(Reading time: 18 - 35 minutes)

தொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 15 - வத்ஸலா

Kannathil muthamondru

ங்கே ஹரிஷின் வீடு கல்யாண களையில் ஜொலித்துக்கொண்டிருந்தது. நாளை காலையில் திருமணம்.

சமூக வலைத்தளங்கள், தினசரிகள், டி.வி என எல்லாவற்றிலும் இவர்கள் திருமணம் பற்றிய செய்திகள் திரும்ப திரும்ப வந்துக்கொண்டிருந்தன. அலங்கரிக்க பட்ட அவன் வீடு முதற்கொண்டு எல்லாம் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு எல்லாவற்றிலும் வலம் வந்துக்கொண்டிருந்தன.

தனது அறையில் கண்ணாடி முன்னால் நின்றிருந்தான் ஹரிஷ். வீடு என்ன அவன் முகத்திலும் கூட கல்யாண களை ஒட்டிக்கொண்டுதான் இருந்தது. இருப்பினும் ஏதேதோ எண்ண ஓட்டங்கள் மனதில்.

‘சித்தப்பா’ ஓடி வந்து அவன் தோளில் தொற்றிக்கொண்டது குழந்தை அனுராதா .

பெண் பிள்ளைகள் பிறக்கும் போதே புத்திசாலிகளாக பிறக்கிறார்களோ? அவன் முகத்தில் இருந்த குழப்ப ரேகைகளை சரியாக படித்தது குழந்தை.

‘நீ கவலையா இருக்கியா சித்தப்பா?’

‘கவலை எல்லாம் இல்லடா. நாளைக்கு சித்தப்பாக்கு கல்யாணம் இல்ல. அது நல்லபடியா நடக்கணும்னு கொஞ்சம் டென்ஷன். அவ்வளவுதான்’ அவன் சொல்லி முடிக்க கலகலவென சிரித்தது குழந்தை.

‘கல்யாணத்துக்கு போய் யாரும் டென்ஷன் ஆவாங்களா? நீ சும்மா தாலி கட்டணும் அவ்வளவுதான். அதெல்லாம் நீ கரெக்டா கட்டிடுவே சித்தப்பா’ விழிகளை சுருக்கி விரித்து அது சொன்ன விதத்தில் சிரித்தே விட்டான் ஹரிஷ்.

அதன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு கேட்டான் ‘உனக்கு தாலி எல்லாம் தெரியுமா? வெரி குட். வெரி குட்? நான் கண்டிப்பா கட்டிடுவேனாடா?’

‘அதெல்லாம் கட்டிடுவே சித்தப்பா.’ சொல்லியபடியே அவன் கன்னத்தில் முத்தமிட்டது குழந்தை அனுராதக்களின் முத்தங்களும் வார்த்தைகளும் பொய்ப்பதில்லை என்று புதியாய் ஒரு நம்பிக்கை வந்தது அவன் மனதில்.

தே நேரத்தில் அங்கே அனுராதாவின் வீட்டில்

வந்தது அந்த அழைப்பு. அது தாத்தாவின் ஊரிலிருந்து. அவருக்கு உடல் நிலை சரியில்லை என்றும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருக்கிறார் என்ற செய்தியுடன்.

கைபேசியை கையில் வைத்துக்கொண்டு அப்படியே அமர்ந்துவிட்டிருந்தார் பெரியப்பா. தாத்தா வயதானவர்தான் அவருக்கு எப்போது வேண்டுமானாலும் என்னவும் நடக்கலாம் என்பது தெரிந்த விஷயம்தான் என்றாலும் கொஞ்சம் தடுமாறித்தான் போனார் பெரியப்பா.

சோபாவில் சிலையாய் அமர்ந்து விட்டவரை சற்றே உலுக்கினாள் அனுராதா ‘என்னாச்சு பெரியப்பா?’

‘தாத்தாக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்லையாம் ஹாஸ்பிடல்லே அட்மிட் பண்ணி இருக்காங்களாம் அனு’ அவர் குரலிலேயே ஒரு நடுக்கம் தெரிந்தது எந்த வயதானாலும் தந்தை என்பதும் அவர் உடன் இருக்கிறார் எனும் உணர்வும் மிகப்பெரிய பலம்தானோ?

அங்கேதான் இருந்தனர் குடும்பத்தில் இருந்த மற்றவர்களும். சடக்கென ஒரு இறுக்கமான சூழ்நிலை வந்து ஒட்டிக்கொண்டது. எல்லார் முகத்திலும் கொஞ்சம் கலவரம். ஷங்கருக்கும் தாத்தா என்றால் ஒரு பாசம் உண்டுதான்.

‘நாளை திருமணத்தை வைத்துக்கொண்டு இப்போது என்ன செய்ய?’ மிகப்பெரிய குழப்பத்தில் விழுந்தார் பெரியப்பா.

தாத்தாவுக்கு ஒரே மகனாக இப்போது இருப்பது இவர் மட்டுமே. இந்த நிலையில் அவர் அருகில் இருந்தே ஆவது இவரது மிகப்பெரிய கடமை அல்லவா? அதே நேரத்தில் அனுராதாவின் திருமணம்?

அங்கே சுவாமிநாதன் எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டாரே? அதுவும் இரண்டு மூன்று முறை சில ஆலோசனைகளுக்காக பெரியப்பா கோவை சென்று வந்ததை தவிர இவர்களிடமிருந்து எந்த விதமான பெரிய பங்களிப்பும் இல்லமல் எல்லா ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார். இப்போது இந்த திருமணம் நின்று போவது என்பது அவருக்கு மிகப்பெரிய கௌரவ குறைச்சலாக போகாதா? யோசனை மேல் யோசனை பெரியப்பாவுக்கு.

‘என்ன பெரியப்பா அப்படியே உட்கார்ந்துடீங்க. வாங்க பெரியப்பா தாத்தாவை பார்க்க போகலாம்’ அவசரமாக சொன்னாள் அனுராதா.

‘நாளைக்கு உனக்கு கல்யாணம்டா’ என்றார் பெரியப்பா. சற்றே சுதாரித்திருந்தார்

நியாயப்படி இன்று மதிய விமானத்தில் அவர்கள் கோவை கிளம்பி இருக்க வேண்டும். நேற்றே கிளம்பி இருக்கலாம். நேற்று நாள் சரியில்லை என்றார்கள். அதனால் இன்று வரை தள்ளிப்போடப்பட்டது பயணம். திருமணம் முடிந்தே வரவேற்பு என சுவாமிநாதன் திட்டமிட்டிருந்த படியால் இன்று மதியம் என்றால் சரியான நேரத்துக்கு போய் விடலாம் என்ற எண்ணம் இருந்தது.

‘அதுக்கு முன்னாடி தாத்தா முக்கியம் பெரியப்பா. எப்படியும் இன்னைக்கு மத்தியானம் ஃபளைட்லே டிக்கெட் இருக்கு. நாம ஏர்போர்ட்லேர்ந்து நேரே தாத்தாவை பார்க்க போயிடலாம். அங்கிருந்து ரெண்டு மணி நேரம்தானே கரெக்டா டைமுக்கு போயிடலாம்’

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.