(Reading time: 16 - 32 minutes)

தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 09 - சித்ரா. வெ

Nenchodu kalanthidu uravale

ருள்மொழி அறையை விட்டு வெளியே வந்த போது அனைவரும் அப்படியே அமர்ந்திருந்தனர். நிச்சயத்தார்த்த சடங்குக்காக வரவைக்கப்படிருந்த உணவு கைப்படாமல் அப்படியே இருந்தது. யாருக்கும் சாப்பிட தோன்றவில்லை. கதிரவன், எழிலரசி கூட வீட்டிற்கு செல்லாமல் அங்கேயே அமர்ந்திருந்தனர். அனைவருக்கும் இப்போது முக்கியமாகப்பட்டது கலையரசியை சமாதானம் செய்வது தான்.. ஆனால் எப்படி என்பது தான் தெரியவில்லை. அது புரியாமல் தான் அமர்ந்திருந்தனர்.

மகி மீது உள்ள கோபம் குறையாது என்று அருள் சொன்னப்பிறகு அறிவுக்கும் இலக்கியாவிற்கும் என்ன சொல்லவென்று தெரியவில்லை. மகிக்காக அதிகம் பேசினால், என்ன இருந்தாலும் அவன் ரத்த சம்பந்தப்பட்ட உறவு, நான் அப்படியா என்று அருள் நினைத்துவிடக் கூடாது.. அறிவழகனும் இலக்கியாவும் எப்போதும் அப்படி நினைத்ததும் கிடையாது.. அதனால் அவளாக தெளிந்துக் கொள்ளட்டும் என்று அமைதியாகிவிட்டனர். ஆனாலும் அறிவு அறையை விட்டு வெளியே போகும்போது ஒன்றை மட்டும் சொல்லிச் சென்றான்.

“நமக்குள்ள நாம நிறைய சண்டை போட்ருக்கோம், கோபிச்சிக்கிட்டு இருக்கோம், ஒருத்தருக்கொருத்தர் சமாதான தூது போயிருக்கோம்.. நம்ம கோபம் ரெண்டு நாள் கூட நீடிக்காது.. அதேபோல மகி மேல இருக்க கோபம் சீக்கிரம் உனக்கு குறைஞ்சிடும், ஆனா பெரியவங்களுக்குள்ள வந்த மனஸ்தாபம் அப்படி இல்ல..

இப்போ உனக்காக பெரியப்பா மகியை வீட்டை விட்டு அனுப்பிட்டாரு.. ஆனா இதால பெரியம்மா மனசு எப்படி இருக்கும்? உனக்காக அத்தை கவலைப்பட்றாங்க, அதேபோல தானே பெரியம்மாவும் மகிக்காக கவலைப்படுவாங்க.. உனக்காக அத்தையும் மகிக்காக பெரியம்மாவும் வருத்தத்தை மனசுல வச்சிக்கிட்டு இருந்தா அவங்களுக்குள்ள சுமூகமான உறவு நீடிக்குமா?

பாட்டிக்கு நீயும் முக்கியம், மகியும் முக்கியம் அப்படி இருக்கப்ப அவங்க யாருக்காக பார்ப்பாங்க, எங்க அப்பாவோ அம்மாவோ மகிக்காக பேசினா, அது சுயநலமாகிடும், மாமா மட்டும் மனசார இந்த முடிவெடுத்திருப்பாரா? இதுக்காகயாவது உன்னோட கோபத்தை விட்டு அத்தையை சமாதானப்படுத்து” என்று சொல்லிவிட்டு சென்றிருந்தான். அது சரியென்று பட்டதால் தான் அருள்மொழியும் வெளியே வந்தாள்.

கலை இன்னும் அதே இடத்தில் தான் அமர்ந்திருந்தார்.. அருளும் அவர் அருகே சென்று அமர்ந்து அவரின் கைகளை ஆதரவாக பற்றினார். அவளை அருகில் கண்டதும் கலை திரும்பவும் அழுதார்..

“உனக்கு மட்டும் ஏண்டி இப்படி நடக்குது? அன்னைக்கு மட்டும் நீ கொஞ்சம் கவனமா இருந்தா இப்படில்லாம் நாம வேதனைப்பட வேண்டிய அவசியம் இருக்குமா? நீ செஞ்சது இப்போ எந்த இடத்துல வந்து நிறுத்தியிருக்கு பாரு? உன்கூட ஒன்னா வளர்ந்தவனே உன்னை வேண்டாம்னு சொல்லிட்டான்.. இனி வேற யாரு உன்னை கல்யாணம் பண்ணிப்பா”

“அய்யோ அம்மா இப்போ எதுக்கு குடி முழுகி போன மாதிரி அழற? மகி வேண்டாம்னு சொல்லிட்டா.. எனக்கு கல்யாணமே நடக்காதா? நான் எந்த தப்பும் பண்ணலம்மா.. மத்தவங்க பார்வைக்கு தப்பா படுதுன்னு நம்ம  கவலைப்பட்டுக்கிட்டு இருந்தா அதுதான் நம்ம வாழ்க்கையை கேள்விக்குறியா ஆக்கிக்கிறது..

