(Reading time: 16 - 32 minutes)

அமேலியா - 49 - சிவாஜிதாசன்

Ameliya

முடிவுகள்! இந்த ஒரு வார்த்தைக்கான அர்த்தங்களைத் தேடித்தான் வாழ்க்கை பயணிக்கிறது. சில முடிவுகள் மகிழ்ச்சியையும் சில முடிவுகள் அனுபவங்களையும் கொடுக்கும். ஒன்றைத் தொடங்கினால் முடிவு என்ற ஒன்று இருந்தே ஆக வேண்டும். அது எதுவாக இருந்தாலும் சரி.

அப்படியொரு முடிவைத்தான் அமேலியா எடுத்தாள். அந்த முடிவை எடுத்த பின்னும் அவள் மனதிற்குள் பயம். 'இது நியாயம்தானா? நிறைவேறுமா? இந்த காதல் தொடக்கம் எதை நோக்கி செல்லும்? மேகலா, நாராயணன் என்ன நினைப்பார்கள்? என்னை ஏற்றுக்கொள்வார்களா? வசந்தின் மேல் நான் ஏன் காதல் கொண்டேன்?'

வசந்தின் கார் வரும் சப்தம் கேட்டது. அமேலியாவின் படபடப்பு அதிகமாகியது. தண்ணீர் குடித்தாள். நெஞ்சம் துடித்தது. மாரடைப்பு வந்ததைப் போல் உணர்ந்தாள். மூச்சு சீரற்று வந்தது. அவளால் தன்னை நிதானித்துக்கொள்ள முடியவில்லை. ஜன்னல் அருகே போய் நின்று கொண்டாள்.

கார் ஷெட்டிற்குள் வண்டியை நிறுத்திவிட்டு வீட்டை நோக்கி நடந்தான் வசந்த். கதவைத் திறக்க முற்பட்டான், தாழிடப்பட்டிருந்தது. காலிங் பெல்லை அழுத்தினான். அமேலியா தான் வரைந்த ஓவியத்தை ஒருமுறை நினைவு கூர்ந்தாள்.

காலிங் பெல் பொறுமையற்று கத்தியது. கதவைத் திறந்தாள். விழிகள் சந்தித்துக் கொண்டன. வசந்த் உள்ளே சென்றான். வாங்கி வந்த உணவை டைனிங் டேபிளில் வைத்துவிட்டு தனக்கான உணவினை எடுத்துக்கொண்டு தன் அறையை நோக்கி சென்றான். அவன் செல்லும் வரை அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் அமேலியா.

தன் அறை சுத்தமாக இருந்ததை கவனித்த வசந்த், சில நொடிகள் அமேலியாவை எண்ணினான். காலையில் இருந்து அலைந்த களைப்பு அவன் உடலை ஆக்கிரமித்துக்கொள்ளவே அப்படியே படுக்கையில் வீழ்ந்தான். படுக்கையின் ஓரத்தில் நிலாவின் நோட்டுப்புத்தகம் இருப்பதைக் கண்டு அதை எடுத்தான். இந்த புத்தகம் எப்படி இங்கு வந்தது என்று எண்ணியபடியே சில பக்கங்களை புரட்டிய வசந்த் வேண்டா வெறுப்போடு படுக்கையின் ஓரத்தில் வீசினான்.

அவனுக்கு தேவை உறக்கம். ஆழ்ந்த உறக்கம். மரணத்தில் மனிதன் எழ முடியாமல் உறங்குவது போல் அப்படியொரு உறக்கம் அவனுக்கு தேவைப்பட்டது. கவலைகள், எண்ணங்கள், ஆசாபாசங்கள், சொந்தங்கள், சந்தோசங்கள் என்று எந்த தொந்தரவும் இல்லாமல் அப்படியொரு நித்திரை உலகிற்குள் நுழைந்து கொண்டான் வசந்த்.

