(Reading time: 11 - 22 minutes)

"இட்ஸ் டூ பேட். காதலை வற்புறுத்தி உருவாக்கக்கூடாது வசந்த். அது தானா உணர வேண்டிய விஷயம்"

வசந்தின் டென்ஷன் பன்மடங்கு எகிறியது. பார்வையால் ஜானை எச்சரித்தான்.

"முதன் முதலா என்னுடைய ஓவியத்துக்கு அங்கீகாரம் கிடைச்சிருக்குன்னு நினைக்குறேன். சந்தோசமா இருக்கு. என்னுடைய வாழ்க்கையில பல திருப்பங்களை சந்திச்சிட்டு வரேன். இது எங்க போய் முடியும்னு தெரியல. ஆனா இந்த பயணம் தொடரணும்னு ஆசைப்படுறேன்"

இவ்வளவு பெருசா சொல்லுறாளே என்னவா இருக்கும் என ஜான் தலையை சொறிந்தபடியே யோசித்தான்.

"என்ன ஜான் அமைதியா இருக்கீங்க? அவங்க என்ன சொல்லுறாங்க?" 

"அதை நான் எப்படி சொல்லுவேன்"

"பரவாயில்லை சொல்லுங்க"

"உங்க அழகுக்கும் திறமைக்கும் ஜானை போல அழகான பையனை காதலிக்காம அந்த வழுக்கை தலையை காதலிச்சு உங்க வாழ்க்கையில வழுக்கி விழுந்துட்டீங்களே. அதை நினைச்சு அவங்க ரொம்ப வருத்தப்படுறாங்களாம்"

"ஏன் பொய் சொல்லுறீங்க ஜான்? அவங்க அப்படி சொல்லியிருக்க மாட்டாங்க. உங்களுக்கு காதலி அமையாததுக்கு காரணம் நீங்க தான் ஜான். உங்களுடைய வக்கிர புத்தி"

"மிஸ் அமேலியா! ஷூட்டிங் முடியுற வரைக்கும் நீங்க எங்க கூட தான் இருக்கணும். வசந்த் உங்க காதலிக்கு புரிய வைங்க"

"மேடம் அவங்க கிளம்பியாகணும்"

"ஷூட்டிங் முடிஞ்ச அப்புறம் உங்க ரெண்டு பேருக்கும் விருந்து இருக்கு வசந்த். அந்த விருந்தை நீங்க எதிர்பாத்திருக்க மாட்டீங்க" என சொன்ன மாடல் பெண் விடைபெற்று கிளம்பினாள்.

நடந்ததையெல்லாம் இரவு நேரத்தில் சிந்தித்துக்கொண்டிருந்தாள் அமேலியா. இன்னும் அவளால் நம்ப முடியவில்லை. பெரிய சாதனை செய்து முடித்த திருப்தியோடு வெண்ணிலாவை நோக்கிக்கொண்டிருந்தாள். தனது ஓவியத்துக்கு கிடைத்த முதல் பாராட்டு அவளை மகிழ்ச்சி கடலில் தத்தளிக்க வைத்தது.

"எதற்காக இன்னும் தூங்காமல் ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறாய்? படிப்பில் கவனம் செலுத்து. ஓவியத்தால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை. உன்னோடு சேர்த்து எங்கள் தூக்கமும் தொலைகிறது" என அவளது தந்தை யூசுப் கடிந்து கொண்டதை அவள் நினைத்துப் பார்த்தாள். சில நேரங்களில் கோபத்தில் அவளை அடிப்பது, அவள் வரைந்த ஓவியங்களை கிழித்தெறிவது என அவள் தந்தை நடந்து கொண்டது அவளுக்கு கசப்பை உண்டாக்கியது.

முதன் முதலாக அவள் வரைந்த ஓவியம் ஒட்டகம். அதற்கு முன்னாலும் அவள் ஏதேனும் மிருகத்தை வரைந்திருக்கலாம் அல்லது பூக்கள், பட்டாம்பூச்சி என வரைந்திருக்கலாம். அவளுக்கு தெரிந்தவரையில் ஒட்டகத்தை தான் முதன்முதலாய் வரைந்ததாய் ஞாபகம். அந்த ஓவியத்தை மற்ற பிள்ளைகளிடத்தில் காட்டியபோது ஏளனம் செய்யப்பட்டாள். "இதுவா ஓவியம்? இது ஒட்டகமா?" என அவளை கேலி செய்தனர்.

அதன் பின் அவள் வரைந்த ஓவியத்தை மற்றவர்களிடம் காட்டி எந்த கருத்தையும் பெற விரும்பவில்லை. ஆனால், இன்று அதை எப்படி சொல்லுவது!? வார்த்தைகளால் விவரிக்கக்கூடிய சந்தோசமா அது?!

"அமேலியா"

திரும்பிப் பார்த்தாள்.

"இன்னும் தூங்காம இருக்க?" என்றபடி அவளை நெருங்கினான் வசந்த்.

அமேலியா சில அடிகள் விலகினாள்.

"இந்த குளிர்ல எப்படி நிக்குற? உடம்பெல்லாம் நடுங்குது"

அமேலியா புன்னகை செய்தாள். நிலவொளியில் வசந்தின் முகம் சரியாக புலப்படவில்லையென்றாலும் தன்னருகில் நின்றது அமேலியாவின் மனதில்  மயக்கத்தை உண்டாக்கியது.

"மணி பதினொன்னு ஆச்சு .வா" என்று அழைத்தான். அமேலியாவால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவளது கையைப் பிடித்து அழைத்து சென்றான் வசந்த். கார் ஷெட்டில் தான் அடைப்பான் என்று எண்ணியவள் வீட்டினுள் அழைத்து சென்றதால் ஆச்சர்யமடைந்தாள். ஜெஸிகா தங்கியிருக்கும் அறைக்கு அடுத்த அறையில் அமேலியாவிற்கு ஏற்பாடு செய்திருந்தான் வசந்த்.

"இந்த ரூம்ல தங்கிக்க"

காற்றோட்டமுள்ள அறை. ஜன்னலின் இடைவெளியில் மரங்களின் மேல் நிலவு பிரகாசமாய் ஒளி வீசிக்கொண்டிருந்தது.  

அமேலியாவை அறையில் விட்டுவிட்டு கதவை சாத்தினான் வசந்த். கதவு முழுதாக அடைபடும் முன் அவர்களின் விழிகள் சில நொடிகள் பேசிக்கொண்டன.  

வசந்திற்கு உறக்கம் வரவில்லை. வீட்டிற்குள்ளேயே சிறிது நேரம் நடந்தான். ஜானும் ஜெஸிகாவும் வெவ்வேறு அறையில் உறங்கிக்கொண்டிருந்தனர். சமையலறையை நோக்கி சென்றான் வசந்த். சிறிது நேரத்தில் சூடாக தனக்கென காபியை தயார் செய்தவன் காபி கப்போடு வீட்டை விட்டு வெளியே வந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.