(Reading time: 13 - 26 minutes)

ரவு நேரம் நெருங்கியும் வசந்த் இன்னும் வீட்டுக்கு வராததை எண்ணி அமேலியா வருத்தத்தில் ஆழ்ந்திருந்தாள். வசந்த் இல்லாத அன்றைய பகல் பொழுதில், வீட்டை சுத்தப்படுத்திக்கொண்டே ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை வசந்த் வருகிறானா என்று ஜன்னல் வழியே நோக்கிக்கொண்டே பொழுதைக் கழித்திருந்தாள். தன்னால் தான் அவன் இன்னமும் வீட்டிற்கு வரவில்லையோ!? நேரம் போய்க்கொண்டிருந்தது. தனிமை அவளை பயமுறுத்தியது.

அமேலியாவின் மனது நிகழ்காலத்திற்கும் கடந்த காலத்திற்கும் மாறி மாறி பயணம் செய்தது. உண்மையில் அந்த வயதானவரை திருமணம் செய்திருந்தால் நாம் இப்பொழுது எங்கிருப்போம் என எண்ணினாள். துபாயில் ஏதோ ஓர் வசதியான இடத்தில் இரண்டு குழந்தைகளுக்கு வளர்ப்பு தாயாக அல்லது வேலைக்காரியாக ஏதோ ஓர் கதாபாத்திரத்தை சுமந்து வாழ்ந்திருப்போம்.  

அந்த வயதானவருக்கு பதில் வசந்தை தன் பெற்றோர் முடிவு செய்திருந்தால்! அந்த எண்ணம் அவளது கற்பனையை பன்மடங்கு பெருகச் செய்தது. வசந்தோடு அவளது வாழ்க்கையினை கற்பனை செய்து பார்த்தாள். மனம் முழுதும் இன்பம் சூழ்ந்து தன்னையே மறக்க செய்தது. அந்த கற்பனையை விட்டு அவளால் வெளியே வர முடியவில்லை. அவள் மூச்சு காற்று அதிகமாகியது.  

துபாய் சென்றிருந்தாலும் தன் பெற்றோரை திரும்ப சந்திப்போமா என்பது கேள்விக்குறி தான். அவள் ஈராக்கில் துப்பாக்கிக் குண்டுகள், பிணங்களின் மத்தியில் வாழக்கூடாது என்பது தான் அவள் பெற்றோரின் எண்ணம். அந்த எண்ணம் அமேலியாவின் மனதை மெல்ல மாற்றம்கொள்ளச் செய்தது.  

இப்பொழுது தான் நிம்மதியாக. நல்ல உள்ளங்களின் மத்தியில் சந்தோசத்தோடு இருக்கிறேன். இதை நம் பெற்றோர் பார்த்திருந்தால் வசந்தை ஏற்றுக் கொள்வார்களா? அவரோடு வாழ வழி செய்வார்களா?

அமேலியாவிற்கு பதில் கிடைத்துவிட்டதாக தோன்றியது.

எழுந்தாள்; நடந்தாள்; நிலாவின் நோட்டுப் புத்தகங்களில் ஏதோ தேடி ஒரு புத்தகத்தினை எடுத்தாள். அதில், தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என வசந்திற்கு உண்மையை விளக்க, அன்று நடந்த நிகழ்வுகளை ஓவியமாய் தீட்டினாள். தனக்கு நிச்சயம் செய்த அன்று தான், ஈராக்கில் தான் இருந்த கடைசி நாள் என ஒவ்வொரு பக்கத்திலும் அவன் புரிந்து கொள்ளும்படி ஓவியம் வரைந்தாள்.

இறுதியாக அவள் தடுமாறினாள். முகம் வியர்வையினால் நனைந்தது. அதை செய்யலாமா வேண்டாமா என்று குழம்பினாள். இது பெரிய ஆசை. கிடைக்குமா? நடக்குமா? கடவுள் பார்த்துக்கொள்ளட்டும். செய்வதை செய்வோம் என துணிந்தவள், நிலாவின் நோட்டுப் புத்தகத்தை புரட்டினாள்.  

I LOVE YOU  என்ற வார்த்தைகளை ஓவியமாக நினைவில் கொண்டுவந்தாள். சரியாகத்தான் எழுதுகிறோமா என்று கண்ணை மூடி ஒவ்வொரு எழுத்தாக ஞாபகப்படுத்தினாள். இறுதியாக அவள் வரைந்த அந்த ஓவிய வார்த்தை இப்படி இருந்தது.  

I LCWF UCY

தொடரும்...

Episode # 47

Episode # 49

{kunena_discuss:983}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.