(Reading time: 18 - 35 minutes)

‘என்னமா விளையாடறியா இன்னைக்கு ஈவினிங் மெஹெந்தி ஃபங்க்ஷன் எல்லாம் இருக்குமா. நீ கொஞ்சம் முன்னாடியே போக வேண்டாமா? இது உன்னோட கல்யாணம்மா.

‘தெரியும் பெரியப்பா’ என்றாள் மெதுவாக ‘அங்கே ஹரிஷ் எனக்காக தவிச்சிட்டு இருப்பான். அதுவும் தெரியும். ஆனா அதுக்கு முன்னாடி நான் ஒரு தடவை தாத்தாவை பார்க்கணும். அங்கே போயிட்டா அதுக்கு அப்புறம் என் மாமனார் என்னை இங்கே எல்லாம் வர விடுவாரான்னு தெரியலை.’ கண்கள் கலங்க வார்த்தைகள் தடுமாற சொன்னாள் அனுராதா.

இப்போது பெரியப்பா கண்களிலும் கொஞ்சமாய் நீர் சேர்ந்தது’

‘அதெல்லாம் ஹரிஷ் கூட்டிட்டு வருவான் உன்னை. அவன் எல்லாத்தையும் பார்த்துப்பான்மா’ அவளை சமாதான படுத்தும் விதமாக.

அதெல்லாம் இருக்கட்டும் பெரியப்பா. இருந்தாலும் நான் ஒரு தடவை தாத்தாவை பார்த்திட்டு போயிடறேன்’ விடவில்லை அனுராதா.

‘அனு நான் ஒண்ணு சொல்றேன் புரிஞ்சிப்பியா?’ அனுராதா சொல்வதை ஏற்றுக்கொள்ள மனமே இல்லை பெரியப்பாவுக்கு.

‘சொல்லுங்க பெரியப்பா’

தாத்தாக்கு ரொம்ப வயசாச்சு. எப்போ வேணும்னாலும் என்ன வேணும்னாலும் ஆகலாம். நாம அங்கே போற நேரம்...தாத்தாவுக்கு ஏதாவதுன்னா உன் கல்யாணம் அப்புறம்... அதானலே நான் உன்னை ஹரிஷ் வீட்டிலே விட்டுட்டு...’

‘பெரியப்பா...’ அவர் முடிப்பதற்குள்ளேயே உள்ளே புகுந்தாள் அனுராதா. ‘அதெல்லாம் தாத்தாக்கு ஒண்ணும் ஆகாது. இன்னும் ரொம்ப நாள் நல்லா இருப்பார். ப்ளீஸ்  பெரியப்பா’ அவள் கெஞ்சலுக்கு நிஜமாகவே பதில் சொல்ல தெரியவில்லை பெரியப்பாவுக்கு.’

‘சரி நீ முதல்லே ஹரிஷுக்கு போன் பண்ணு’ சொன்னார் பெரியவர். செய்து தொலைத்திருக்கலாம் அவள் செய்யவில்லை.

‘வேண்டாம் பெரியப்பா. இப்போ அவனையும் குழப்ப வேண்டாம் விஷயம் அவன் ரொம்ப சந்தோஷமா இருக்கான். அதை கெடுக்க வேண்டாம். அதுக்கு மேலே  அவங்க வீட்டுக்கு தெரிஞ்சா எல்லாரும் டென்ஷன் ஆவாங்க. அங்கே போயிட்டு நான் சொல்லிக்கறேன்’

அதற்குள் இங்கே தனது மடிக்கணியை நோண்டிக்கொண்டிருந்தவன் சட்டென நிமிர்ந்தான்.

‘நீங்க டிக்கெட் புக் பண்ணி இருக்கிற ஃபளைட்லேயே டிக்கெட் இருந்தது புக் பண்ணிட்டேன்பா’ என்றான் ஒரு முடிவு எடுத்தவனாக ‘எல்லாருமே போய் தாத்தாவை பார்க்கலாம்’ ‘இத்தனை நாள்தான் நாம தாத்தாவை தனியா விட்டுட்டோம். இப்போ கடைசி நேரத்திலேயாவது கூட இருப்போம்’ சொல்வதை உணர்ந்தே சொன்னான் ஷங்கர்.

