(Reading time: 16 - 32 minutes)

நாராயணன் யோசனையோடு தன் அறையை நோக்கி நடந்தார். "மேகலா! தலை வலிக்கிறது போல இருக்கு. கொஞ்சம் காபி போட்டு கொண்டு வாம்மா"

"சரிப்பா"

நாராயணன் பூஜை அறையை நோக்கினார். சுத்தமாக இருந்தது. பூஜை செய்திருந்த அடையாளங்களும் தெரிந்தது. அமேலியாவை நோக்கினார். அவள் நிலாவோடு விளையாடிக்கொண்டிருந்தாள். பூஜை அறையில் கடவுள்களை நமஸ்கரித்துவிட்டு தன் அறைக்குள் நுழைந்தார் நாராயணன். அவர் துணிமணிகள் எல்லாம் மடித்து வைக்கப்பட்டிருந்தன. படுக்கையில் அமர்ந்தார்.

மேகலா காபியோடு வந்தாள். தன் தந்தைக்கு இளஞ்சூடு பதத்தில் காபியை கொடுத்தாள் மேகலா. காபியை பருகியபடி யோசனையில் வீழ்ந்தார் நாராயணன்.  

"என்னப்பா யோசனை?"

"காலையில தான அந்த பொண்ண கூட்டிட்டு வந்தேன்னு வசந்த் சொன்னான்"

"ஆமாப்பா ஏன்?"

"காலையில வந்தவ எப்படி வீடு கூட்டி, பூஜை செய்து துணியெல்லாம் துவைச்சு வச்சிருக்க முடியும்?"

மேகலாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. "வசந்த் செஞ்சிருப்பான்பா. அவனுக்கு சுத்தமா இருந்தாதானே பிடிக்கும். ஓய்வு நேரங்கள்ல இதை செஞ்சிருக்கலாம்"

அந்த பதில் ஏனோ நாராயணனை திருப்திபடுத்தவில்லை. "சரிம்மா நீ வேலையை பாரு. நான் கொஞ்சம் ஓய்வு எடுக்குறேன்". மேகலா அறையை விட்டு வெளியேறினாள். என்னமோ நடந்திருக்கு என்பதை மட்டும் நாராயணன் புரிந்துகொண்டார்.

மாலையும் இரவும் ஒன்றோடு ஒன்று கலந்துகொண்டிருக்கும் அற்புதமான வேளையில் வசந்த் தன் அறையை விட்டு வெளியே வந்தான். மதிய உணவை உண்டபின் ஸ்கிரிப்ட் ஒர்க்கை செய்து முடிக்க அவனுக்கு சில மணி நேரம் பிடித்தது. இன்னும் ஒரே ஒரு வேலை மட்டும் தான் பாக்கி. அது அமேலியாவின் ஓவியம்.  

இப்பொழுது அமேலியாவிடம் ஓவியத்தை வரைய சொல்வது அவ்வளவு சுலபமில்லை. நாராயணன் மற்றும்.அக்கா, இவர்களை தாண்டி எப்படி அமேலியாவிடம் உதவியை பெறுவது?!

அமேலியா நிலாவுடன் வீட்டின் வெளியே ஊஞ்சலில் விளையாடிக்கொண்டிருந்தாள். அருகில் மேகலா தான் தயாரித்த உணவினை நிலாவிற்கு ஊட்டிக்கொண்டிருந்தாள். அமேலியாவிடம் எப்படி உதவி கேட்பது? என்னடா இது தொல்லை! 

"அக்கா, என்ன செஞ்சுட்டு இருக்க?"

"அதான் பாத்துட்டு இருக்கியே. என்ன கேள்வி இது?"

"வேற வேலையே இல்லையா உனக்கு"

மேகலா வசந்தை நோக்கினாள். "என்ன வேணும் உனக்கு?"

வசந்த் அமேலியாவை நோக்கினான். மேகலாவுக்கு தன் தந்தை கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. "என்னடா அவளை பாக்குற"

"அவளால எனக்கொரு காரியம் நடந்தாகணும்"

"புதிர் போடாம விஷயத்தை சொல்லு"

"இந்த ஓவியங்களை இன்னும் அழகா வரைஞ்சு கொடுக்கணும்" என்று அவள் வரைந்த நோட்டுப் புத்தகத்தை மேகலாவிடம் கொடுத்தான் வசந்த். அதை வாங்கி புரட்டிப் பார்த்தாள் மேகலா. "இந்த ஓவியங்களை யார் வரைஞ்சது?"

"அமேலியா தான்"

"எப்போ வரைஞ்சா? .என்ன நடக்குது?"

"ஒண்ணும் ஆகலை. ஜெஸிகா தான் அவளை வரைய சொல்லி கேட்ருக்கா".  

வசந்த் பொய் சொல்லத் துவங்கினான்.

"எதுக்கு இவ ஓவியம் வரையணும்?"

"தயாரிப்பாளருக்கு சுலபமா கதையை புரிய வைக்க"

"என்னவோ எனக்கு தலையே சுத்துது"

"ஒண்ணும் இல்லாத விஷயத்துக்கு ரொம்ப பேசாத அக்கா. அமேலியாதான் நல்லா வரைவாளே, அதான் அவ கிட்ட உதவி கேக்குறேன்"

"சரி சரி உனக்கு என்ன வேணுமோ சொல்லு செய்றேன்"

"இந்த பேப்பர்ல கலர்புல்லா இதே ஓவியத்தை வரைஞ்சு கொடுக்கணும்".

அவனிடமிருந்த பேப்பரை வாங்கிய மேகலா அமேலியாவிற்கு சைகையில் விளக்கினாள். அமேலியா வசந்தை நோக்கினாள். அந்த பார்வையில் ஏக்கம் கலந்த சோகம் தென்பட்டது. ஓவியம் வரைய சம்மதித்த அமேலியா புற்தரையில் அமர்ந்து ஓவியம் வரையத் தொடங்கினாள். அவ்விடத்தில் ஓவியம் வரைய அமேலியாவிற்கு அசௌகரியமாக இருந்தது.  

"அக்கா! உள்ளே போய் நல்லா வரைய சொல்லு. இது என் வாழ்க்கை சம்மந்தப்பட்டது"

"டேய்! அப்பா இருக்குற நேரத்துல ஏண்டா இப்படி படுத்துற?"

"அப்பா அறையை விட்டு வெளியே வர நேரமாகும். சீக்கிரம்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.