(Reading time: 16 - 32 minutes)

திடீரென வசந்திற்கு விழிப்பு வந்தது. அமேலியா அதிர்ச்சியடைந்து என்ன செய்வதென்று விழித்தாள். நாராயணனின் அறையை நோக்கி நடந்தாள். இடையில் நடையை நிறுத்தி, தான் ஏன் இங்கு செல்கிறோம் என எண்ணிக்கொண்டு மேகலாவின் அறையில் சென்று தன்னை மறைத்துக்கொண்டாள்.

இவள் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறாள் என குழம்பியபடி நேரத்தைப் பார்த்தான் வசந்த். 'ஐயோ! ஏர்போர்ட்டுக்கு போக நேரமாயிடுச்சே' என்று அரக்க பரக்க தயாராகி காரை நோக்கி செல்லும்போது நடுவில் அமேலியா காபியை கொண்டு வந்து நீட்டினாள். அவசரத்தில் அவள் மீது மோதி காபியை தட்டிவிட்ட வசந்த் அவளிடம் மன்னிப்பை கூட கேட்காமல் விறுவிறுவென நடந்து சென்றான்.  

அமேலியா கலக்கமடைந்தாள். கீழே கொட்டிய காபியை பார்த்து வேதனையோடு அதை சுத்தப்படுத்த ஆயத்தமானாள். வசந்த் தன் காதலை விரும்பவில்லை போலும் என எண்ணிக்கொண்டாள்.  

ர்போர்ட்டில் நுழைந்து தன் குடும்பத்தினரின் வருகைக்காக காத்திருந்தான் வசந்த். அரைமணி நேரத்தில் அவர்கள் வந்ததும் பரஸ்பர நலம் விசாரிப்புக்குப் பின் அவர்களை காரில் ஏற்றி வீட்டை நோக்கி சென்றான்.

"எப்படி இருக்கு நம்ம ஊரு?", பின் சீட்டில் அமர்ந்திருந்த மேகலாவை பார்க்காமலே கேட்டான்.

"நிறைய மாறிடுச்சு. நாம இருக்கும்போது நம்ம ஊருல எத்தனை வீடு இருக்கும் வசந்த்?"

"சரியா நினைவில்லை. நூறு இல்லை நூற்றி ஐம்பது இருக்கும்"

"இப்போ ரெண்டாயிரம் வீட்டுக்கு மேல இருக்கு. பெரிய பெரிய மாடிங்க, நிறைய பொலுஷன். இன்னும் கோவில் பூஜை அது இதுன்னு ஆம்பிளிஃபையர் வச்சு பாட்டு போடுறாங்க. நோயாளிங்க பாவம்"

"அப்போ நம்ம ஊருல எது தான் மாறாம இருக்கு?"

"அரசியல்வாதிகளும் ஊழலும் தான். நல்ல விஷயங்கள் எதுவமே இல்லை"

"உன் வேலை எப்படிப்பா போகுது?" முதல் முறையாக நாராயணன் கேட்டார்.

"நல்லாதான்பா போயிட்டு இருக்கு. டைரக்டர் ஆக வாய்ப்பு வந்திருக்கு"

"சூப்பர் மாமா. அப்போ நான் தான் ஹீரோயின்"

வசந்த் நிலாவைப் பார்த்து சிரித்தான்.

"அந்த பொண்ணு என்ன பண்ணுறா?"

"யாரப்பா கேக்குறீங்க?"

"அமேலியாவை தாண்டா. அவ நல்லாயிருக்காளா?" என்று கேட்டாள் மேகலா.

வசந்த் என்ன சொல்வதென்று யோசித்தான். அந்த நேரத்தில் லேசான தூறல் துவங்கவே வண்டியை செலுத்துவதில் கவனத்தை செலுத்தினான். அவன் நினைவுகள் அமேலியாவை நோக்கி பறந்தன. காலையில் அவள் கொண்டு வந்த காபியை தெரியாமல் தட்டிவிட்டதை எண்ணிப் பார்த்தான் வசந்த். அவளிடம் ஒரு மன்னிப்பு கூட கேட்கவில்லை. நிச்சயம் அவள் வருத்தப்பட்டிருப்பாள். சில நேரங்களில் தான் அறிவற்றவனாக ஏன் நடந்து கொள்கிறேனோ என தன்னைத்தானே நொந்துகொண்டான்.

கார் வீட்டை அடைந்தது. நிலா முதலில் வீட்டை நோக்கி ஓடினாள்.

"செடிகளுக்கு தண்ணீர் விடலையா?" என்றார் நாராயணன் நடந்து கொண்டே.

"பாதி நாள் நான் வீட்டிலையே இல்லப்பா"

"எப்பவும் சில விஷயங்கள், கடமைகளை நாம மாத்திக்ககூடாது"

அதற்கான அர்த்தம் வசந்திற்கு புரியவில்லை. வீட்டிற்குள் நுழைந்தார் நாராயணன். அவர் கண்கள் முதலில் அமேலியா வரைந்த தன் மனைவியை நோக்கின. பின்பு வீட்டை நோக்கின. 'வீடு இவ்ளோ சுத்தமாயிருக்கே! வசந்த் இந்த மாதிரியெல்லாம் வச்சிருக்கமாட்டானே' என்று சிந்தித்தபடி தலையைத் திருப்பிய நாராயணனுக்கு அமேலியாவைக் கண்டதும் எல்லாம் புரிந்தது.

அமேலியா நிலாவை தூக்கி கொஞ்சிக்கொண்டிருந்தாள். "அக்கா நான் இந்தியாவுல ஜாலியா இருந்தேன். விளையாட்டு, சாப்பிடுறது,.திரும்ப விளையாட்டு, தூங்குறது, அப்புறம் சாப்பிடுறது"

மேகலா வீட்டினுள் வந்தாள். "ஹே அமேலியா! எப்படியிருக்க?" சைகையாலும் வாய் மொழியிலும் கேட்டாள். தான் நன்றாக இருப்பதாய் புன்னகையால் பதில் சொன்னாள் அமேலியா.

அமேலியா நாராயணனை நோக்கி சென்றாள். "எப்படியிருக்கீங்க? பிரயாணம் எல்லாம் எப்படியிருந்தது?" என சைகையால் கேட்டாள். நாராயணன் தலையை மட்டும் ஆட்டினார்.

"வசந்த்"

"அப்பா"

"இவ ஜெஸிகா வீட்டுல தான இருக்கணும். ஏன் இங்க இருக்கா?"

"அது வந்து...இன்னைக்கு காலைல தான் கூட்டிட்டு வந்தேன்"

"ஏன்?"

"ஜெஸிகா வெளியே போறாளாம். வரதுக்கு இரண்டு நாள் ஆகும். அதனால அமேலியாவை கூட்டிட்டு போன்னு சொல்லிட்டா"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.