இப்போ என்னோட நிச்சயதார்த்தம் நின்னு போனதும் நல்லதுக்கு தான்ம்மா.. மகிக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு இப்போவே தெரிஞ்சுதே.. ஒருவேளை கல்யாணத்துக்கு பிறகு நீங்கல்லாம் சொன்னதுக்காக தான் மகி என்ன கல்யாணம் செஞ்சுக்கிட்டான்னு தெரிஞ்சா, அப்போ தான் என்னோட வாழ்க்கை தப்பா போயிருக்கும்..

மகியை மட்டும் இப்போ தப்பு சொல்ல முடியாதும்மா.. அன்னைக்கும் இப்படி தான் நீ அழுதுக்கிட்டு இருந்த, அதுக்காக மாமா இந்த முடிவை சொன்னாரு.. குடும்பமே சேர்ந்துக் கேட்டா மகி என்னத்தான் பண்ணுவான்.. சரின்னு சொல்லிட்டான்.. நிச்சயத்தார்த்ததுக்கு முன்னமே இதுக்கு ஒரு முடிவு கிடைச்சதை நினைச்சு சந்தோஷப்படும்மா.. மகி செஞ்ச விஷயத்துக்காக நீ மாமாக்கிட்டயோ அத்தைக்கிட்டயோ வருத்தத்தை காட்டக் கூடாது.. அதேபோல சித்தப்பா, சித்தி மட்டும் என்ன பண்ணுவாங்க.. இப்படி என்னோட வாழ்க்கையே போச்சுன்னு நினைச்சு அழறத முதல்ல விடு..” என்று கொஞ்சம் அதட்டலாகவே பேசினாள்.

பின் புகழேந்தியை பார்த்தவள், “மாமா.. இந்த நிச்சயம் நின்னதுல உண்மையா எனக்கு வருத்தம் இல்ல மாமா.. மகி முன்னமே என்கிட்ட சொல்லியிருக்கலாமேன்னு மட்டும் தான் நினைச்சேன்.. அதனால என்னை காரணம் காட்டி மகியை நீங்க ஒதுக்கிடாதீங்க.. அவனை வீட்டுக்கு கூப்பிடுங்க..” என்று தெளிவாகவே கூறினாள்.

“இங்கப்பாரு அருள்.. நான் கலைக்காகவோ உனக்காகவோ இப்படி ஒரு முடிவெடுத்தேன்னு நினைக்காத.. நீ இந்த வீட்டு பொண்ணு, உன்னைப்பத்திய கவலை எனக்கு எப்பவுமே உண்டு.. உன்னோட அம்மா அதை வெளிப்படையாக காட்றான்னா, நான் அதை காட்டல அவ்வளவு தான்.. மத்தப்படி நான் இப்போ எடுத்த முடிவு சரிதான்.. உனக்கு ஒரு நல்லது நடந்தா தான் மகி கல்யாணம் நடக்கும்.. இந்த முடிவு யாருக்கு வருத்தத்தை கொடுத்தாலும் கவலை இல்லை..” என்று உறுதியோடு கூறியவர்,

“முதல்ல அம்மாவை சாப்பிட வை..” என்று சொல்லிவிட்டு அந்த இடத்திலிருந்து சென்றுவிட்டார்.

அவர் பூங்கொடியை மனதில் கொண்டு தான் அப்படி கூறினார். அதை புரிந்து கொண்டவராக பூங்கொடியும், மனதில் மகி வீட்டை விட்டு வெளியே போன வருத்தம் இருந்தாலும், “அருள் உங்க மாமா சொல்றதும் சரி தான்ம்மா.. உன்னோட வாழ்க்கையும் எங்களுக்கு முக்கியம்.. மகி என்ன இருந்தாலும் ஆம்பிளை பிள்ளை தானே, கூட சம்பாதிக்கவும் செய்றான்.. அதனால அவன் அவனை எப்படியும் பார்த்துப்பான்.. நீ எதையும் மனசுல போட்டு குழப்பிக்காம, அம்மாவை ரூம்க்கு கூட்டிட்டு போ.. நான் ரெண்டுப்பேருக்கும் சாப்பாடு கொண்டு வரேன்..” என்று தெளிவாக கூறியவர், மற்றவர்களிடமும்,

“ஏன் எல்லாம் அப்படியே உக்கார்ந்திருக்கீங்க.. வாங்க சாப்பிடுவோம், மீதி எப்படியும் சாப்பாடு மீந்து போகும்.. அதை நேரம் ஆகறதுக்குள்ள யாருக்காவது கொடுத்தா அவங்களுக்கும் உபயோகமா இருக்கும்..” என்று ஒரு குடும்பத் தலைவியாக பேசினார். வெளியில் இருந்து தன் மனைவியின் பேச்சில் தெளிவை உணர்ந்த புகழேந்தியும் கொஞ்சம் நிம்மதியடைந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.