(Reading time: 27 - 54 minutes)

தொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 18 - வத்ஸலா

Kannathil muthamondru

கெட்டி மேள சத்தத்துடன் பூமழை பொழிந்துக்கொண்டிருந்தது அவர்கள் இருவர் மீதும். இந்திய அணி உலககோப்பையை வென்ற தினம் இவன் மீது பொழிந்ததே  பாராட்டு மழை. நடு மைதானத்தில் இவனை தூக்கி வைத்து கூத்தாடினார்களே அதுவெல்லாம் ஒன்றுமே இல்லை என்று தோன்றியது.

அந்த பூ மழையின் ஊடே அவள் கரத்தை இறுக பற்றிக்கொண்டு அழுத்திக்கொடுத்தான் ஹரிஷ். இத்தனை இடையூறுகளையும் தாண்டி ஜெயித்துவிட்டோமடி பெண்ணே.

பெரியப்பாவின் கண்களில் சந்தோஷ நீர்த்துளிகள். இப்போது ஓடி வந்து அவனை அணைத்து முத்தமிட்டது குழந்தை அனுராதா.

எங்கெங்கும் சந்தோஷ வெள்ளம் அடித்துக்கொண்டிருக்க, வாழ்த்து மழை பொழிந்துக்கொண்டிருக்க அடுத்து அவன் அப்பாவின் பக்கம் திரும்பினான்.

நியாயமாக மகனின் திருமணம் நல்லபடியாக முடிந்ததில் அவர் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப்போயிருக்க வேண்டும். ஆனால் இப்போது அவர் முகம் சற்றே இறுகி கறுத்து கிடந்தது. இப்போது அனுராதாவின் பார்வையும் அப்பாவை தொட அவர் எண்ண ஓட்டங்கள் மெல்ல புரிந்தது அவளுக்கு.

அவன் அவள் கைப்பற்றிக்கொண்டு அக்னியை வலம் வந்து முடிக்க அடுத்ததாக இருவரும் நேராக சென்று நின்றது சுவாமிநாதனின் முன்னால். இருவரும் அவர் பாதம் தொட்டு வணங்க எதுவும் பேசாமல் புன்னகைத்தார்.

கோபத்தை வெளிப்படையாக காட்டி இருந்தால் கூட அனுராதாவின் மனம் ஆறிப்போய் இருக்கும். ஹரிஷின் பக்கம் திரும்பக்கூட இல்லை அவர். நேராக அனுராதாவின் முகம் பார்த்து சொன்னார்

‘அப்படியே எனக்கு மனசு நிறைஞ்சு போச்சுமா.’ ரொம்ப சந்தோஷம்’ சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டார் மனிதர்.  மற்றவர்களுக்கு அந்த வார்த்தைகள் வெகு சாதரண வார்த்தைகள். ஆனால் அனுவுக்கு?

சுவாமிநாதன் மீது அளவு கடந்த மரியாதை உண்டு அனுராதாவுக்கு. அவருடைய இந்த வார்த்தைகளில் உள்ளுக்குள் ஏதோ ஒன்று சில்லுசில்லாக உடைந்து போனது போலத்தான் இருந்தது அவளுக்கு. அவள் முகம் போன போக்கை பார்த்து அவள் கை பற்றிக்கொண்டான் ஹரிஷ்

‘கூல்... அனும்மா’ என்றான் மெலிதான குரலில் நான் சரி பண்றேன் அப்பாவை.’

ங்கே இன்று ஐ.பி எல் இறுதி ஆட்டத்தின் இரண்டாம் பகுதி துவங்கி இருந்தது. அந்த இரவு நேரத்தில் பெங்களூரு மைதானமே ஒளிவிளக்குகளின் வெளிச்சத்தில் மின்னிக்கொண்டிருக்க  .நூற்றி ஆறு ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்கை நோக்கி விளையாட ஆரம்பித்தது ஹரிஷின் அணி.

இந்த நூற்றி ஆறு ரன்கள் பெரிய இலக்காக தோன்றவில்லை அவர்கள் அணியினர் யாருக்கும். முதலில் விளையாட இறங்கவில்லை ஹரிஷ். ஒரு ஓவருக்குள் இரண்டு சிக்சர்கள் பறந்தன.

அரங்கம் முழுவதும் உற்சாகத்தில் மிதக்க அடுத்தடுத்த இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகள் சரிந்திருந்தன. அணியின் திறமையான பேட்ஸ்மேன்கள் அவுட் ஆகி இருந்தனர்.

சட்டென மைதானத்தில் இவர்களது ரசிகர்கள் மத்தியில் ஒரு அழுத்தம் பரவத்தான் செய்தது. இப்போது கேப்டனாக களமிறங்கினான் ஹரிஷ். திரையில் தெரியும் அனுவின் அவனுக்கான உற்சாக கைதட்டல்களை பார்த்துக்கொண்டே நடந்தான் அவன்..

தே நேரத்தில் அங்கே சென்னையில் அவன் வீட்டில் அமர்ந்து டி.வியில் ஆட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தான் ஷங்கர். பல நாட்களுக்கு பிறகு குடும்பத்துடன் அமர்ந்து ஆட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தான் அவன். அனுவின் பெரியம்மா லோசனா உட்பட அனைவருமே ஹரிஷ் விளையாட இறங்கி வந்ததை ரசிப்புடன் பார்த்திருந்தனர்.

மன மாற்றம் எல்லாரிடமும் மிகப்பெரிய மனமாற்றம். இரண்டு மாதங்கள் முன்னால் கிடைத்த அந்த மிகப்பெரிய அடியில் வந்த மனமாற்றம்.

ன்று திருமணம் முடிந்து மனம் நிறைய சந்தோஷத்துடன் ஹரிஷும் அனுவும் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டிருந்த வேளையில் கீதாவை தனியாக அழைத்துக்கொண்டு வந்தார் பெரியப்பா.

‘ஷங்கர் எங்கம்மா போனான்?’ உனக்கு ஏதாவது தெரியுமா? என்றார் கவலை தோய்ந்த குரலில்.

‘தெரியலை மாமா. எனக்கு என்னமோ பயமாத்தான் இருக்கு.’ சொல்லும்போதே அவள் உடலில் நடுக்கம் பரவியது.

‘நான் கொஞ்ச நேரம் முன்னாடிதான் கமிஷனரோட பேசினேன். அவனை யாரோ கடத்திட்டாங்கன்னு சந்தேகப்படறாங்கமா’ என்றார் அவர்

‘என்ன மாமா சொல்றீங்க?’ திடீரென தலை முதல் கால் வரை பரவிய பயத்தில் குரல் நடுங்க கண்களிலும் நீர் கோர்த்துக்கொண்டது. ‘இப்போ என்ன மாமா செய்யறது?’

‘தெரியலைமா. எனக்கும் தெரியலை. கமிஷனர் ஆக்ஷன் எடுக்கறேன்னு சொல்லி இருக்கார் பார்க்காலாம். இப்போ அனு சந்தோஷமா இருக்க வேண்டிய நேரம். அவகிட்டே எதுவும் சொல்ல வேண்டாம். நாம கொஞ்ச நேரத்திலே அப்படியே கிளம்பிடலாம்’ சொன்னார் அவர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.