உறக்கம் மட்டும் இல்லையேல் பல மனிதர்கள் பைத்தியமாகவும் கொலைகாரர்களாகவும் சுற்றிக்கொண்டிருப்பார்கள். மனதை சாந்தி செய்துகொள்ள ஆண்டவன் கொடுத்த வரமே உறக்கம். உறக்கம் மனிதனை அமைதிப்படுத்துகிறது. அந்த நேரம் உலகை மறக்கச் செய்து வேறொரு இருள் உலகிற்குள் அழைத்து செல்கிறது. அந்த இருளைக் கண்டு மனிதன் பயம்கொள்ள மாட்டான். காரணம், அந்த உலகில் விழிகள் பார்க்காது, செவிகள் கேட்காது, மூளை சிந்திக்காது.

அப்படியொரு நிம்மதியான உலகில் வசந்த் உறங்கிக்கொண்டிருந்தான். மணி பன்னிரெண்டை கடந்து செல்லுகையில் அவனுக்கு விழிப்பு வந்தது, கெட்ட கனவாக இருக்க வேண்டும் அல்லது ஏதோ ஓர் காரணத்தால் அவனே எழுந்திருக்கலாம்.

மெதுவாக படுக்கையில் இருந்து எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தபடி வெளியே வந்தான். ஹாலில் அமேலியா படுத்திருந்தாள். படியில் இருந்து இறங்கிய வசந்த் தான் வாங்கி வந்து கொடுத்த உணவினை அமேலியா உண்டாளா என சோதனை செய்தான். உணவு காலியாகி இருந்தது. டைனிங் டேபிளில் வைத்திருந்த தண்ணீரை எடுத்து பருகிய வசந்த் .மீண்டும் அமேலியாவை நோக்கினான்.

அவள் மேலிருந்த கோபம் மாறியிருந்தது அவனுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. அவன் வாழ்க்கையில் ஏற்பட்ட காதல் தோல்வி அவன் மனதை வெகுவாய் பாதித்திருந்தது. சினிமாவில் காதல் தோல்வி ஏற்பட்டவர்களை எத்தனையோ முறை சிரித்தபடி நகையாடியிருக்கிறான் வசந்த். ஆனால், இன்று தன்னைத்தானே ஏளனம் செய்து கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டான்.

ஹாலில் இருந்த தொலைக்காட்சியை ஓடவிட்டான். அந்த காலத்து ஆங்கில படம். குதிரைகளில் மக்கள் பயணித்துக்கொண்டிருந்தனர். அந்த இயற்கை சூழல் வசந்தை கவர்ந்தது. பழைய காலத்திற்கே சென்று விடலாமா என்று கூட எண்ணினான். அந்த வாய்ப்பை மட்டும் இயற்கையோ இறைவனோ ஏற்படுத்திக் கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

அப்பொழுது வாழ்ந்த மக்கள் பெரிதாக எந்த லட்சியத்தையும் கொண்டிருக்கவில்லை. உழைப்பு, உணவு, குடும்பம் என அற்புதமான வாழ்க்கை முறையை வாழ்ந்திருந்தார்கள். இலட்சியங்கள் வாழ்க்கையை ரசிக்கவிடாமல் செய்கின்றன. லட்சியங்களை அடைந்து வாழ்ந்த வாழ்க்கையை திரும்பிப் பார்க்கையில் நிறைய இழந்திருப்போம்.

தத்துவ எண்ணங்களை விட்டெறிந்த வசந்த் அமேலியாவை பார்த்தபடியே விழித்துக்கொண்டிருந்தான்.

காலை வேளையில் அமேலியா சீக்கிரமே விழித்தாள். தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருந்ததும் வசந்த் சோபாவில் உறங்கிக்கொண்டிருந்ததும் அவளுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. எப்பொழுது வந்திருப்பான் என சிந்தித்தாள். நோட்டுப் புத்தகத்தை பார்த்திருப்பானா? தன்னுடைய காதலை தெரிந்து கொண்டிருப்பானா? என வசந்தின் முகத்தை பார்த்தபடியே சிந்தித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.