூடாது என்று யோசித்து முடிவு செய்தான்.

இத்தனை நாட்களாக இல்லாமல் துஷ்யந்த் இந்த இரண்டு நாட்களாக நடந்துக் கொண்ட விதத்தில் கங்காவோ அவனுக்கு திரும்ப உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டதா? என்று கவலைக் கொண்டாள். அவனை திருமணம் செய்துக் கொண்டு வந்த ஆரம்ப நாட்கள் போல்  இப்போது இரண்டு நாட்களாக அவளை அதிகம் வேறு தேவைக்காக எதிர்பார்க்கிறான். முன்பானால் அவனிடம் அந்த நேரத்தில் முரட்டுத்தனம் வெளிப்படும். ஆனால் இப்போது அவனிடம் அந்த முரட்டுத்தனம் இல்லை. அதற்கு பதிலாக உறக்கத்தில் தாயை தேடும் குழந்தையாக தான் அவனை உணர்ந்தாள். “திரும்ப அவனுக்கு ஏதேனும் பிரச்சனையா? டாக்டர் அவனை பரிசோதிக்க வரும்போது அவரிடம் சொல்ல வேண்டுமென்று குறித்துக் கொண்டாள். இருந்தும் மனைவியாக அவனின் தேவையை  பூர்த்தி செய்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.