மேகலா அமேலியாவை உள்ளே அழைத்து வந்து டைனிங் டேபிளில் அமரவைத்து மேற்கொண்டு ஆக வேண்டிய காரியங்களை கவனிக்கத் தொடங்கினாள். வசந்த் சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சியை ஓடவிட்டான். அவ்வப்போது அவன் கண்கள் அமேலியாவை காண்பதை தவிர்க்கவில்லை. நிலா யோசனையோடு தனிமையில் அமர்ந்திருந்தாள்.
"என்னடி யோசிச்சிட்டு இருக்க?"
"எந்த பொய் சொன்னா நாளைக்கு ஸ்கூலுக்கு லீவு போடலாம் மாமா?"
"ஒழுங்கா ஸ்கூல்க்கு போய் உருப்படுற வழியை பாரு"
"நீ கூட தான் என் வயசுல ஸ்கூல் போயிருப்ப. இப்போ இப்படி வெட்டியா சோபாவுல உக்காந்துட்டு இருக்க"
"இதான் வயசுக்கேத்த சகவாசம் வச்சிக்கணும்னு சொல்லுறது. இல்லன்னா என்னை மாதிரி கேவலபட வேண்டியது தான்"
நாராயணன் கதவைத் திறந்து தன் அறையை விட்டு வெளியே வந்தார். அதை சற்றும் எதிர்பார்க்காத வசந்த் அதிர்ச்சி அடைந்தான். நாராயணின் பார்வை வசந்தின் மேல் விழுந்து பின்பு அமேலியாவின் மேல் பாய்ந்தது. நடப்பதை எதுவும் அறியாத அமேலியா ஓவியம் வரைவதிலேயே கவனம் செலுத்தினாள். யோசனையோடு அமேலியாவின் பின்னால் வந்து நின்று அவள் ஓவியம் வரைவதை பார்த்தபடி நின்றார் நாராயணன். அந்த சூழ்நிலையை எப்படி சாமளிப்பது என்று வசந்த் பதறினான்.
"அப்பா! நம்ம கோபால்சாமி மாமா எப்படியிருக்கார்?"
"எந்த கோபால்சாமி?"
"அதான்பா, மயிலாப்பூர் கோபால்சாமி. எப்பவுமே வெத்தலை போட்டுட்டு வாயை கொடூரமா வச்சிருப்பாரே"
"அவர் செத்து பத்து வருஷம் ஆச்சே. திடீர்னு அவரை பத்தி என்ன கேள்வி?"
"செத்து போயிட்டாரா? நேத்து கூட என் கனவுல வந்தாரு"
அமேலியா நாராயணனை நோக்கி புன்முறுவல் புரிந்து எழுந்திருக்க முற்பட்டாள். "உட்காரு உட்காரு" என்று சொன்ன நாராயணன் அவளருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தார். அவர் கண்கள் ஓவியத்தையே பார்த்துக்கொண்டிருந்தன. நாராயணனுக்கு தேவையான உணவை மேஜை மீது வைத்தாள் மேகலா. அவள் கைகள் பயத்தால் நடுங்கின.
"இந்த பொண்ணு என்ன செஞ்சிட்டு இருக்கா?"
"ஓவியம் வரையிறாப்பா"
"அது தெரியுது. யாருக்கு வரையிறா?"
மேகலா வசந்தை நோக்கினாள். என்னை சொல்லாதே என்பது போல் சைகை காட்டினான்.
"இது நிலாவுக்கான ஓவியம்பா. அவங்க ஸ்கூல்ல ஓவியம் வரைஞ்சு கொண்டு வர சொன்னாங்க"
'பரவாயில்லையே, அக்கா நம்மளை விட கதையை நல்லா சொல்லுது'. மனதிற்குள் மகிழ்ந்தான் வசந்த்.
"அவங்கவங்க வேலையை அவங்க தான் பாக்கணும். ஏன் உன் பொண்ணை வரைய சொன்னா என்ன?"
"அவளுக்கு சரியா வரைய தெரியலப்பா"
"என்னமோ போங்க. சாப்பாடு போடு"
தட்டில் உணவு பரிமாறப்பட்டது. நாராயணன் சாப்பிட்டு முடிக்கும் வரை யாரும் பேசிக்கொள்ளவில்லை. நிலா மட்டும் வசந்தையும் மேகலாவையும் மாறி மாறி முறைத்துக்கொண்டிருந்தாள்.
"என்னடி பாக்குற?" வசந்த் கேட்டான்.
"இரு தாத்தா கிட்டயே சொல்றேன்"
"கொன்னுடுவேன்" என்று நிலாவை அடக்கினான் வசந்த்.
அமேலியாவை தவிர மற்றவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். நாராயணன் சாப்பிட்டு முடித்து வசந்தின் அருகே சோபாவில் அமர்ந்தார்
"என்ன படம் இது?"
"படம் இல்லப்பா நாடகம்"
"இங்கிலீஸ்காரங்க கூட நாடகம் எடுக்க ஆரம்பிச்சிட்டாங்களா?"
சிறிது நேரம் தொலைக்காட்சியை பார்த்த நாராயணன், நீண்ட பெருமூச்சை விட்டெறிந்தபடி சோபாவில் இருந்து எழுந்து தன் அறைக்குள் சென்று மறைந்தார். அதன் பின்னர் தான் வசந்திற்கும் மேகலாவிற்கும் மூச்சே வந்தது.
"அம்மா" என்றாள் நிலா.
"சொல்லுடி"
"நான் நாளைக்கு ஸ்கூல் போய் தான் ஆகணுமா?"
"தோலை உறிச்சிடுவேன். நாளைக்கு ஒழுங்கா ஸ்கூல் போற வழியை பாரு"
நிலா சோகமடைந்தாள்.
"வசந்த் வாடா சாப்பிடலாம்"
"எனக்கு பசிக்கல அக்கா. நீ சாப்பிடு"