(Reading time: 11 - 22 minutes)

அமேலியா - 45 - சிவாஜிதாசன்

Ameliya

திசயம் வாழ்க்கையில் ஏதோ ஒரு நாளில் திடீரென நடைபெறும் நேரத்தில் மனிதன் அதிர்ச்சியில் சிலையாகிறான். வார்த்தைகளால் விவரிக்க முடியாத அந்த அதிசயம் மௌனத்திலும் பயத்திலும் கலந்துவிடும். யோசிக்க முடியாது; பேச முடியாது. இயற்கை, அதிசயத்தை காண்பவரை கை கட்டி வேடிக்கை பார்க்க வைக்கும்.

தன்னை அத்தனை பேர் கைதட்டி வரவேற்றது அமேலியாவிற்கு அதிசயமாகத்தான் இருந்தது. அவள் பயந்தாள்; கை கால்கள் நடுங்கின; இதயத்துடிப்பு தாறுமாறாக எகிறியது. ஆடவர் பெண்டிர் என ஏராளமானோர் இருக்கிறார்களே! எதற்காக இவர்கள் கை தட்டுகிறார்கள்? நான் அப்படி என்ன சாதனை புரிந்துவிட்டேன்?

அமேலியாவிற்கு மயக்கமே வந்தது. அவளது நினைவுகள் சற்று பின்னோக்கி நகர்ந்தன. கடந்த காலங்களை நினைக்க மட்டுமே முடியும், மாற்ற முடியாது. எதிர்காலத்தை திட்டமிடலாம். நினைத்தது நடப்பது சாத்தியக்குறைவே. அப்படியென்றால், நிகழ்காலத்தில் என்ன செய்ய முடியும். இறந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் ஒரு சேர சிந்திப்பதே நிகழ்கால தத்துவம்.

கார் ஷெட் கதவைத் திறந்துகொண்டு "அமேலியா! அமேலியா!"  என்றழைத்தபடியே படபடப்பாக வந்தான் வசந்த். அவனது படபடப்பு அமேலியாவை பயத்திற்குள்ளாக்கியது.

"இந்த டிரஸ்ஸை போட்டுக்க" என்று அமேலியாவிடம் ஆடையை திணித்தான் வசந்த். ஜெஸிகாவின் ஆடைகளிலேயே பார்ப்பதற்கு சுமாராக இருந்த ஆடை அது. ஆடையை பிடித்தபடி திருதிருவென விழித்தாள் அமேலியா.

"ஜெஸிகா இங்க வா"

பதட்டத்தோடும் பரபரப்போடும் ஜெஸிகா ஓடி வந்தாள்.

"அவளுக்கு டிரஸ் போட்டுவிடு சீக்கிரம்"

"நீ வம்பை விலை கொடுத்து வாங்குற வசந்த்"

"அப்படியா? கிலோ எவ்வளவு?" என்ற ஜானை ஜெஸிகா கண்டுகொள்ளவில்லை

"வேற வழியில்லை ஜெஸ்ஸி"

"இதனால என்ன பாதிப்பு வரும்னு யோசிச்சு பாத்தியா?"

"யோசிக்கிறதுக்கு நேரமில்லை. நான் டைரக்டர் ஆகணும். என் கனவை நனவாக்கணும். இப்போ அமேலியா அங்க போகலன்னா மொத்தமும் வேஸ்ட் ஆகிடும்"

அனல் மூச்சையும் கோபப் பார்வையும் வசந்தின் மேல் வீசிவிட்டு கார் ஷெட்டிற்குள் நுழைந்து கதவை சாத்தினாள் ஜெஸிகா.

"ஜான்"

"சொல்லு வசந்த்"

"நாம சரியா தான் செய்றோமா?"

"நாம எங்க செய்றோம்? கடவுள் தானே செய்ய வைக்கிறார். ஜெஸிகா கிட்ட தைரியசாலி மாதிரி பேசின"

"அவகிட்ட அப்படி பேசுனா தான் சரியா இருக்கும். இல்லன்னா குழப்பி விட்டுடுவா. நீ ஏதாவது எனக்கு ஆறுதல் சொல்லு"

"இங்க இருந்து போலீஸ் ஸ்டேஷன் ஐம்பது கிலோமீட்டர் தொலைவுல இருக்கு. நாம மாட்டிக்கிட்டாலும் போலீஸ் வர லேட் ஆகும்"

"உன்கிட்ட போய் அட்வைஸ் கேட்டேன் பாரு" என தலையில்

அடித்துக்கொண்டான் வசந்த்.

கதவைத் திறந்து ஜெஸிகா முன்னால் வர அமேலியா பின்னால் வந்தாள். விளக்குகளின் வெளிச்சம் அமேலியாவை அழகு தேவதையாய் மிகைப்படுத்தி காட்டியது. வசந்த் சில நொடிகள் வாயடைத்துப் போனான்.

"வசந்த் நீ போய் அமேலியாவை எல்லோருக்கும் அறிமுகப்படுத்தி வை. கடலுக்கு அடியில எனக்கொரு வேலையிருக்கு. நான் போயிட்டு வரேன்"

"கொன்னுடுவேன். நிஜ அமேலியா இன்னும் பத்து நிமிசத்தில இங்க இருப்பான்னு என்னை மாட்டி விட்டது நீ தானே. ஒழுங்கா என்கூட வா" என்று ஜானை இழுத்துக்கொண்டு வசந்த் சென்றான்

ஜெஸிகா மெல்ல நழுவினாள்.

"ஜெஸ்ஸி நீ எங்க போற?"

"ரெஸ்ட் ரூமுக்கு?"

"வா ஜெஸ்ஸி, நாம ஜெயில்ல போய் ரெஸ்ட் எடுக்கலாம்" என்றான் ஜான்.

"நீ இப்படியே பேசிட்டு இருந்தன்னா வாயை ஒடச்சிடுவேன் பாத்துக்க" 

வீட்டின் கதவைத் திறந்துகொண்டு அமேலியாவை முன்னே அனுப்பி அவர்கள் பின்னே வந்தனர்.

நடந்ததையெல்லாம் நினைவுக் கூட்டினுள் திரையில் பார்த்தாள் அமேலியா. இன்னும் கைதட்டல் ஓயவில்லை. அவர்களை நோக்கி புன்னகை புரிந்தாள் அமேலியா.  

அவர்கள் எதிரே மாடல் பெண், அவள் பின்னால் அமேலியா வரைந்த ஓவியம். அவற்றையெல்லாம் வைத்து ஓவியத்திற்காக தான் இந்த கைதட்டல் என ஓரளவு ஊகித்துக் கொண்டாள் அமேலியா. அவள் புன்னகை சந்தோசமாக மாறியது.  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.