அவன் அப்படி சொன்னதில் லோசனாவின் முகத்தில் நிறையவே குற்ற உணர்வு. அதற்குள் மறுபடியும் இடை புகுந்திருந்தாள் அனுராதா

‘கடைசி நேரம்னு சொல்லாதே ஷங்கர். அதெல்லாம் நாம முடிவு பண்றது இல்லை. தாத்தா இன்னும் ரொம்ப நாள் நல்லா இருப்பார்’

அடுத்த ஒரு மணி நேரத்தில் எல்லாருமே கிளம்பி இருந்தனர் கோவையை நோக்கி. தாத்தாவை ஒரு முறை பார்த்துவிட்டு அனுராதாவை பெரியப்பா ஹரிஷ் வீட்டுக்கு கொண்டு விடுவதாக திட்டம்.

டேக்ஸியில் விமான நிலையம் நோக்கி பயணித்துகொண்டிருந்தனர் அனைவரும். யாருமே ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. இப்போது அனுராதாவின் மனதின் ஒரு புரத்தில் தாத்தா இருந்தார் என்றால் மறுபுரத்தில் ஹரிஷ். தாத்தா பற்றிய போன் வருவதற்கு சற்று முன்தான் அவளுடன் பேசி இருந்தான் அவன்.

‘கிளம்பிட்டியாடி அனும்மா?’

‘இல்ல இப்போதான் எல்லாம் எடுத்து வெச்சிட்டிருக்கேன்?’

‘என்ன எடுத்து வைக்குற. எதுவும் வேண்டாம். நீ மட்டும் வாடி போதும். எல்லாத்தையும் நான் கொடுக்கிறேன்’

‘என்ன கொடுக்க போறே நீ?’

‘நீ கேக்குறது எல்லாத்தையும். என்னையும் சேர்த்து’  

‘ஆஹான்... அப்படி எதையும் கேட்குற ஐடியா.. எனக்கில்லை..’ இவள் சொல்ல

‘அப்படியா பார்க்கலாம் பார்க்கலாம்’ அவன் சிரிக்க அந்த நொடியில் சந்தோஷ ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்த இருவரும் அடுத்த சில நிமிடங்களில் வர இருந்த இந்த செய்தி பற்றி அறிந்திருக்கவில்லை கண்களை மூடி அமர்ந்திருந்த அனுராதாவின்  மனம் இதையெல்லாம் அசை போட்டுக்கொண்டிருக்க அவளையே பார்த்துக்கொண்டிருந்தாள் கீதா.

அவளை பார்க்கும் போது நிஜமாகவே பாவமாக இருந்தது  கீதாவுக்கு. பாசத்துக்கும், காதலுக்கும் இடையில் போராடிக்கொண்டிருக்கும் அவள் மனது என்று தோன்றியது அவளுக்கு. அவள் மனதில் யாருமறியாமல், தன்னலமில்லா ஒரு வேண்டுதல்.

இறைவா நான் எப்போதாவது ஏதாவது புண்ணியம் செய்து வைத்திருந்தால் அதை எடுத்துக்கொண்டு இவர்கள் திருமணத்தை நடத்திவிடு’

விமான நிலையத்தை அடைந்தவுடன் மறுபடியும் ஹரிஷிடமிருந்து அழைப்பு. ‘என்ன செய்ய? இப்போது அவனிடம் என்ன சொல்ல கொஞ்சம் குழம்பி தவித்து மற்றவர்களிடமிருந்து சற்றே விலகி சென்று பின்னர் அழைப்பை ஏற்றாள் அவள்.

‘லவ் யூ அனும்மா...’ என்றான் உற்சாகமாய்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.