(Reading time: 16 - 32 minutes)

நேராக அறிவு தங்கியிருக்கும் வீட்டை அடைந்த மகியும் சுடரும், ஆட்டோவை அனுப்பிவிட்டு கேட்டை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர். அறிவின் அறை மாடியில் இருந்தது. கேட்டை அடுத்து பக்கவாட்டிலேயே படி இருக்க அதில் ஏறினார்கள். படி முடிவில் பால்கனி போன்ற அமைப்பு இருக்க, பால்கனியின் முடிவில் குளியலறையும் கழிவறையும் இருந்தது. அறையின் பூட்டை திறந்துக் கொண்டு இருவரும் உள்ளே சென்றனர்.

மொத்தமாக ஒரே அறை, ஒரு ஓரம் சிலிண்டரோடு சேர்ந்த ஒரு ஒத்தை அடுப்பு இருந்தது. இன்னொரு ஓரம் ஒரு ஒத்தை கட்டில்.. கட்டிலை அடுத்து ஒரு செல்ஃப், ஒரு பிரம்மச்சாரியின் அறை எப்படி இருக்குமோ, அதுபோல எல்லாம் அங்கங்கே கலைந்திருந்தது. சுடர் மகியுடன் ஏற்கனவே அங்கு வந்துள்ளதால், அவளுக்கு அதில் ஏதும் வித்தியாசம் தெரியவில்லை. ஆனால் மனைவியாய் அவளை அழைத்து வந்திருக்கும் மகிக்கு தான் ஒரு மாதிரி ஆகிவிட்டது. அறுவழகனை திட்டியப்படியே ஓரளவுக்கு அறையை ஒழுங்குப் படுத்தினான். பின் ஞாபகமாக தன் அலைபேசியை சார்ஜில் போட்டான்.

“சுடர் நீ இங்க இரு.. நான் போய் உனக்கு ஏதாச்சும் சாப்பிட வாங்கிட்டு வரேன்..”

“வேண்டாம் எனக்கு பசிக்கல..”

“இங்கப்பாரு நைட் சாப்பிடாம படுக்கக் கூடாது.. சும்மா எதுக்கும் வேண்டாம்னு சொல்லாம, ஒழுங்கா சாப்பிடு..”

“சரி அப்போ நீயும் என்கூட சாப்பிடுவல்ல?” என்று கேட்டதும், அவன் முகத்தில் புன்னகை வந்தது.

“எனக்கு ரொம்ப பசிக்குது.. சாப்ட்டே ஆகனும்..” என்றவன், “கதவை லாக் பண்ணிக்கோ” என்று சொல்லிவிட்டு சென்றான்.

உள்பக்கமும் வெளிப்பக்கமும் பொதுவாக இருக்கும் லாக்கை போட்டுவிட்டு உள்ளே வந்தாள். மேல் தாழ்ப்பாள் போடவில்லை. அவள் வீட்டில் அவளது அறையில் அப்படித்தான் போட்டுவைப்பாள். அவள் வீட்டில் இருக்கும்போது யாரும் அனாவசியமாக அவள் அறைக்கு வரமாட்டார்கள். அப்படியே என்றாலும் தட்டிவிட்டு தான் உள்ளே வருவார்கள். எனவே அதே ஞாபகத்தில் இந்த அறையின் கதவையும் அப்படியே சாத்திவிட்டு வந்தவள், நேராக அங்கே சுவற்றில் மாற்றியிருந்த கண்ணாடியின் முன் சென்று நின்றாள். அந்த கண்ணாடியில் அவளின் பாதி உருவம் தெரிந்தது.

அதில் தன்னை பார்த்துக் கொண்டவள், அவளின் ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த மஞ்சள் கயிறை எடுத்து வெளியே விட்டாள். மஞ்சள் கிழங்கு கட்டியிருந்த அந்த மஞ்சள் கயிறை பார்த்தப்படியே கண்ணாடி முன் வெகுநேரம் நின்றிருந்தாள்.

இன்றிலிருந்து அவள் மகிழ்வேந்தனின் மனைவி. அதை தான் அந்த கயிறு உணர்த்திக்  கொண்டிருந்தது. அதில் அவள் முகத்தில் தானாகவே புன்னகை தோன்றியது.  இந்த திருமணம் நடந்த விதமும், மகிழ் அதை நடத்திய விதமும் அவளுக்கு பிடிக்கவில்லையென்றாலும், நடந்த திருமணம் அவளுக்கு பிடித்திருந்தது.  அதுவும் ஊருக்கெல்லாம் தெரிந்தே நடந்திருக்கிறது. மற்றவருக்கெல்லாம் ஒருவிதம் என்றால், இவர்களுக்கு வேறு விதம்.. அதில் வாய்விட்டே சிரித்துக் கொண்டாள். அவன் காதல் தனக்கு கிடைத்ததா? என்று அவளுக்கு தெரியவில்லை. ஆனால் அவனின் மனைவியாய் அவனோடு இருக்கும் உரிமை கிடைத்திருக்கிறது.

