(Reading time: 18 - 35 minutes)

எல்லாம் சரியாக நடக்க வேண்டுமே என்ற தவிப்பில் மனதிற்குள் அலை அடித்துக்கொண்டிருக்க ‘லவ் யூ ஹரிஷ்’ என்றாள் அனுராதா ஆழ்ந்து உணர்ந்த தொனியில்.

‘அட அட அட... மேடம் செம மூட்லே இருக்கீங்க போல’

‘ச்சே.. ச்சே.. அதெல்லாம் இல்லை’

‘என்னது இல்லையா?’

‘இல்ல.... இருக்கு ஹரிஷ்...’

‘அடியேய் இருக்கா இல்லையா சரியா சொல்லு. சரி விடு நீ வந்ததும் நானே செக் பண்ணிக்கறேன். நீ ஏர்போர்ட் வந்திட்டியா?’

‘ம்..’

‘குட். நீ கோவைலே இறங்கும் போது நம்ம வண்டி நிக்கும் ஏர்போர்ட்லே. எப்படியும் டிரைவர் உன்னை கண்டு பிடிச்சிடுவார். எதுக்கும் .வண்டி நம்பர் நோட் பண்ணிக்கோ..’ அவன் சொல்லிக்கொண்டே போக

‘ஹரிஷ்... ஹரிஷ்... இரு இரு... கார் வேண்டாம்’

என்னது கார் வேண்டாமா?’

‘இல்ல நாங்க நேரே வீட்டுக்கு வரலை. இங்கே வந்து நாங்க வந்து ஹோட்டல் ரூம் போயிட்டு..’ சத்தியமாய் பொய் சொல்ல வரவில்லை அவளுக்கு.

‘ஹோட்டல் ரூமா? என்ன அனும்மா.. வீட்டுக்கு வர வேண்டியதுதானே?’

‘இல்ல அது வந்து நான்... கரெக்டா.. நான் டைமுக்கு வந்திடுவேன் ஹரிஷ்..’

அனும்மா.. நிஜமா என்ன பண்றே நீ? இல்ல... சரியில்லை...’ என்றான் ஏதோ உறுத்தலில் விழுந்தவனாய். ‘உனக்கு பொய் சொல்ல வராது உண்மையை சொல்லு’

‘இல்ல ஹரிஷ்..’ என்றாள் வார்த்தைகளை தேடி கோர்த்தபடி ‘இங்கே பெரியம்மா, ஷங்கர் அண்ணி எல்லாரும் வராங்க’

‘வாட்?’ அவங்களும் வராங்களா ‘எனக்கு... எனக்கு... புரியலை..’ நிறையவே குழப்பமும், கொஞ்சம் அழுத்தமும் கூடிய தொனியில் சொன்னான் ஹரிஷ் 

‘இல்ல ஹரிஷ்... அவங்க வேறே ஒரு வேலையா வராங்க. நான்.. கரெக்டா... வந்திடுவேன் ஹரிஷ்...’ அவள் படபடக்க சில நொடிகள் அவன் பேசவே இல்லை. அவள் எதையோ மென்று மென்று விழுங்குகிறாள் என்பது நன்றாக புரிந்தது அவனுக்கு.

‘என்ன ஹரிஷ்... பேச மாட்டேங்கிற?

லவ் யூ அனும்மா’ இதை தவிர வேறே எதுவும் சொல்ல தோணலை எனக்கு. உன் மேலே எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு. சீக்கிரம் வந்து சேரு, சரி நான் எப்போ எங்கே கார் அனுப்பணும்னு சொல்லு.

‘சொல்றேன் ஹரிஷ். நான் அப்புறமா கூப்பிடறேன்

;சரிடா .... என்றான் மெல்ல ‘’நான் வெச்சிடவா அனும்மா. பத்திரமா வந்திடு’ கண்டிப்பாய் அவன் குரலில் கொஞ்சம் உற்சாகம் வடிந்திருந்தது.

‘இதற்கே இப்படி என்றால் தாத்தா விஷயத்தை சொன்னால் உடனே ஓடி வருவான். திருமணத்தை தள்ளிப்போடலாம் என்பான். வேண்டாம். அதற்கெல்லாம் தேவை இருக்காது தாத்தா பிழைத்துக்கொள்வார்’ சொல்லிக்கொண்டாள் தனக்குள்ளே.

கோவையில் இறங்கம் போது நேரம் மதியம் இரண்டரை. அங்கிருந்து தாத்தாவின் ஊரை அடையவே மணி ஐந்தை நெருங்கி இருந்தது. மருத்துவமனையில் தாத்தா பல கருவிகளுக்கு நடுவில் நினைவில்லாமல்  படுத்துக்கிடந்தார்.

‘உங்களுக்கெல்லாம் கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா?’ இப்படிதான் ஆரம்பித்தார் மருத்துவர். ஒரு வயசான மனுஷனை இப்படி தனியா விட்டிருக்கீங்க. கிட்டத்தட்ட மூணு மணி நேரம் நினைவில்லாம இருதிருக்கார். யாருமே பார்க்கலை’

டாக்டரின் கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. எல்லாருமே மௌனமாக நிற்க அனுதான் முன்னால் வந்து கேட்டாள்

‘இப்போ எப்படி இருக்கு டாக்டர்’

;நாளைக்கு ஈவ்னிங் வரைக்கும் எதுவும் சொல்ல முடியாது. பார்க்கலாம் எல்லாரும் பக்கத்திலேயே இருங்க. திடீர்னு அவர் யாரையாவது பார்க்கணும்னு நினைக்கலாம் இல்லையா?

‘இல்ல டாக்டர் நான் ஒரு மூணு நாலு மணி நேரம் கொஞ்சம் பக்கத்திலே போயிட்டு வந்திடலாம் இல்லையா? பெரியப்பாவின் மனமெல்லாம் அவள் திருமணத்திலேயே இருந்தது.

‘ஏன் சார்... நீங்க அவர் மகன்தானே. கடைசி நேரத்திலே அவர் கூட இருக்கணும்னு தோணலையா உங்களுக்கு. ச்சே... அப்படி என்ன முக்கியமான வேலை...’ சட்டென ஏனோ கோபம் பொத்துக்கொண்டு வந்தது மருத்துவருக்கு. ‘நான் சொல்றதை சொல்லிட்டேன் அப்புறம் உங்க இஷ்டம்’ போய்விட்டார் அவர்,

மூச்சுக்கு ரொம்பவும் போராடிக்கொண்டிருந்தார் தாத்தா. பார்க்கும் போதே உயிர் வரை வலி பரவியது அனுராதாவுக்கு. அவள் தந்தை அவளை விட்டு போன காலங்களில் பல நாட்கள் தாத்தாவின் மடி தந்தை மடி ஆகி இருக்கிறது.

ஏதேதோ நினைவுகளில் அவருக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறையில் அப்படியே அமர்ந்துவிட்டாள் அனுராதா.

‘என்னம்மா பண்றது இப்போ?’ தொற்றுப்போனவராய் மகளை பார்த்தார் பெரியப்பா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.