(Reading time: 11 - 22 minutes)

'முன்னாடி போ' என்பது போல் சைகை காட்டினான் வசந்த். தயக்கத்தோடு முன்னே சென்றாள். மாடல் பெண் அமேலியாவை மரியாதையோடு அணைத்து சந்தோசத்தை வெளிப்படுத்தினாள். பின்னர், இரவு உணவு அடுக்கிவைக்கப்பட்டிருந்த மேஜையின் அருகில் போடப்பட்டிருந்த நாற்காலியில் எதிர் எதிரே அமர்ந்தார்கள் மாடல் பெண்ணும் அமேலியாவும்.

"உங்க ஓவியம் போலவே நீங்களும் அழகா இருக்கீங்க" என்றாள் மாடல் பெண்.

அமேலியாவிற்கு புரியவில்லையென்றாலும் புன்னகை புரிந்தாள்.  

"நீங்க எப்போ இருந்து ஓவியம் வரையுறீங்க?"

"அவங்களுக்கு இங்கிலிஷ் தெரியாது" என்றான் ஜான்.

"இங்கிலிஷ் தெரியாதா?" என ஆச்சர்யத்தோடு கண்களை அகல விரித்தாள் மாடல் பெண். ஏன் என்றும் வினவினாள்.

"அதற்கு பதிலை வசந்த் சொல்லுவான்" என்றான் ஜான்.

மாடல் பெண்ணின் பார்வை வசந்தின் மேல் திரும்பியது.

"அது வந்து... அவங்க சின்ன வயசுல இருந்து வறுமையில் வளர்ந்தாங்க"

"இவங்க எந்த நாட்டை சேர்ந்தவங்க?"

அந்த கேள்வியால் வசந்த் உண்மையில் திணறித்தான் போனான்.

"அவங்க இந்தியா. வசந்தோட சொந்தகாரங்க. அது மட்டுமில்லாம வசந்தோட உயிருக்கு உயிரான காதலி"

"அப்படியா?" என ஆச்சர்யமடைந்தாள் மாடல் பெண்.

ஜெஸிகா வசந்தின் காதில் மெதுவாக கிசுகிசுத்தாள். "ஜான் உன்னை பயங்கரமான சிக்கல்ல மாட்டி விடுறான்னு தோணுது"

"இன்னொரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டனே. அமேலியாவும் ஜெஸிகாவும் சின்ன வயசுல இருந்தே அப்படியொரு பிரண்ட்ஷிப்"

"அப்படியா?"

ஜெஸிகா ஜானை அதிர்ச்சியோடு முறைத்தாள்.

"இதுல எனக்கும் அமேலியாவுக்கும் தான் எந்த சம்மந்தமும் இல்லை. இவங்க ரெண்டு பேரையும் கூட இரண்டு வாரம் முன்னாடி தான் தெரியும்"

"இவங்க முகத்தை பார்த்தா இந்தியா மாதிரி தெரியலையே" என்றாள் மாடல் பெண்ணின் டச் அப்.

"நீ யாரு?"

"மேடமோட டச் அப்"

"அப்போ மூஞ்சிக்கு பவுடர் அடிக்கிற வேலையை மட்டும் பாரு. தேவையில்லாம இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் சண்டை வர வச்சிடாத"

மாடல் பெண் எரிச்சலடைந்தாள். "நீங்க தொண தொணன்னு பேசுறதை கொஞ்சும் நிறுத்துறீங்களா மிஸ்டர்.....!?"

"ஜான். என் பேரை இவ்வளவு சீக்கிரம் மறந்துட்டீங்களே?"

"வசந்த் ஜெஸிகா உட்காருங்க சாப்பிடலாம். ஜான் நீங்களும் தான்"

மேஜையில் இருந்த உணவை அனைவரும் உண்ண தொடங்கினர்.

"உங்களுடைய மரியாதைக்கும் வரவேற்புக்கும் என்னோட நன்றி" என்றாள் அமேலியா.

மாடல் பெண் உண்ணுவதை நிறுத்திவிட்டு அனைவரையும் நோக்கினாள்.

"அவங்க என்ன சொன்னாங்க?"

வசந்தும் ஜெஸிகாவும் ஜானை நோக்கினர்.

'எல்லாத்தையும் நான் தான் சமாளிக்கணுமா?' என்று இருவரையும் முறைத்தான் ஜான்.

"அது வந்து.... உணவு ரொம்ப அருமையா இருக்காம்"

"ஓ! அவங்க என்ன மொழி பேசுறாங்க?"

"உங்களுக்கு ஹிந்தி தெரியுமா?"

"தெரியாது"

"அப்போ அவங்க ஹிந்தியில் தான் பேசுறாங்க"

அமேலியா மீண்டும் பேசத் தொடங்கினாள். "நீங்க பார்க்க அன்பானவரா மேன்மையுள்ளம் கொண்டவரா தெரியுறீங்க. அப்புறம் ஏன் இப்படி ஆபாசமா உடை உடுத்துறீங்க?"

"இப்போ என்ன சொல்லுறாங்க?"

ஜான் நெற்றியை தேய்த்தபடி சில நொடிகள் யோசித்தான். "உங்க ஓவியத்தை வரஞ்சதை அவங்க பெருமையா நினைக்குறாங்களாம்"

"ஓ தேங்க் யு"

"முதல்ல உங்க ஓவியத்தை வரைய நான் துளியும் விரும்பல. ஒருத்தருக்காக வரைய வேண்டிய கட்டாயம்" என வசந்தை சில நொடிகள் நோக்கினாள் அமேலியா.

அவள் பார்த்த அந்த நொடி வசந்தின் இதயத்தினுள் மகிழ்ச்சி கலந்த பயத்தை பாய்ச்சியது. அமேலியா தன்னைப் பார்த்து என்ன கூறியிருப்பாள் என சிந்தித்தான்.

"இப்போ என்ன சொல்லுறாங்க?"

"தன்னுடைய காதலை ஏத்துக்க சொல்லி வசந்த் அவங்க பின்னாடி நாயா பேயா அலைஞ்சானம்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.