ஆனால் அவனிடம் அந்த மகிழ்ச்சியை  வெளிப்படையாக காட்டவும் முடியவில்லை. அதற்கு முன் நடந்த நிகழ்வுகள் ஒருப்பக்கம் என்றால், அவனுக்கு மனைவியாகும் தகுதி தனக்கு இருக்கிறதா? என்ற கேள்வியும் பிறந்தது. மனதில் தோன்றிய குற்ற உணர்வே அதற்கு காரணம். கூடவே அவன் குடும்பத்தார் இவளை முழுமனதாக ஏற்றுக் கொள்ளும் நாள் வருமா? என்ற கவலையும் உருவானது.

வெகுநேரமாக நின்றிருந்ததை உணர்ந்தவள், அவன் வருவதற்குள் அணிந்திருந்த உடையை மாற்றி இரவு உடை அணியலாம் என்று முடிவெடுத்துக் கொண்டாள். தன் பையை திறந்து அணிய வேண்டிய உடையை எடுத்தவள், அப்போதும் கதவை தாழ்ப்பாள் போட வேண்டும் என்பதை உணராமல் மேலாடையை கழட்டும் போதே மகி கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

கதவை திறக்கும் சத்தம் கேட்டதுமே பாதி அளவுக்கு தூக்கியிருந்த ஆடையை இறக்குவதற்கு முன்பே அவளின் வயிற்று பகுதியை பார்த்தவன், அவசரமாக திரும்பிக் கொண்டு, “சாரி..” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.

“எவ்வளவு தைரியம் இவனுக்கு, கதவை தட்டிட்டு வரணும்ணு தெரியாதா? கழுத்துல ஒரு கயிறை கட்டிட்டு புருஷன்ங்கிற உரிமையை எடுத்துக்கிறானா? இடியட்..” என்று திட்டினாள். இருந்தும் கதவை தாழ்ப்பாள் போடாமல் விட்டது தன் தவறு என்பதை உணர்ந்தவள், முதலில் சென்று தாழ்ப்பாள் போட்டு விட்டு வந்தாள். ஆனாலும் அவன் மீது இருந்த கோபம் குறையவில்லை. அவன் வீட்டில் பெண்களுக்கா பஞ்சம்.. அவர்களோடு ஒன்றாக வளர்ந்தவன் தானே, இது போன்ற விஷயங்கள் தெரியாதா? அப்படி இருந்தும் இப்படி கதவை திறந்துக் கொண்டு வந்தது எதனால்? என்று யோசித்தவள்.. திரும்ப அவனை திட்டியப்படியே உடையை மாற்றினாள்.

வெளியே வந்த அவனோ தலையில் தட்டிக் கொண்டான். “டேய் உனக்கு அறிவே இல்லையாடா.. கதவை தட்டிட்டு போகனும்ணு தெரியாது.. பொண்ணுங்க கூட ஒன்னா வளர்ந்தவண்டா.. அப்படி இருந்தும் எப்படிடா இப்படி செஞ்ச? தாலிக் கட்டிட்டோம் பொண்டாட்டி தானேன்னு இப்படி பண்ணிட்டியா? அருள் கல்யாணத்துக்கு பிறகு எங்க கல்யாணம் நடக்கற வரைக்கும் பொறுமையா இருப்போம்னு சொல்லிட்டு வந்த? இப்போ என்ன இப்படி? இப்போ தான் கொஞ்சம் நல்லா பேசினா, அதுக்குள்ள நீ செஞ்சு வச்ச காரியத்துக்கு அவ எப்படி கோபப்பட போறாளோ?” என்று வாய்விட்டு  புலம்பும் போதே, அவள் கோபத்தோடு கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்தாள்.

அவள் வேகமாக கதவை திறந்ததிலேயே அதை உணர்ந்துக் கொண்டவன்,  அதைவிட அதிக வேகத்தோடு தன் கன்னம் இரண்டையும் கை வைத்து மூடிக் கொண்டான். உலக வரலாற்றில் முதல் முறையாக மூன்றாவது முறையும் அவளிடம் அடிவாங்க அவன் தயாராக இல்லை. அவனின் அன்னை தந்தை கூட இரண்டு அடிக்கு மேல் அடித்ததில்லை.

அவனை நன்றாக திட்டி தீர்க்க வேண்டும் என்று வந்தவள், அவன் கன்னத்தை பிடித்துக் கொண்டிருக்கும் காட்சியை பார்த்ததுமே அவளை மீறி சிரிப்பு வந்தது. இருந்தும் வெளிப்படையாக அதை அவனிடம் காண்பித்து கொள்ள விரும்பாமல் முகத்தை மாற்ற சிரமப்பட்டாள். ஆனாலும் அவளின் கோபம் குறைந்திருந்தது. இருந்தும் அவனிடம் கேக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று இருக்கின்றதே, அவனின் அருகில் சென்றவள் தயக்கத்தோடு,

“மகிழ் நீ.. நீ.. நீ எதுவும் பார்க்கலல்ல” என்றாள். அவள் கேட்கும் போதே அவளின் வெண்மை நிற வயிறு கண் முன்னே வந்துப் போனது.  அதை அவளிடம் சொல்ல முடியுமா?

“நான் எதுவும் பார்க்கல சுடர்.. சாரி கதவை தட்டிட்டு வந்திருக்கனும்.. ஐ அம் வெரி சாரி..” என்று மன்னிப்பு கேட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.