எதிரில் நின்றவனை அருகில் அழைத்து அவன் தோளை அணைத்துக்கொண்டான். ‘எல்லாம் சரியாக இருக்கிறது’ என்பதை போன்ற நம்பிக்கையை கொடுத்தது அந்த அணைப்பு.
‘யூ கேன் டூ இட் மேன். கப் இஸ் அவர்ஸ்’ என்றான் புன்னகையுடன். ஹரிஷின் முகத்தை பார்த்தவனின் முகத்தில் சின்னதாய் ஒரு நம்பிக்கை கோடு. அடுத்த இரண்டு பால்கள் பறந்தன பௌண்டரிக்கு. தொடர்ச்சியாய் இரண்டு ஃபோர்கள். அதிர ஆரம்பித்தது அரங்கம்.
ஹரிஷுக்கே வியப்பாகத்தான் இருந்தது. ‘நேர்மறை வார்த்தைகளுக்கும், எண்ணங்களுக்கும் இத்தனை சக்தியா?
அடுத்து விளையாடுவது ஹரிஷின் முறை தொடர்ச்சியாய் இரண்டு சிக்ஸர்கள்’ அரங்கம் துள்ளியது உற்சாகத்தில். இவன் கொடுத்த நம்பிக்கையிலும், உற்சாகத்திலும் அந்த பேட்ஸ்மேனும் தைரியமாய் விளையாட அணி மடமடவென நகர்ந்தது வெற்றியை நோக்கி.
இன்னும் இருபது பந்துகள் மிச்சமிருந்த நிலையில் ஆறு ரன்கள் மட்டுமே தேவையாக இருக்க அரங்கமே ஹரிஷ் ஒரு சிக்ஸர் அடிப்பான் என எதிர்பார்த்து
‘ஹரி..ஷ் ஹ..ர்ரி...ஷ் என அரங்கமே கூவிக்கொண்டிருக்க, அனுவும் அதையே எதிர்ப்பார்த்து எழுந்து முன்னே வந்து நின்று விட்டிருந்தாள். ஆனால் அவனை நோக்கி வந்த இரண்டு பந்துகளிலும் ரன் எடுக்கவில்லை அவன்.
அடுத்த ஓவர். இப்போது எதிராளியின் முறை ‘யூ கேன் டூ இட் மேன். கப் இஸ் அவர்ஸ். கோ அஹெட் மேன்’. அவன் தோள் தட்டி சொன்னான் ஹரிஷ். அவன் விட்டுக்கொடுக்கிறான் என அழகாய் புரிந்தது அனுவுக்கு.
‘ஒரு அணித்தலைவனுக்கு இதுவும் அழகுதானே. அனு சந்தோஷமாய் கைதட்ட இப்போது பந்து பறந்தது சிக்ஸருக்கு. ஹரிஷ் ஓடிச்சென்று அணைத்துக்கொண்டான் அவனை. ஹரிஷின் தலைமையில் அணி வென்றுவிட்டிருந்தது ஐ.பி.எல் கோப்பையை.
அனு மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயிருக்க, துள்ளி குதித்துக்கொண்டிருக்கும் ரகுவையே குற்ற உணர்ச்சியுடன் பார்த்திருந்தாள் ஸ்வேதா.
வாணவேடிக்கைகளும், சந்தோஷ கொண்டாட்டங்களும் களைகட்ட ஐ.பி.எல் கோப்பையை வாங்கினான் ஹரிஷ். சந்தோஷ கண்ணீருடன் கைதட்டிக்கொண்டே இருந்தாள் அனுராதா. அவளையே பார்த்திருந்தார் சுவாமிநாதன்.
‘வீட்டுக்கு வந்துவிடு என் மருமகளே’ சொல்லிவிடலாமா அவளிடம்? ஒரு பக்கம் மனது கிடந்தது தவித்தது அவருக்கு. ஆனால் உள்ளுக்குள் ஏதோ ஒன்று சொல்லவிடாமல் தடுத்துக்கொண்டே இருந்தது.
