(Reading time: 13 - 26 minutes)

ஒரு மாத காலமாக வீடு பூட்டப்பட்டிருந்தால் அருவருக்கத்தக்க வாசம் அமேலியாவின் முகத்தில் அறைந்தது. வீட்டு விளக்கிற்கு உயிர் ஊட்டினாள் அமேலியா. நாராயணன் பூஜை செய்யும் மணி சப்தம், தன் மகளை திட்டிக் கொண்டு திரியும் மேகலா, எதைப் பற்றியும் கவலைப்படாமல் சுற்றித் திரியும் நிலா என எந்த ஆரவாரமும் இல்லாமல் ஆழ்ந்த நிசப்தத்தில் வீடு மூழ்கியிருந்தது.

வீட்டின் வெளி விளக்கின் ஒளியில் வசந்த் வருகிறானா என்று சில நிமிடங்கள் நோட்டமிட்ட அமேலியா, டைனிங் டேபிளின் அருகே போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து சிறிது நேரம் கண் விழித்திருந்தாள். பிறகு எப்படி தூங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை.

காலையில் ஏழு மணிக்கு மேல் அமேலியாவிற்கு விழிப்பு வந்தது. கூடவே அவள் உடலில் ஏற்பட்ட களைப்பும் அவளை சிறிது சோர்வாக வைத்திருந்தது. சமையலறையில் பாத்திரங்கள் உருட்டும் சப்தம் அவளது  களைப்பை கலைத்து எழச் செய்தது.

சமையலறையை நோக்கி நடந்தாள். அவள் நுழைவதற்குள் வசந்த் காபி கப்போடு வெளியே வந்து அமேலியாவை பார்க்காமல் நேரே நடந்து டைனிங் டேபிளில் காபி கப்பை வைத்துவிட்டு தன் அறையை நோக்கி நடந்தான். அவன் செல்வதை சிறிது நேரம் வெறித்த அமேலியா காபியை பருகி தொண்டையை நனைத்தாள். பிறகு, நமக்கான வேலை என்னவென்று சிந்தித்தாள்.

வசந்த் வெளியே கிளம்புவது போல் தெரிந்தது. அந்த நேரத்தில் தான் மேகலா வசந்தின் துணியை இஸ்திரி போடுவாள். அமேலியாவும் அதையே செய்ய எண்ணி வசந்தின் அறைக்குள் மெதுவாய் நுழைந்தாள். வசந்த் குளித்துக்கொண்டிருந்தான். படபடவென்று அவன் போடுவதற்கு எடுத்து வைத்திருந்த துணிகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்து இஸ்திரி போட துவங்கினாள்.

குளித்து முடித்து வெளியே வந்த வசந்த் துணிகளை காணாது அதிர்ந்தான். அறையை விட்டு வெளியே வந்து சுற்றும் முற்றும் பார்வையை ஓடவிட்டு அமேலியா துணியை இஸ்திரி செய்துகொண்டிருந்ததைக் கண்டு அவளை நோக்கி சென்றான்.

'என்ன இவன்! டவலை மட்டும் கட்டிக்கொண்டு வெளியே வருகிறான்' என அமேலியா திகைத்தபடி கூச்சப்பட்டாள். அமேலியாவின் பின்னால் வந்து நின்றவன் சிறிது நேரம் அவள் இஸ்திரி செய்வதை வேடிக்கை பார்த்தான்.

அமேலியா எதுவும் நடக்காதது போல் இஸ்திரியில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தாள்.

சிறிது தூரம் நடந்து திரும்பி பார்த்த வசந்த் மீண்டும் அமேலியாவை நோக்கி வந்தான். அமேலியா பயத்தில் கண்களை மூடிக் கொண்டாள். மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தாள். வசந்த் அவளை பார்த்துக்கொண்டிருந்தான். பயத்தில் மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள்.

வசந்த் தலையில் அடித்துக்கொண்டு அயன் பாக்ஸ் செயல்படுவதற்கு சுவிட்சை போட்டுவிட்டு சென்றான். அமேலியா தன் மடத்தனமான காரியத்தை எண்ணி தலையில் அடித்துக்கொண்டாள். பின்பு சமையலறையில் நுழைந்தவள், இலகுவாக தன்னால் செய்ய முடிந்த சமையலை செய்து முடித்தாள்.

தனது அறைக்குள் நுழைந்த வசந்த் இஸ்திரி செய்யாத ஆடை ஒன்றை எடுத்து அணிந்து கொண்டான். தனக்கு தேவையானவற்றை எடுத்து வைப்பதில் மும்முரமானான். சற்று நேரத்தில், பைல் ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு தான் அணிந்திருந்த முழுக்கை சட்டையின் கையை  மடித்தபடி கீழே இறங்கினான்.   

அவனது தட்டை துடைத்து டைனிங் டேபிளில் வைத்தாள் அமேலியா. வசந்த் அவளை கண்டுகொள்ளாமல் டைனிங் டேபிளில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரை மட்டும் பருகிவிட்டு வெளியே சென்றான். சில நிமிடங்களில் கார் புறப்படும் சப்தம் கேட்டது.  

தன் மேல் வசந்த் கோபமாக இருக்கிறான் என்பது மட்டும் அமேலியாவிற்கு புரிந்தது. அவன் தன்னை விட்டு விலகத் தொடங்கிவிட்டான். அது தான் அமேலியாவிற்கும் தேவைப்பட்டது. இருந்தாலும், தனக்கு திருமணம் ஆகிவிட்டதாய் அவனிடம் பொய் சொன்னது அமேலியாவின் மனதை ரணப்படுத்த ஆரம்பித்தது. 

சந்தின் கார் சாலையில் சென்றுகொண்டிருந்தது. அன்று சில திட்டங்கள் மாறியிருந்ததால் அவன் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தான். அது போன்ற குழப்பங்கள் ஏற்படுவது அவனுக்கு வாடிக்கை தான். திட்டங்கள் மட்டும் சரியாக நடந்திருந்தால் அந்நேரம் ஏர்போர்ட்டில் தன் குடும்பத்தினருக்காக காத்திருந்திருப்பான். விமானத்தில் ஏற்பட்ட கோளாறால் திட்டங்கள் மாற்றப்பட்டன. 

பரபரப்பான சாலையை விட்டு சாதாரண சாலைக்கு கார் திரும்பியது. மரக் கூட்டங்களின் நடுவே போடப்பட்டிருந்த அற்புதமான சாலை. இயற்கையை கண்டால் மட்டுமே வசந்தின் வேதனைகள் இலகுவாய் மறைந்துவிடும். இதம் தரும் இயற்கைக்கும் அவனுக்கும் ஏதோ ஒரு பந்தம் இருப்பதாய் அவனுள் ஓர் எண்ணம்.

ஜான் போன் செய்திருந்தான். வசந்த் ஏனோ அவனது அழைப்பை ஏற்கவில்லை. 'என்ன சொல்லப் போகிறான்? இனி நான் இரண்டு மாதம் வர மாட்டேன். நிம்மதியாக இரு. உனது காதலை அமேலியாவிற்கு தெரியப்படுத்த வாழ்த்துக்கள்' இப்படித்தான் ஏதாவது சொல்லுவான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.