(Reading time: 18 - 36 minutes)

காலையிலேயே அருள் எங்கேயோ கிளம்புவதற்கு தயாராகி கொண்டிருந்தாள். “ஹே மச்சி எங்கடி கிளம்பிட்ட?” கேட்டப்படியே இலக்கியா அறைக்குள் வந்தாள்.

“எம்.சி.ஏ பண்ணலாம்னு இருக்கேன்.. அதான் அப்ளை பண்ணப் போறேன்..”

“அத்தை இதுக்கு ஒத்துக்குவாங்காளா?”

“இப்போதைக்கு சொல்லப் போறதில்ல.. ஆனா காலேஜ்ல ஜாயின் செய்யும் போது சொல்லலாம்னு இருக்கேன்.. ஏற்கனவே மேல படிக்கலாம்ணு இருக்கறதா சொல்லிட்டு தானே இருந்தேன்..’

“சரி மச்சி.. ஆனா அத்தைக்கு தெரிய வந்தா?”

“எப்படியாவது ஒத்துக்க வைக்கணும்.. இல்ல அடுத்தடுத்து மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க.. கொஞ்ச நாளுக்காவது கல்யாணப் பேச்சை எடுக்க வேண்டாம்ணு தோணுது.. அதுக்காகவே எம்.சி.ஏ ஜாயின் பண்ணனும்..”

“நீ சொல்றதும் சரி தான் மச்சி.. ஆனா இப்போ  அத்தைக்கிட்ட என்னன்னு சொல்லிட்டு போவ..?”

“ப்ரண்டை பார்க்கிறேன்னு சொல்லுட்டு போக வேண்டியது தான்.. ஆனா மாமா, அத்தைக்கிட்ட சொல்லிட்டு போயிடுவேன்.. அவங்க புரிஞ்சுப்பாங்க”

“ம்ம் ஓகே.. கவலைப்பாடாத அத்தையும் ஒத்துக்குவாங்க..”

“ம்ம் பார்க்கலாம்.. ஆமாம் நீயும் மேல படிக்கலாம்ணு சொல்லிக்கிட்டு தான இருந்த.. நீயும் என்கூடவே அப்ளை பண்றது தானே..”

“நான் இன்னும் இதைப்பத்தி அப்பாக்கிட்ட பேசவே இல்லடி.. அப்படியே அப்பா ஓகே சொன்னாலும், இங்க சென்னைல பண்ண அப்பா சம்மதிக்க மாட்டாரு..”

“ம்ம் இப்படித்தான் இன்டர்ன்ஷிப் இங்க என்கூட பண்ண மாமா ஒத்துக்க மாட்டாங்கன்னு சொன்ன.. ஆனா அவரை சம்மதிக்க வச்சு நீ என்கூட இன்டர்ன்ட்ஷிப் செய்யலையா?” சொல்லும்போதே இருவருக்கும் அதை கொண்டு சில ஞாபகங்கள் வந்து போக, அதை கட்டாயப்படுத்தி ஒதுக்கினார்கள்.

“அப்புறம் நேத்து  சைலண்ட்னு நினைச்ச புகழ் மாமா பொங்கி எழுந்துட்டாரு.. எப்பவும் டெரர்னு நீங்க சொல்ற மாணிக்கம் மாமா எப்படி பிரச்சனையை சுமூகமாக்க நினைச்சாரு.. நீயும் அறிவும் சும்மாவே அவருக்கு பயப்பட்றீங்கடி..  அவருக்கு ஓவரா ஒரு பில்டப்பை உருவாக்கி வச்சிருக்கீங்க.. நீ வேணும்னா பாரு இதுக்கு மாமா கண்டிப்பா ஒத்துப்பாரு..”

“ஒத்துக்கிட்டா எனக்கும் சந்தோஷம் தான்.. ஆனா இப்போவே அப்பா ஊருக்கு போகறதை பத்தி பேசிக்கிட்டு இருக்கார்.. இப்போ போய் எப்படி  அவர்க்கிட்ட பர்மிஷன் கேக்கறது..”

“சரி நீ ஒரு போட்டோ கொடு.. உன்னோட டீடெயில்ஸ் எனக்கு தெரியுமில்ல.. அதை வச்சு நானே அப்ளை பண்றேன்.. அப்புறம் மாமாக்கிட்ட இதைப்பத்தி பேசுவோம்..”

“சரி ஓகே தரேன்..”

“ஆமாம் நீயும் ஊருக்கு போக போறீயா?”

“அப்பாவும் அம்மாவும் உன்னோட ரெண்டு நாள் இருந்துட்டு தான் வரச் சொன்னாங்க.. ஆனா இப்போ வயலில் நிறைய வேலை இருக்கு.. நான் கூட இருந்தா வீட்டு வேலையை பார்த்துப்பேன்.. இல்ல அம்மாக்கு கஷ்டமா போயிடும்.. அதான் பார்க்கிறேன்.. நீ வருத்தமா இருந்தாலும் பரவாயில்ல, நீதான் இப்போ பரவாயில்லாம இருக்கியே.. அதனால இப்போ போயிட்டு கொஞ்சநாள் கழிச்சு வரேன்.. எப்படியும் ரெண்டுபேரும் சேர்ந்து தானே எம்.சி.ஏ பண்ணப் போறோம்..”

