(Reading time: 27 - 54 minutes)

‘மாமான்னு கூப்பிடாதே’ அவர் எகிற

‘நான் மாமான்னுதான் கூப்பிடுவேன்’ இவள் பதில் கொடுக்க ஓரமாய் சென்று அமர்ந்துவிட்டான் ஹரிஷ்.

‘இப்போ கூட சொல்றேன் மாமா. உங்க மேலே நான் அளவு கடந்த மரியாதை வெச்சிருக்கேன். இதுவரைக்கும் நடந்தது எல்லாத்துக்குமே என் சூழ்நிலைகள்தான் காரணம். சரி இனிமே நீங்க கிழிச்ச கோட்டை நான் தாண்ட மாட்டேன். சொல்லுங்க. உங்க மனசு இப்போ ஆறணும்னா நான் என்ன செய்யணும்’ அவள் கேட்க பொங்கிக்கொண்டிருந்த அவரது ஆத்திரம் தணியவே இல்லை.

‘நான் சரின்னு சொல்ற வரைக்கும் நானா கோபம் தணிஞ்சு உன்னை வீட்டுக்கு வான்னு கூப்பிடுற வரைக்கும் நீ இந்த வீட்டுக்கு வரக்கூடாது, ஹரிஷை பார்க்ககூடாது, பேசக்கூடாதுன்னு சொன்னா செய்யாம இருப்பியா’ அவர் பட்டென கேட்க எழுந்தே விட்டான் ஹரிஷ்.

‘அப்பா விளையாடுறீங்களா?’

‘நீ கொஞ்சம் பொறுமையா இரு ஹரிஷ்’ சொன்னவள் ‘நான் அப்படி செய்யறதுனாலே உங்க மனசு ஆறும்னா நான் காத்திருக்கேன் மாமா. இன்னைக்கு ரிசப்ஷன் முடிஞ்சதும் எங்கேயாவது ஹாஸ்டல் போயிடறேன் நான். அதுக்கு அப்புறம் நீங்க கூப்பிட்டதும்தான் வருவேன். அது உங்களுக்கு சரியா?’

‘அனும்மா.. லூசா நீ? என்ன பேசறேன்னு யோசிச்சு பேசு’ ஹரிஷ் சொல்ல

‘நான் யோசிச்சுதான் சொல்றேன் ஹரிஷ்’ என்றாள் அவள் உறுதியாக ‘உண்மையிலேயே ஆரம்பத்திலிருந்து நம்ம காதலுக்காக நிறைய காம்ப்ரமைஸ் பண்ணிகிட்டது மாமாதான். அவர் மனசு வருத்தப்பட வெச்சிட்டு நாம வாழ்கையை ஆரம்பிக்கறது சரி இல்லை ஹரிஷ் புரிஞ்சுக்கோ’ அவள் சொல்ல ஜன்னலுக்கு அருகில் சென்று வானத்தை வெறித்தப்படி நின்றிருந்தார் அவர்.

இவள் வீட்டை விட்டு போனால் ஊருக்குள் வரும் தவறான பேச்சுக்கள் பற்றி எல்லாம் இருவருமே கவலைப்படவில்லை. அவரவர்கள் அவரவர் பிடியில் நின்றார்கள். ஹரிஷின் வாதம், அவனது அண்ணன் அண்ணி பேச்சு எதுவுமே எடுபடவில்லை. கடைசியில் எல்லாரும் ஒப்புக்கொள்ள வரவேற்பு முடிந்ததும் கோவையில் அவர்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு ஹாஸ்டலில் சென்று தங்கிக்கொண்டாள் அனுராதா.

இதில் இன்னொரு பெரிய விஷயம் என்னவென்றால் அவள் அங்கே இருப்பது இந்த நிமிடம் வரை அவள் பெரியப்பா குடும்பத்துக்கு தெரியாது. பெரியப்பாவிடம் தவிர மற்ற யாரிடமும் அவள் பேசுவதும் கிடையாது. இதையும்  சுவாமிநாதனால் கொஞ்சம் ஊகிக்க முடிந்ததுதான்.

