(Reading time: 18 - 36 minutes)

தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 10 - சித்ரா. வெ

Nenchodu kalanthidu uravale

சிறிது நேரத்திற்கு பிறகு மகி அறைக்குள் வரும்போது சுடர் உறங்கிக் கொண்டிருந்தாள்… இதுவரை அவனிடம் கோபத்தை காட்டிய அவள் முகம், உறக்கத்தில் அவளை அறியாமலேயே மலர்ச்சியோடு இருந்தது…. அதைப் பார்த்ததும் தான் மகியின் மனம் நிம்மதியானது… தான் செய்த காரியம் சரியா? தவறா? என்று இதுவரையில் அவன் குழப்பத்தில் இருந்தாலும், அவளின் முகத்தில் இருந்த அந்த தெளிவு, அவன் செய்த காரியம் சரிதான் என்று நியாயப்படுத்தியது…

இப்படி மொத்தமாக இந்த நாட்டை விட்டே போக இவள் முடிவெடுத்திருப்பாள் என்று தெரிந்திருந்தால், தன் குடும்பத்தார் எடுத்த முடிவுக்கு ஒத்துக் கொள்ளாமல், யோசித்து ஏதாவது செய்திருக்கலாம் என்று நினைத்தான்… அவள் இந்த நாட்டை விட்டு செல்வதை தாங்கிக் கொள்ள முடியாமல் இப்படி ஒரு அதிரடி முடிவை எடுத்தவன், அவளை நினைத்து வருத்தம் கொள்பவன், இந்த உலகத்தை விட்டே போக அவள் முடிவெடுத்திருந்ததை அறிந்தால்? என்ன செய்திருப்பான்??

அவளின் இந்த முடிவைக் கூட அவன் தடுக்க நினைத்தது எதனால்?? முன்னொரு நாள் அவள் பேசிய வார்த்தைகள் இன்னும் நெஞ்சில் அப்படியே பதிந்திருந்தது..

“மகிழ் இந்த உலகத்திலேயே எனக்கு ரொம்ப பிடிச்சது யாருன்னு தெரியுமா?? நீயும் சித்தியும் தான்..” வாய் குழறியப்படி சொன்னாள்.

“அப்போ உங்க அப்பாவை பிடிக்காதா??”

“அவர் என்னோட உயிர்ல கலந்திருக்காரு.. அவரை பிரிச்சு தனியா சொல்ல முடியாது..”

“எங்க ரெண்டுப்பேரையும் பிடிக்கும்னு சொல்ற.. அப்புறம் திரும்ப லண்டன்க்கு போகனும்னு அன்னைக்கு ஏன் சொன்ன??”

“அது.. அப்போ நான் யாருக்கும் தொல்லையா இருக்கக் கூடாதுன்னு நினைச்சேன்.. என்னால சித்திக்கு கஷ்டம்.. உங்களுக்கெல்லாம் இடைஞ்சல்.. அதான் திரும்ப அங்க போய்ட நினைச்சேன்..

ஆனா இனி அப்படி ஒரு எண்ணமே எனக்கு வராது.. அப்பா என்கூட பேசலன்னாலும், நீயும் சித்தியும் எனக்காக இருக்கீங்களே..  புவியும் இருக்கான்.. அப்புறம் எப்படி நான் இங்க இருந்து போவேன்.. நீங்க இருக்கறதால தான் இந்த ஊரை கூட நான் ரசிக்கிறேன்.. ஒருவேளை நான் இங்க இருந்து போக நினைச்சா.. ஒன்னு நீங்க என்னை வெறுக்குற நிலை வரனும்.. இல்லை நான் என்னையே வெறுக்குற நிலை வரனும்.. அப்போ எல்லோரையும் விட்டு நானே விலகிப் போய்டுவேன்..”

“சரி சரி.. உனக்கு போதை அதிகமாயிடுச்சுன்னு நினைக்கிறேன்.. அதான் இப்படியெல்லாம் பேசற”

“மகிழ்.. நான் போதையில உளர்றேன்னு நினைக்கிறியா..?? இது என்னோட மனசுல இருந்து வர்ற வார்த்தைங்க.. நான் உன்னையும் சித்தியையும் எவ்வளவு லவ் பண்றேன்னு வார்த்தையால சொல்ல முடியாது.. ஐ லவ் யூ மகிழ்.. ஐ லவ் யூ சித்தி..” என்று உரக்க கத்தினாள்..