“நீ சொல்றதும் சரி தான் மச்சி.. நீ கூட இருந்தா மங்கை அத்தைக்கு உதவியா இருக்கும்.. அதனால போயிட்டு வா..”

“சரி நாங்க கிளம்பறதுக்குள்ள வந்துடுவியா?”

“எப்போ கிளம்புறீங்க?”

“ஒரு பத்து மணிக்கு மேல கிளம்பலாம்னு அப்பா சொன்னாங்க.. அறிவு அண்ணா நேரா பஸ் ஸ்டாண்ட்க்கு வர்றதா சொன்னான்.”

“நான் அதுக்குள்ள வருவனான்னு தெரியல.. எனக்காக வெய்ட் பண்ண வேண்டாம் நீ கிளம்பு.. நாம அப்புறம் போன்ல பேசுவோம்..” என்றதும் இலக்கியாவும் சரி என்றாள்.

காலையில் மகியே தேனீர் தயாரித்து சுடருக்கும் அறிவுக்கும் கொடுத்தான். அதை குடித்துவிட்டு சுடர் குளிக்கச் சென்றுவிட்டாள்.

“டேய் நல்ல குடும்பஸ்தனா ஒரே நாளிலேயே மாறிட்டடா.. பொண்டாட்டிக்கு டீ ல்லாம் போட்டு கொடுக்கிற..” என்று அறிவு கேளி செய்தான்.

“டேய் பொறாமை படாதடா.. நல்லா பார்த்து வச்சிக்க.. உனக்கு எதிர்காலத்துல உதவும்..”

“அப்போ பார்த்துக்கலாம்.. சரி நான் வீட்டுக்கு போய் ரெடியாகி ரெஸ்ட்டாரண்ட் கிளம்புறேன்.. நீ சுடருக்கு இங்க ஓரளவுக்கு செட்டானதும் வந்தா போதும்.. அப்புறம் சுடருக்கு கீழ் வீடே ஓகேன்னா, விட்டுக்கு பால் காய்ச்சனும், திங்க்ஸ்ல்லாம் வாங்கனும் அதெல்லாம் என்னன்னு பார்த்துக்க.. அப்புறம் ஞாபகமா பெரியம்மாக்கிட்ட பேசிடு..” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.

அடுத்து உடனே மகியும் பூங்கொடிக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினான். வீடு பார்த்து குடி போகும் விஷயத்தை கூறியவன், “இதில் உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையேம்மா..” என்றுக் கேட்டான்.

“நீ இங்க இல்லாதது கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு மகி.. ஆனாலும் தாலிக்கட்டிட்ட பொண்ணை தனியா விட்ற கூடாதுன்னு நினைக்கிற இல்ல. அதை நினைச்சா சந்தோஷமா தாண்டா இருக்கு.. ரெண்டுப்பேரும் எத்தனை நாள் அறிவு ரூம்ல இருக்க முடியும்.. இது நல்ல யோசனை தான்.. சுடருக்கு அந்த வீடு பிடிச்சிருக்கான்னு கேளு.. பிடிச்சுதுன்னா நாளைக்கே நல்ல நாள் தான், உடனே பால் காய்ச்சிடுங்க.. இல்ல சுடருக்கு பிடிச்ச மாதிரி வீடா பாரு..”

“பால் காய்ச்ச நீங்க வருவீங்கல்ல ம்மா..”

“வந்தா கலை என்ன நினைச்சுப்பான்னு தெரியல.. கலை கோபம் குறைய கொஞ்சநாள் ஆகும்.. அதனால வர முடியாதுப்பா.. நான் வரலன்னா என்னடா.. நீங்க ரெண்டுப்பேரும் நல்லா இருக்கனும்னு என்னோட மனசு வாழ்த்திக்கிட்டு தான் இருக்கும்..”

“சரிம்மா.. எதுவா இருந்தாலும் நான் அப்புறம் உங்களுக்கு சொல்றேன்..” என்று இன்னும் சிறிது நேரம் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தவன், பின் எழிலரசியிடம் பேசினான்.

“கல்யாணம் நடந்தவிதம் வருத்தமா இருந்தாலும், நீ சுடருக்கு கிடைச்சது ஒருவிதத்துல மனசுக்கு சந்தோஷமா தான் இருக்கு.. என்ன சுடர் இனி இங்க வரமாட்டேன்னு சொன்னது தான் கஷ்டமா இருக்கு..” என்று எழில் வருத்தமாக கூறினாள்.

“விடுங்க அத்தை சுடர் பத்தி உங்களுக்கு தெரியாததா.. சீக்கிரம் சரியாகிடுவா.. சுடர் உங்கக் கூட வரேன்னு சொன்னாலும் நானும் விட்ருக்க மாட்டேன்.. அதனால வருத்தப்படாதீங்க” என்று தேற்றியவன், அவளிடமும் வீடு குடி போகும் விஷயத்தை கூறினான். முடிந்த அளவுக்கு பால் காய்ச்சும் நேரத்திற்கு வரப் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு எழிலும் அழைப்பை துண்டித்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.