ஹரிஷ் கோப்பையை வாங்கிக்கொண்டு வருவதற்குள் அந்த அரங்கத்தை விட்டு வெளியேறி இருந்தாள் அனுராதா.

றுநாள் மாலை. பெங்களூரு விமான நிலையம்.

சென்னை செல்லும் விமானத்திற்காக ஹரிஷும் தந்தையும் மற்றும் சில வீரர்களுடன் காத்திருந்தனர். ஹரிஷ் வெகு இயல்பாக, உற்சாகமாக அவருடன் பேசிக்கொண்டே வருவதே அவரை உறுத்திக்கொண்டே இருந்தது.

‘இந்த பெண்ணை வீட்டுக்கு வாவென ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம். வயதான காலத்தில் எனக்கெதுக்கு இந்த வறட்டு கௌரவம். ஊருக்கு கிளம்பி போயிருக்குமோ என்னவோ அது? இப்படியாக அவர் மனம் சுழன்றுக்கொண்டிருந்த வேளையில் அந்த வி.ஐ.பி  லாஞ்சில் வந்து அமர்ந்தாள் அனுராதா.

அவளை பார்த்த மாத்திரத்தில் இங்கே ஹரிஷின் முகமெல்லாம் சந்தோஷ பூக்கள். ‘இவளும் நம் விமானத்திலேயே வருகிறாளா என்ன?’

மனம் தாறுமாறாக தவித்தாலும் அவளை விட்டு பார்வையை திருப்பிக்கொண்டார் அவள் மாமனார். அவர் மன ஓட்டங்கள் புரியாதவளும் இல்லை அனுராதா. இதழ்களுக்குள் ஓடிய சிரிப்பை மறைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் அவள்.

‘லவ் யூ அனும்மா’ ‘லவ் யூ ஹரிஷ்’ இருவர் விழிகளும் ஒன்றை ஒன்று சந்தித்துக்கொண்ட வேளையில் பளிசென்ற வெள்ளை சீருடையில் அந்த விமானத்தின் படிகளில் விறுவிறுவென ஏறினான் அவன். காக்பிட்டினுள்  சென்று அமர்ந்தான் தனது சிம்மாசனத்தில்.

அடுத்து பயணிகள் ஏறுவதற்கான அறிவிப்பு வர ஹரிஷ், ரகு ஸ்வேதா உட்பட  எல்லாரும் ஏறி அமர்ந்தனர் விமானத்தில். ஹரிஷும் அவனது தந்தையும் அருகருகே அமர்ந்திருக்க அவனது இடப்பக்க வரிசையில் அவனுக்கு முன் சீட்டில் அமர்ந்தாள் அனுராதா.

ரகுவும் ஸ்வேதாவும் இரண்டு வரிசைகள் தள்ளி முன்னால் அமர்ந்திருக்க, ஹரிஷுக்கு முன் வரிசையில் வந்து அமர்ந்தான் அவன் பரம் அகர்வால். அமர்வதற்கு முன்னால் அவன் விழிகள் ஒரு முறை ஹரிஷை தொட்டு விலக தவறவில்லை.

அப்போது விமானத்தில் ஒலித்தது அந்த குரல். அந்த விமானத்தின் கேப்டனின் குரல்’

'குட் ஈவ்னிங் லேடீஸ் அண்ட் ஜென்டில்மென்... திஸ் இஸ் யுவர் கேப்டன் 'விவேக் ஸ்ரீனிவாசன்'. ப்ளீஸ் ஃபாசென் யுவர் சீட் பெல்ட்ஸ் ..... இட்ஸ் டைம் ஃபார் டேக் ஆஃப்...'

அந்த குரலில் நிறைய பயணிகளின் முகத்தில் சிறிய புன்னகை. இவர்கள் மட்டுமில்லாமல் அந்த குரலை கேட்பதற்காகவே காதில் மாட்டி இருந்த ஹெட் போனை சட்டென விலக்கிவிட்டு அந்த குரலை கேட்டு சிலாகித்து புன்னகைத்தாள் அவள். அவள்தான் அவனவள் என அந்த கேப்டனே அறியாத அவனவள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.