(Reading time: 27 - 54 minutes)

அடுத்த சில நிமிடங்களில் ஓடு பாதையில் வேகமெடுத்தது விமானம். மாலை மங்கி இருள் சூழ ஆரம்பித்த நேரம் அது. வழக்கமான பாதுகாப்பு நடை முறைகளுக்கான அறிவிப்புகள் ஒரு முறை சொல்லப்பட்டு முடிந்திருந்தன.

கிட்டத்தட்ட கால் மணி நேரம் கடந்திருந்த நிலையில் விமானத்தை செலுத்திக்கொண்டிருந்த நமது தலைவனின் முகத்தில் லேசாக சில மாற்றங்கள். இத்தனை வருட அவனது விமான பயணத்தில் அவன் சந்தித்திராத ஒரு விஷயம் நடந்தது. இது எப்படி நடந்தது என்று அவனாலேயே கணிக்க முடியவில்லை. இதைதான் விதி என்பார்களோ?

‘உன்னோட ஃபளைட்லே ட்ராவெல் பண்ற எல்லாரோட உயிரும் அப்பா உயிருக்கு சமம். அதை மட்டும் எப்பவும் உனக்கு சொல்லிக்கோ.’ அவனது அப்பாவின் வார்த்தைகள் எப்போதும் போல் இப்போதும் அவன் செவிகளில் ரீங்காரம்.

‘காப்பதிடுவேன்பா. எல்லா உயிரையும் காப்பாத்திடுவேன்’ ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை நிதானப்படுதிக்கொண்டு சொல்லிக்கொண்டான் தனக்குள்ளே.

அடுத்து செய்ய வேண்டிய நடவடிக்கைகளை கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு பேசிக்கொண்டிருந்தான் நம் விவேக்.

இங்கே பயணிகளுக்கு இன்னொரு முறை பாதுகாப்பு வழிமுறைகளை பற்றி சொல்ல ஆரம்பித்திருந்தனர் குழுவினர். லேசாக சந்தேகம் கிளம்பியது அனுராதாவுக்கு. அவசர நிலைகளில் தானே இது போன்ற செயல்கள் நடக்கும்? யோசிக்க ஆரம்பித்தாள் அவள். இதற்கெல்லாம் பழக்கப்பட்டவள் அல்லவா அவள்?

‘என்ன நடக்கிறது அங்கே? அவள் விசாரிக்க.

‘ஒன்றுமில்லை. விமானத்தில் ஒரு சிறிய கோளாறு. சீக்கிரம் சரி செய்யப்படும்’ என்றார்கள்.

‘காக்பிட்டில் இருக்கும் சில பொருட்கள் அங்கிருந்து எடுக்கபட்டு பின்னால் கொண்டு செல்லப்பட்டன. எல்லாரிடமும் லேசான பயம் தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது.

இப்போது மறுபடியும் ஒலித்தது நம் விமானியின் குரல் ‘லேடீஸ் அண்ட் ஜென்டில்மென். திஸ் இஸ் விவேக் ஸ்ரீனிவாசன் அகைன். வீ ஆர் இன் ஃபார் ஏன் எமர்ஜென்சி லேன்டிங். வீ ஆர் ஆன் தி வே டு பெங்களூரு அகைன். ப்ளீஸ் ஃபாசென் யுவர் சீட் பெல்ட்ஸ்’

அவசரமாக தரை இறங்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால் நாம் மறுபடியும் பெங்களூருக்கு திரும்புகிறோம்.’ என்றான் அறிவிப்பில்.

என்ன நடந்தது என்று அவன் தனது அறிவிப்பில் அறிவிக்கவில்லை என்றாலும்  மெல்ல பரவியது அந்த செய்தி. விமானத்தின் முன் பக்கத்தில் இருந்த ஒரு சக்கரம் விமானத்தை விட்டு கீழே விழுந்திருந்து. இனி தரை இறங்கும் போது எதுவும் நடக்கலாம். விமானம் பெங்களூருவை நோக்கி பறந்துக்’கொண்டிருந்தது

பொதுவாகவே இப்படி ஒரு விஷயத்தை கண்டுபிடிக்காமல் விமானத்தை தரை இறக்கினால் மிக பெரிய ஆபத்து நேரும். இப்போது? இப்போதும் எதுவும் நடக்கலாம். ஒரே நிமிடம். ஒரே நிமிடத்திற்குள் எல்லார் முகத்திலும் அப்பட்டமான ஒரு பயம் பரவியது. ஒரு சில கண்களில் கண்ணீர்.

அருகில் அமர்ந்திருந்த ரகுவின் கைகளை பிடித்துக்கொண்டாள் ஸ்வேதா.

‘நான் உங்களுக்கு தப்பு செஞ்சிட்டேனோ?’ என்றாள் நடங்கும் குரலில். ‘உங்களை கிரிக்கெட் ஆட விடாமல் செய்திட்டேனோ?’

‘விடுடா. இப்போ எதுக்கு அதெல்லாம்?’

‘இல்ல கிரிக்கெட்னாலே ஏதாவது ஆகிடும்னு நான் நினைச்சேன். ஆனா இப்போ பாருங்க இப்படி திடீர்னு என்னெனவோ நடக்குது. இப்போதான் புரியுது மரணம்ங்கிறது நம்ம கையிலே இல்லைன்னு. நான் தப்பு செஞ்சிட்டேன்.’

‘அதெல்லாம் இல்லைடா.’ என்றபடியே அவள் உச்சந்தலையில் அழுந்த முத்தமிட்டான் ரகு.

‘இல்ல. இல்ல இப்போ மட்டும் நாம பிழைச்சுக்கிட்டா நீங்க சந்தோஷமா கிரிக்கெட் ஆடுங்க. நானும் சந்தோஷமா வந்து பார்ப்பேன். உங்களுக்கு அப்போ டீம்லே இடம் கிடைக்குமில்ல?

‘அதெல்லாம் கிடைக்கும்டா’ அவன் மெல்ல சிரிக்க 

‘ஆண்டவா நிஜமா நான் அவரை கிரிக்கெட் ஆட விடுவேன். தயவு செய்து எங்களை காப்பாத்து’ கண்ணீருடன் மேல் நோக்கி கைகூப்பினாள் ஸ்வேதா.

ங்கே ஆடிப்போனார் சுவாமிநாதன். அய்யோ. நான் என்ன காரியம் செய்து வைத்திருக்கிறேன். மனதார காதலித்த என் குழந்தைகளை பிரித்து வைத்திருக்கிறேனே. ஒரு நிமிடம் கூட அவர்கள் சந்தோஷமாக வாழவில்லையே? இறைவா என் குழந்தைகளை காப்பாற்று.

‘அனு’ அழைத்தார் அவர். திடுக்கிட்டு திரும்பினாள் அனுராதா.

இங்கே வாம்மா. இந்த பக்கம் வந்து ஹரிஷோட உட்காரு வா. நான் அந்த பக்கம் போறேன். ஒண்ணும் ஆகாது. யாருக்கும் ஒண்ணும் ஆகாது. இனிமே நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும்’ அவர் சொல்ல இதுவரை கண்களில் கட்டாத கண்ணீர் இப்போது அவள் கண்களை கட்டிக்கொண்டது.

‘மாமா..’ என்றாள் கரையும் குரலில். ‘தேங்க்ஸ் மாமா.. ரொம்ப தேங்க்ஸ். ஆனா இப்போ சீட் விட்டு எழுந்துக்க கூடாது மாமா’

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.