(Reading time: 16 - 31 minutes)

பின்பு ஏதோ நினைத்தவனாக நாளைக்கு எங்கள மறுவீட்டிற்கு வரணும்னு எதிர்பார்ப்பிங்க, ஆனால் நித்யாவிற்கு கஷ்டமா இருக்கும் அதனால எங்களால வரமுடியாது. நீங்க நாளைக்கு நம்ம வீட்டிற்கு கண்டிப்பா வாங்க !! “ என்றான். இனிவரும் பிரச்சினைகளும், மனகசப்புகளும் அனைவருக்கும் ஏற்படாதவாறு, ஒரு தீர்வை தந்தவனை ஆச்சரியமாக பார்த்தனர் அனைவரும், ஆனால் அனந்திதாவோ இவன் இப்படி தான் என்பது போல் அமைதியாக இருந்தாள். தனது பெற்றோர்களிடமும் தான் அனைத்தும் சமாளித்துக் கொள்வதாக கண்களில் கூறி விட்டு அவர்களுக்கு பிரியா விடைக் கொடுத்தாள். அனந்திதாவின் தாய்மாமன் மற்றும் அத்தை இவளோடு ஹரிஷின் வீட்டில் விட்டு வர உடன் சென்றனர்.

திருமண மண்டபத்திலிருந்து, காரில் ஏறி அமர்ந்தவுடன் யாருக்கு வந்த விருந்தோ என்பது போல சீட்டில் சாய்ந்து கண் முடி அமர்ந்தவனே பார்த்து கோவம் கூட பட முடியவில்லை. அப்பொழுது தான் அவனை நன்கு பார்த்தால், மூன்றரை வருடங்களுக்கு பிறகு அல்லவா பார்க்கிறாள். எப்பொழுதும் கலகலப்புடன் துருதுருப்புடன் இருப்பவன் அவை அனைத்தும் இழந்து ஒரு கடினமான போர்வையுடன் இருந்தான், நல்லா பால் நிறம் அனைவரை கவர்ந்து இழுக்கும் எடுப்பான நாசி, சிவந்த உதடுகள் எந்த கெட்ட பழக்கத்தையும் உடையவன் இல்லை என்பதே பறைசாற்றியது. 5 1/2 அடி உடையவன், சிக்ஸ் pack உடனே இருந்தான் எப்பொழுதும் போல. பார்த்த பதினைந்து நொடிகளில் அனைத்தும் கண்டுகொண்டவள் ஒரு பெருமூச்சுடன் வெளியில் வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள். இது அனைத்தும் அறிந்தவன் கண்ணை மட்டும் திறக்காமல் அவளை எவ்வாறு சமாளிக்க போகிறோம் என்ற நினைப்புடன் இருந்தான். அவனுக்கு தெரியும் அவளது இப்போதைய அமைதியே அவனுக்கு பயத்தை அளித்தது. அவளை நன்கு அறிந்தவன் அவன் ஒருவனே.

வீட்டிற்கு வந்து இறங்கியவர்கள் அவர்களை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, அவர்களுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்தார் சுமதி. ஆனால் அவரின் முகத்தில் மருந்துக்கும் மகிழ்ச்சி இல்லை, காரணம் அனந்திதா முன்பே திருமணம் ஆனவள் என்பதால், இதை அறிந்தவள் போல அவளும் வருந்தாமல் இருந்தாள். இதை மேலும் நான்கு கண்கள் கண்டது.

அனந்திதா பூஜை அறையில் விளக்கேற்றி வந்த பிறகு, புது தம்பதியருக்கு பால், பழம் கொடுத்தனர். அதை எதையும் மறுக்காமல் இருவரும் இருப்பதை அனைவரும் கண்டனர். அதற்கான விடை யாருக்கும் தெரியவில்லை.

அப்பொழுது சிதம்பரம், “சுமதி !! அவர்கள் இருவரையும் ஒய்வெடுக்க அனுப்பமாறு கூறினார் “, அதை உணர்ந்து ஹரிஷ் அனந்திதாவை அழைத்து கொண்டு தன் அறைக்கச் சென்றான். அவளுக்கும் அது தேவையாக இருந்தது.