எப்படியும் அவள் அவன் வரும் வரை காத்திருந்து அவனுடன் பேசுவாள் என அவர் எதிர்பார்த்திருக்க அவன் கொண்டாட்டங்களை முடித்துக்கொண்டு வருவதற்கு முன்பாகவே கிளம்பி இருந்தாள்.
கிளம்புவதற்கு முன்னால் அவரை பார்த்து ‘சின்னதாய் ஒரு தலை அசைப்பு, ஒரு புன்னகை நகர்ந்துவிட்டிருந்தாள் பெண்.’
எத்தனை வைராக்கியம் இந்த சின்ன பெண்ணுக்கு. நினைக்கும் போதே சற்று பெருமையாக கூட இருந்தது அவருக்கு.
அன்று ஷங்கரை ஹரிஷ் காப்பாற்றி விட்டு வந்த பிறகு இவர்களுக்குள் நடந்த விவாதங்கள் இன்னமும் பசுமையாய் நினைவிருக்கிறது இவருக்கு.
திருமணம் நடந்த மறுநாள். அன்று மாலையில் இவர்கள் இருவருக்கும் திருமண வரவேற்பு நடக்கவிருந்தது. காலையிலிருந்து இவர் அறையை விட்டு வெளியே வரவே இல்லை. ஹரிஷும் அனுவுமாகத்தான் அறைக்குள் நுழைந்தார்கள்.
அனுவை நேராக பார்த்து கேட்டார் சுவாமிநாதன் ‘யாரும்மா நீ?’ அதிர்ந்தாள் அனு.
‘மாமா என்ன மாமா நீங்க?’
‘மாமா வா? ஓ... நீ இந்த வீட்டு மருமகன்னு சொல்ல வரியா?’ அவர் நக்கலாக கேட்க
‘அப்பா..’ ஹரிஷ் இடைபுக
‘நீ வாயை மூடு’ அவனிடம் பாய்ந்தார் மனிதர். ‘பேச்சு எனக்கும் அவளுக்கும். அவளுக்கு நான் கேட்கிற கேள்விக்கெல்லாம் பதில் சொல்ற கடமை இருக்கு’ அவர் கத்திய விதத்தில் கொஞ்சம் பயந்துதான் போனாள் அனு. அதன் பிறகு அவள் பக்கம் திரும்பினார்.
‘அன்னைக்கு உன்னை முதல்லே பார்த்தப்போவே இந்த குடும்ப மரியாதையை நீ காப்பாத்தணும்னு நான் சொன்னேன். கல்யாணத்துக்கு வரும் போதே டேக்சியிலே வந்து இறங்கின அதிலே பாதி மரியாதை போச்சு..’
‘மாமா ..’ அவள் ஏதோ சொல்ல வர அவள் முன்னாடி கை நீட்டி அவள் பேசுவதை தடுத்தார்.
‘அது சூழ்நிலைன்னு சொல்லப்போறே. சரி அது சூழ்நிலை. உங்க வீட்டிலே இருந்து யாரும் வரகூடாதுன்னு சொன்னேன். கூடவே கீதாவை கூட்டிட்டு வந்தே அதுவும் சூழ்நிலை. சரி. அவளே தாலி முடிஞ்சா அதுவும் சூழ்நிலை. சரி. அதுக்கு அப்புறம் ஷங்கரை ஓடி போய் காப்பாத்தினான் என் பிள்ளை. அதுவும் சூழ்நிலை. இப்படியே சூழ்நிலை சூழ்நிலைன்னு சொல்லி நான் சொன்ன ஒரு வார்த்தைக்கு கூட நீ மரியாதை கொடுக்கலை. இப்போ வந்தது வாய் கூசாம மாமான்னு கூப்பிட உனக்கு என்ன தைரியம்? ம்?’ அவர் படபடத்த தொனியில் அத்தனை சூடு.
‘இல்ல மாமா’