(Reading time: 13 - 26 minutes)

கார் வலது பக்கமாய் திரும்பி வேகமாய் சென்றது. டைரக்டர் விஷ்வா எதற்காக நகரத்தை விட்டு இவ்வளவு தூரம் கடந்து வீட்டை கட்டியிருக்கிறார் என அலுத்துக்கொண்டான் வசந்த். இப்பொழுதெல்லாம் அவனுக்கு எதை நினைத்தாலும் கோபம் வருகிறது. காரணம், அமேலியாவாக இருக்கலாம்.

டைரக்டர் விஷ்வா வீட்டின் முன் கார் நின்றது. காலிங்பெல் அழுத்தப்பட்டு கதவு திறக்கப்பட்டது. வெட்டிய கிராப் தலையுடன் குண்டு பெண்மணி கதவை திறந்தாள். அவள் கையில் வைத்திருந்த துடைப்பமும் அழுக்கு உடையும் அவள் வேலைக்காரியென வசந்திற்கு தெரியப்படுத்தியது.

"டைரக்டர் விஷ்வா இருக்காரா?"

"நீங்க?"

"அவர் அசிஸ்டன்ட். பேரு வசந்த்"

"நீங்க தானா அது. அவர் உங்களுக்காக தான் இவ்வளவு நேரம் காத்திருந்தார். நீங்க வர லேட் ஆகவே பக்கத்துல இருக்க ஏரிக்கரைக்கு போயிருக்காரு"

"எங்க இருக்கு?"

"இங்க இருந்து அஞ்சு கிலோமீட்டர் இருக்கும். நிறைய வளைவுகள் இல்லாம நேரா போனீங்கன்னா மூணு கிலோமீட்டர் தூரத்துல நான்கு வழி பாதை வரும். அதுல ரைட் எடுத்து திரும்பினீங்கன்னா அந்த ஏரிக்கரை வரும்"

"நன்றி"

வேலைக்காரி சொன்னனது போல் நான்கு வழிப் பாதையை அடைந்து பின்னர் ஏரிக்கரையை நோக்கி வண்டியை திருப்பினான். மாலை நேரம் நெருங்கிக்கொண்டிருந்ததால் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குழந்தைகளோடு அங்கு கூடியிருந்தனர்.

சிலர் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். சிலர் படகு சவாரி, சிறிது தூரத்தில் இளம் காளையர்களும் மங்கையர்களும் கைப்பந்து விளையாடிக்கொண்டிருந்தனர். சிறிய குழந்தைகள் தங்களுக்கு தெரிந்த விளையாட்டினை விளையாடிக்கொண்டிருந்தனர்.

அந்த கூட்டத்தின் நடுவே டைரக்டர் விஷ்வாவை கண்டுபிடிக்க சிரமப்பட்டான் வசந்த். மரத்தின் அடியில் உள்ள சேரில் அரைக்கை சட்டை அணிந்துகொண்டு கண்களுக்கு கருப்பு கண்ணாடி, கௌபாய் போன்ற தொப்பியை அணிந்துகொண்டு கால் மேல் காலிட்டு அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் விஷ்வா. அவரருகே சென்றான் வசந்த்.

"ஹாய் சார்"

"ஹலோ வசந்த் .உட்காரு" அருகில் இருந்த இருக்கையை காட்டினார்.

வசந்த் அமர்ந்தான்.

"சொல்லு வசந்த் என்ன விஷயம்?"

"சாக்லேட் விளம்பரம் பத்தி தான் சார்"

"கதை தயார் செஞ்சிட்டியா?"

"எஸ் சார்"

"வேற கதை தான?"

"இல்லை சார். அதே கதை தான்"

"அதை தான் வேண்டாம்னு சொன்னேனே"

"உங்களுக்கு வேற மாதிரி சொல்லுறேன் சார்" என அமேலியா வரைந்த நோட்டுப் புத்தகத்தை திறந்து டைரக்டருக்கு கதையை விளக்கினான் வசந்த்.

அரைமணி நேரம் தனது கதையை விளக்கி டைரக்டரின் முகத்தை நோக்கினான். முதலில் அவர் முகத்தில் எந்த சலனமும் இல்லை. பின்பு யோசனை, அதன் பின் திருப்தி.

"இந்த கதை நல்லா இருக்கு வசந்த். அன்றைக்கு ஏன் நீ சரியா சொல்லல?"

"பயம் சார்"

"சொல்லவேண்டிய விஷயத்தை சொல்ல எதுக்கு பயப்படணும்? நீ சொல்லாம வேற யார் சொல்ல முடியும்?"

வசந்த் அமைதியாக இருந்தான்.

"உங்க காதலி இந்த ஓவியம் வரைஞ்சு கொடுக்கலன்னா உன் நிலைமை என்னவாகியிருக்கும்? நல்லா இருக்குற கதையை வேண்டாம்னு சொல்லிட்டாங்களேன்னு உனக்குள்ள இருக்க தாழ்வு மனப்பான்மை அதிகமாகி இருக்கும்"

விஷ்வா சொல்வதும் வசந்திற்கு சரியெனப் பட்டது. வசந்திடம் விசிட்டிங் கார்ட் ஒன்றை நீட்டினார் விஷ்வா.

"இந்த அட்ரஸ்க்கு போய் தயாரிப்பாளரை பாத்து உன் கதையை சொல்லு"

"சரிங்க சார்"

"இந்த ஓவியங்கள் இல்லாம உன்னால கதை சொல்ல முடியுமா?"

வசந்த் விழித்தான். "கொஞ்சம் கஷ்டம் சார்"

"அப்போ இந்த ஓவியங்களை இன்னும் நல்ல உயிரோட்டமா வரைஞ்சு கொண்டு போங்க. அப்போ தான் தயாரிப்பாளருக்கும் திருப்தி வரும். உன்  காதலி கிட்ட சொல்லி வரைய சொல்லு"

வசந்த் அமைதியாக இருந்தான்.

"என்ன யோசனை?"

"சரிங்க சார்.  நீங்க சொன்னது போலவே செய்யுறேன்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.