அறைக்கு வந்தவுடன், தன் அறையில் ஒய்வு எடுக்குமாறு கூறி சென்றவனை கோபமாகப் பார்த்தாள். ஆனால் அவளுக்கு அது தேவைப்பட்டது. பின்பு அவனது அறையில் வைக்கப்பட்ட தன்னுடைய travel பாக்கிலிருந்து ஒரு புடவையை எடுத்துக்கொண்டு குளியலறைக்கு சென்றாள். என்னடா புது இடம் என்ற பயமும் பதட்டமும் இல்லாமல் இருக்கிறாளே? என்ற கேள்வி உங்களிடம் உள்ளதை அறிகிறேன் அதற்கான விடை அவர்களின் கடந்த காலத்தை அறிந்தவுடன் உங்களுக்கு கிடைக்கும்.

அவளை தனது அறையில் விட்டு சென்றவனோ, நேராக கீழே வரவேற்பறையில் இருந்தவர்களிடம் வந்தவன். பொதுவாக, “என்ன கேள்வி கேட்கணுமோ கேளுங்க?” என்று கூறி விட்டு சோபாவில் அமர்ந்தான்.

அவன் வருவதை எதிர்பார்க்காதவர்கள், அவன் கேட்டவுடன் ஒரு நிமிடம் அதிர்ந்து அவனை பார்த்தனர். பின்பு தங்களது கேள்விகளைத் தொடர்ந்தனர்.

அவனின் தந்தை, “உனக்கு அனந்திதாவை எப்படி தெரியும்? ஏன் அவளை கல்யாணம் பண்ணிக்கனும்னு பிடிவாதமாக இருந்த?” என்றார்.

அவன் உடனடியாக, “இதற்கு ஆன பதில் உங்களுக்கு சொல்ல முடியாது. ஆனா நான் அவள விரும்பித் தான் கல்யாணம் பண்ணிகிட்டேன். அவள சந்தோசமா பார்த்துப்பேன். நீங்க கவலைப்பட வேணாம். “என்றான். இதைகேட்டு கோவமடைந்த சுமதி, “அப்படி என்னடா அவகிட்ட இருக்கு அதுவும் டிவோர்ஸ் ஆனவள கல்யாணம் பண்ணிக்க?” என்று கோவம் கண்ணை மறைக்க அனந்திதாவின் மாமா அத்தை முன்பே கூறிவிட்டார்.

“அம்மா !! சுமதி !!”, என அனைவரும் அதிர்ந்து கத்தவும் தன் தவற்றை உணர்ந்து மன்னிப்பை வேண்டினார்.

அதைப் புரிந்து கொண்டு அனந்திதாவின் அத்தை, “உங்களுக்கு அனந்திதாவை பற்றி எதுவும் தெரியாது. மூன்றரை வருசத்துக்கு முன்னாடி அவ இந்தியா வந்த பொழுது அவளுக்கு கல்யாணம் பண்ண ஏற்பாடு பண்ணாங்க, அவளும் நீங்க யாரா சொல்றிங்களோ நான் பண்ணிக்கறேன் என்றாள். எல்லாம் சரியாக நடந்து கல்யாணமும் நடந்துச்சு, அன்னைக்கு நைட் தான் அந்த பையன் வேற ஒரு பொண்ணை விரும்பறதாலும், அவன பெத்தவங்க வற்புறத்தினதாலும் இந்த கல்யாணத்தப் பண்ணிகிட்டேன். எனக்கு டிவோர்ஸ் வேணும் அப்படி கேட்டு இருக்கான். அனந்திதா உடனே அவங்க அப்பாக்கு போன் பண்ணி என்ன இங்க இருந்து கூப்பிட்டு போங்க னு சொல்லி, எல்லார்க்கும் உண்மைத் தெரிஞ்சு ஒரே பிரச்சனை ஆயிடுச்சு. அப்பறம் அவ அவனுக்கு டிவோர்ஸ் கொடுத்துட்டு இந்தியால இருந்து போயிட்டா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.