(Reading time: 13 - 26 minutes)

அமேலியா - 48 - சிவாஜிதாசன்

Ameliya

நீங்கள் ஆசைப்பட்ட பொருளோ அல்லது உறவோ இனி கிடையாது என்று தெரிந்தவுடன் உங்கள் மனநிலை என்னவாக இருக்கும். சில உணர்வுகளுக்கு பதில் இல்லாமல் கேள்வி மட்டுமே தேங்கியிருக்கும். அப்படியொரு தேக்க நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் காரை நிறுத்தினான் வசந்த்.

வண்டியின் குலுங்கலில் அமேலியா திகைத்தபடி எழுந்தாள். அவளது இமைகள் படபடத்தன. வசந்த் அமேலியாவைப் பார்க்கவில்லை. அவளின் முகத்தைப் பார்ப்பதை தவிர்த்தான். அவன் இதயம் வேகமாய் துடித்தது. சில நொடிகள் வெறிச்சோடியிருந்த சாலையை வெறித்தான். மீண்டும் காரை உசுப்பி வீட்டை நோக்கி விரட்டினான்.

என்ன நடந்திருக்கும் என்று அமேலியாவிற்கு புரிந்தது. அவள் இதை முன்னமே எதிர்பார்த்திருந்தாள். தனக்கு திருமணம் ஆகிவிட்டதென வசந்த் எண்ணியிருப்பான். அவனது ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது.

நடுநிசியைத் தாண்டி வீட்டை அடைந்தான் வசந்த். சாலை வெறிச்சோடி இருந்ததனால் அவனால் நினைத்ததை விட சீக்கிரமாகவே வீட்டை அடைய முடிந்தது. களைப்பின் காரணமாக அமேலியா மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள். காரை விட்டு கீழே இறங்கினான் வசந்த். அவன் உள்ளம் குமுறிக்கொண்டிருந்தது. தன்னை சாந்தி செய்துகொள்ள சிகரெட்டை பாக்கெட்டினில் தேடினான்; கிடைக்கவில்லை. அவன் ஆத்திரம் மேலும் அதிகரித்தது.

காரில் உள்ள அமேலியாவை நோக்கினான். 'எல்லாம் இவளால் தான். என் ஆசையை நாசமாக்குறதுக்குன்னே வந்திருக்கா. அதுவும் கல்யாணம் செஞ்சிகிட்டு வந்திருக்கா. அவளை சொல்லி என்ன பிரயோஜனம்? எல்லாம் என்னை சொல்லணும்' என்று மனத்திற்குள்ளாகவே புலம்பினான் வசந்த்.

காரை எடுத்துக்கொண்டு எங்காவது செல்லலாமா என்று கூட எண்ணினான் வசந்த். அவன் மனம் நிம்மதியில்லாத நேரத்தில் காரில் தனியாக செல்வது அவனுக்கு பிடித்தமான ஒன்று. நிம்மதி கிடைக்காவிட்டாலும் அதற்கான வழி கிடைக்கும்; நம்பிக்கை கிடைக்கும். ஆனால், அமேலியா உள்ளிருப்பது அவன் எண்ணத்தை தடுத்தது. அவளை இறக்கிவிட்டு காரை எடுத்து செல்லலாம் என்று எண்ணிய வசந்த், காரின் கதவைத் திறந்து அவளை எழுப்ப கைகளை நீட்டினான். ஏனோ அவன் மனம் கேட்காமல் அமைதியாக திரும்பினான்.

வான் மேகங்கள் நிலவின் ஒளியை வாங்கி பளிச்சிட்டு பயணித்துக் கொண்டிருந்தன. அதையே சிறிது நேரம் நோக்கிக்கொண்டிருந்தான். மீண்டும் காரை நோக்கி சென்றவன் கதவைத் திறந்தான். அந்த சப்தம் அமேலியாவை உசுப்பி வேறுபக்கம் அவள் முகத்தை திரும்ப வைத்தது. அவள் அமைதியாகும் வரை பொறுமையாக இருந்த வசந்த், அவள் வரைந்த நோட்டுப் புத்தகத்தை தேடினான். நோட்டுப் புத்தகம் சீட்டின் அடியில் தஞ்சம் புகுந்திருந்தது. வசந்த் குனிந்து வளைந்து போராடி அதை எடுத்தான்.

மீண்டும் அமேலியாவின் மணக்கோலத்தை !? இல்லை! இல்லை!  அவளோடு சேர்ந்து நிற்கும் மணாளனை காண புத்தகத்தை திறந்தான். எதற்காக அந்த வேலையை செய்கிறோம் என்று கூட நினைத்தான். ஆனாலும், அந்த மணமகனை காண எண்ணி அவனை நோக்கினான்.

'இவ்வளவு வயதானவனையா திருமணம் செய்திருக்கிறாள்? இந்த திருமணத்திற்கு அவள் எப்படி சம்மதித்தாள்? இவளின் பெற்றோருக்கு சிறிது கூட அறிவில்லையா?' என பல கேள்விகளை மனதிற்குள் அடுக்கினான் வசந்த்.

அமேலியாவின் மேல் கருணை பிறந்தது. 'என்னவோ! இது அவள் வாழ்க்கை, நாம் வருத்தப்பட்டு என்ன நடக்கப் போகிறது?' என்று முணுமுணுத்தபடி சற்று நேரம் உலாவியவன் புல் தரையில் படுத்து வானை நோக்கினான். அவன் உலகம் சுக்குநூறாகிப் போனதால் அவனையும் மீறி கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

இன்பங்கள் அனைத்தும் தன் வாழ்வை விட்டு வெகுதூரம் சென்று விட்டதாய் எண்ணம் கொண்டான் வசந்த். அந்தளவு அவன் மனம் துன்பங்களால் ஆட்கொள்ளப்பட்டிருந்தது. துன்ப அலைகள் அவனைத் தழுவி தத்துவக் கடலுக்குள் தள்ளியது. துன்பங்கள் மிகுதியாய் இருக்கும் நேரத்தில் தத்துவங்களே மனதை சாந்தப்படுத்துகின்றன.

அமேலியாவிற்கு விழிப்பு வந்தது. நீண்ட தூரம் பிரயாணம் செய்திருந்ததால் அவள் முதுகும் கால்களும் வலி கொண்டிருந்தன. இமைகளைத் திறக்க சில நொடிகள் சிரமப்பட்டாள். மெதுவாய் காரில் இருந்து இறங்கினாள். எங்கும் இருள் சூழ்ந்த அமைதி. வீதியில் ஆங்காங்கே இரவு விளக்குகள். இந்த உலகில் தான் மட்டும் தனியாக இருப்பது போல் சுற்றி மிரட்சி பார்வையை ஓட விட்டாள் அமேலியா.

குளிர் காற்று அவள் உடலை மெல்ல தழுவியது. அவளது கண்கள் காரை நோக்கின. மனம் வசந்தை தேடியது. தான் இருந்த இடத்திலிருந்து சிறிது தூரம் நடந்து வசந்தை தேடினாள். மேற்கொண்டு இருளாக இருந்ததால் பயத்தில் அதற்குமேல் தேடவில்லை.

கார் நின்ற இடத்திற்கு வந்தவள், கீழே வீட்டின் சாவி கிடந்ததைக் கண்டு அதை கையில் எடுத்து சுற்றும் முற்றும் நோக்கினாள். பின்பு இருளடைந்த வீட்டை நோக்கி நடந்தவள், வாசலில் நின்றவாறு வசந்த் எங்காவது தென்படுகிறானா என்று ஒரு முறை நோட்டமிட்டுவிட்டு கதவைத் திறந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.