(Reading time: 27 - 54 minutes)

நேரம் ஆக ஆக இவர்களுக்குள் இன்னமும் அதிகமாக பயம் பரவத்துவங்கியது. லோசனாவிடமிருந்து கால் மணி நேரத்துக்கு ஒரு முறை அழைப்பு வந்துக்கொண்டே இருந்தது. அனுராதாவிடம் எதையும் சொல்லிக்கொள்ளாமல் எதையோ சாப்பிட்டோம் என்று பெயருக்கு சாப்பிட்டுவிட்டு கிளம்பி இருந்தனர் இருவரும்.

‘சந்தோஷமா இரும்மா. பெரியப்பா அப்பபோ வந்து பார்க்கிறேன்’ பெரியப்பா அனுவின் கையை பிடித்துக்கொண்டு சொல்ல எட்டிப்பார்க்க துடித்த கண்ணீரை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக்கொண்டாள் அவள்.

பெரியப்பாவுக்கு மட்டும் விடை கொடுத்தான் ஹரிஷ். கீதாவின் பக்கம் திரும்பக்கூட இல்லை. அவள் செய்தவகைளை போகட்டும் என்று மன்னிக்க முடிந்த அவனால் எல்லாவற்றையும் மறந்து அவளிடம் முன்பு போல் நட்பு பாராட்ட முடியவில்லை..

ஷங்கர் அன்று செய்தவற்றுக்கான தண்டனையை அவன் இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கிறானோ என்றும் ஒரு பயமும் கீதாவை  உலுக்கிக்கொண்டிருந்தது யாரிடமும் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் விடைபெற்றனர் இருவரும்.

தே நேரத்தில் தான் எங்கே அடைத்து வைக்கப்பட்டிருக்கிறோம் என்றே அறியாத ஒரு இடத்தில் இருந்தான் ஷங்கர். இரண்டு நாட்களுக்கு முன் அவன் கைது செய்த அந்த எம்.எல்.ஏ மகனால் வந்தது இந்த வினை.

இரண்டு நாட்களுக்கு முன்னால் ஒரு பப்பில் நடந்த ஒரு தகராறில் அங்கிருத்த அனைவரையும் கைது செய்துக்கொண்டு வந்திருந்தான் ஷங்கர். அதில் அந்த எம்.எல்.ஏ மகனும் அடக்கம். அவன் தனது அதிகாரத்தையும் செல்வாக்கையும் வைத்து இவனிடம் விளையாட பார்க்க ஷங்கரின் லத்தி அவனிடம் கண் மண் தெரியாமல் விளையாடி இருந்தது.

சில மணி நேரங்களில் ஜாமீனுடன் அவன் வெளியே சென்றதும் அதோடு இவன் அதை மறந்திருந்தான் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அந்த எம்.எல்.ஏ வால் அதை மறக்க முடியவில்லை. மகன் மீது விழுந்த ஒவ்வொரு அடிக்கும் பதில் கொடுக்கவே கடத்தியிருந்தான் ஷங்கரை.

இரவு முழுதும் நரகம் என்றால் என்ன என்பதை கண்கூடாக கண்டிருந்தான் ஷங்கர். உடலும் மனமும் ரணமாகிக்கிடந்தன. அரை மயக்க நிலையில் கிடந்தான் அவன்.

சில மணி நேரங்கள் கடக்க அவரது உடல் நிலை இன்னமும் மொத்தமாக சீர் அடைந்து இருக்கவில்லை என்பதால் தாத்தாவின் ஊருக்கே சென்றிருந்தனர் பெரியப்பாவும், கீதாவும்.  

ஷங்கரை பற்றி தகவல் எதுவுமே இதுவரை அவர்களுக்கு கிடைக்கவில்லை.

பொதுவாக அவனது உத்தியோக விஷயங்களை வீட்டில் யாரிடமும் அவன் பகிர்ந்துக்கொள்வதும் இல்லை என்பதால் வீட்டில் எந்த ஒரு ஊகமும் செய்ய முடியாத நிலையில் தான் இருந்தனர் அனைவரும். உடைந்து போய் அமர்ந்திருந்தார் லோசனா. அழுது அழுது ஓய்ந்திருந்தாள் கீதா.

‘நம்ம பையனை யார் எதுக்கு இப்படி கடத்தி வெச்சிருக்காங்கனு தெரியலையே’ லோசனா புலம்பிக்கொண்டிருக்க எப்படி வந்தது என்று தெரியாமலே பெரியப்பா வாயிலிருந்து அந்த வார்த்தை வந்தது

‘ம்? அவனுக்கு ரொம்ப திமிருன்னு கடத்தி வெச்சிருக்காங்க. நீதான் பெரிய ஆளாச்சே அவன் எங்கேன்னு கண்டு பிடியேன்’ என்றார் தளர்ந்த குரலில்.

திடுக்கிட்டு நிமிர்ந்தார் லோசனா.

‘என்ன பார்க்குறே. இது நீ ஹரிஷை உன் பையன் அர்ரெஸ்ட் பண்ணி வெச்சப்போ சொன்னதுதானே?’ என்றார் அவர் மனைவியின் முகம் பார்த்தபடியே.

‘அவன் தப்பு செஞ்சிருக்க மாட்டான்ன்னு நம்ம எல்லாருக்குமே தெரியும். ஏன் உன் பையனுக்கே தெரியும்.. எல்லாரும் சேர்ந்து ஆடினோம். நாம ஆடி முடிச்சதும்  ஆண்டவன் ஆடறான் அவ்வளவுதான்’ சொல்லிக்கொண்டே கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டார் பெரியப்பா.

உண்மை சுட்டெரிக்க பேச்சே எழவில்லை. லோசனாவுக்கு. இரவு நெருங்க நெருங்க இன்னமும் பயம் அதிகமானது எல்லாருக்கும். அவன் காணாமல் போய் கிட்டத்தட்ட இருபத்து நான்கு மணி நேரங்கள் ஆகி இருந்தன.

உணவு தண்ணீர் என எதுவும் இல்லாமல் கிழிந்த நாராக கிடந்தான் ஷங்கர். அதே நேரத்தில் அங்கிருந்து தப்பிக்கும் வழிகளை யோசித்துக்கொண்டிருந்தது அவன் போலிஸ் மூளை.

நிஜமாகவே அவனை தேடத்தான் செய்கிறார்களா போலீசில். இல்லை தேடுவதைப்போல் பாவனை செய்கிறார்களா?  அதுவும் புரியவில்லை யாருக்கும். யாரை நம்புவதாம் யாரை விடுவதாம் இந்த காலத்தில்?

‘இறைவா என் மகனை உயிருடன் மீட்டுத்தா? என்று வேண்டிக்கொள்வதை தவிர வேறே வழி ஏதும் தெரியவில்லை மூவருக்கும்.

தே நேரத்தில்

அங்கே வீட்டில் உணவு மேஜையில் அமர்ந்து எல்லோரோடும் அமர்ந்து இரவு உணவை சுவைத்துக்கொண்டிருந்தாள் அனுராதா. திடீரென அவள் கைப்பேசிக்கு அழைப்பு.

‘அனு அனு நான் ஷங்கர். இங்கே என்னை அடைச்சு வெச்சிருக்காங்க. சரியா எந்த இடம்னு தெரியலை. எப்படியாவது இந்த நம்பரை ட்ரேஸ் பண்ணி போலிஸ் இங்கே வர சொல்லு’

‘ஷங்கர்... ஷங்கர்... ஹலோ என்னாச்சு..’ அனு பதற அதற்குள் துண்டித்துவிட்டான் அழைப்பை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.