அன்று அவள் சொன்ன ஐ லவ் யூ வை அவன் சீரியஸாக எடுத்துக் கொண்டிருந்தால், இப்போது இப்படி அவளை கஷ்டப்படுத்தி பார்த்திருக்க மாட்டான். ஏன் அவளுமே அப்போது சீரியஸாக தான் கூறினாளா? என்பதும் சந்தேகம் தான்..

காணொளியை பார்த்து வரைந்துக் கொண்டிருந்தவள், அனைத்தையும் அருகிலேயே பரப்பி வைத்திருந்தவள், அதெல்லாம் அங்கேயே இருக்க, அப்படியே உறங்கியிருந்தாள். அதையெல்லாம் அவன் எடுத்து வைக்கும் போது தான் அந்த ஓவியத்தை பார்த்தான். கூடவே அலைபேசியில் உள்ள காணொளியையும் பார்த்தான். இன்னும் அவன் அந்த காணொளியை பார்த்திருக்கவில்லை. இப்போது அதை பார்த்த போது, ஒருப்பக்கம் இப்படி ஒரு சூழ்நிலை உருவாக தான் தான் காரணம் என்று நினைத்து வருத்தப்பட்டாலும், ஒருப்பக்கம் அந்த காட்சியை பார்த்த போது மகிழ்ச்சியாக தான் இருந்தது. அதிலும் சுடர் வரைந்த ஓவியம், அவள் மனதில் அவர்களின் திருமணம் குறித்த கனவை எடுத்துக் காட்டியது.

“கண்டிப்பா சீக்கிரமா  நம்ம கல்யாணம் இதேபோல நடக்கும் சுடர்..” என்று மனதில் சொல்லிக் கொண்டான். எல்லாவற்றையும் ஒழுங்குப் படுத்தி அவளின் பைக்குள் வைக்கும் போது,

“மகிழ்.. மகிழ்..” என்று மெதுவாக விட்டு விட்டு சுடர் கூப்பிட்டாள்.. முழித்துக் கொண்டாளா? என்று அவன் அவளை பார்க்க, அவளோ உறக்கத்தில் தான் அவனின் பெயரை அழைத்திருந்தாள்.

“மகிழ் நமக்கு கல்யாணம் ஆயிடுச்சு.. இப்போ இந்த உலகத்திலேயே சந்தோஷமான ஆள் யாருன்னா அது நான் தான்.. நான் இப்போ மகிழ் வேந்தனோட வைஃப்.. ரொம்ப சந்தோஷமா இருக்கு மகிழ்..” என்று விட்டு விட்டு இந்த வாக்கியங்களை தூக்கத்தில் உளறினாள்.

“ஹே செல்லம் நீ தூக்கத்துல உளறுவியா? அதுவும் நல்லதுக்கு தான், இல்ல எப்பவும் என்னை டெரரா பார்த்து முறைச்சிக்கிட்டே இருக்க, கூட ரெண்டு அறை வேற விட்டியா.. அய்யோ என்னடா இப்படி பண்ணி வச்சிட்டோமேன்னு பயந்தே போயிட்டேன் தெரியுமா?” தூங்கி கொண்டிருந்தவளை காதலோடு பார்த்தப்படியே கொஞ்சம் மெதுவாகவே பேசினான்.

“மகிழ்.. நீ 5 மினிட்ஸ் லேட்டா வந்துருந்தாக் கூட நம்ம கல்யாணம் நடந்திருக்காது.. அப்படியே நடந்திருந்தாலும் நல்லா தான் இருந்திருக்கும்.. நான் மகிழ்வேந்தன் மனைவியா செத்து போயிருப்பேன்..” என்று கூறினாள்.

“என்ன இவ இப்படியெல்லாம் பேசறா..” என்று கவலை கொண்டான்.

“ஆமாம் மகிழ் நான் சூசைட் செஞ்சுக்க இருந்தேன். பேக்ல தான் பாய்சன் வச்சிருந்தேன்..  நீ வரும்போது தான் ரெஸ்ட்ரூம்க்கு போய் அதை குடிக்கலாம்னு இருந்தேன்.. அதுக்குள்ள நீ வந்துட்ட..” இவை அனைத்தையும் தூக்கத்திலேயே விட்டு விட்டு உளறிக் கொண்டிருந்தாள். ஆனால் அதை கேட்டவனுக்கு தான் உயிர் போய் உயிர் வந்தது. அவசர அவசரமாக அவளது கைப்பையை ஆராய்ந்து பார்த்தான். அதில் அவள் சொன்னது போலவே விஷப்பாட்டில் இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.