(Reading time: 12 - 24 minutes)

ஊரார் முன்னிலையில் ஏற்பட்ட அவமானத்திற்காக பழித்தீர்க்க காத்திருந்தது அவரது மனம். இளையவனோ ஏதும் புரியாமல் தவித்து நின்றான். அச்சமயம் நிகழ்ந்ததே மதுமதியின் வருகை! யாரிந்த மதுமதி? சூரிய நாராயணனின் சொந்த மாமன் மகள் அவள். அவளுக்கு வேண்டியதெல்லாம் அந்தக் கிராமத்தில் தொழிற்சாலை தொடங்கப்பட வேண்டும், அப்போது தன் பெரும் அளவில் பொருளீட்ட இயலும்.அதற்கு தடையாய் இருப்பது பார்வதி.அவரை ஒழித்துக்கட்ட கிட்டிய ஆயுதம் தர்மா!!

"ஏற்பட்ட அவமானத்துக்கு உனக்கு பதிலட தர விருப்பமில்லையா சூர்யா?" எரிந்த அக்னியில் எண்ணெய் வார்த்தாள் அவள்.

"உள்ளுக்குள்ளே கொதிக்குது. அந்தப் பார்வதியை என்ன பண்றதுன்னு தெரியாம இருக்கேன்."சிவந்தது அவர் விழிகள்.

"பார்வதியை உன்னால ஒண்ணும் பண்ண முடியாது. ஆனா, நீ நினைத்தால் அவளை உன் காலடியில விழ வைக்க முடியும்!" வழிவகுத்தாள்.

"எப்படி?சொல்லு! எப்படி?எந்த பட்டிக்காட்டு ஜனங்க முன்னாடி என்னை அவ அவமதித்தாலோ அவங்க முன்னாடி அவள் தலைகுனியணும்!நான் என்னப் பண்ணணும் சொல்லு!"

"இந்த ஊரைப் பற்றி நான் விசாரித்த வரை, இந்த ஊருக்கு ஒரு கட்டுபாடு இருக்கு. இங்கே காதல் நிராகரிக்கப்படுது! மீறி காதலித்தால் ஊர் ஜனங்க முன்னாடி அவங்களை எரித்து கொன்னுடுவாங்க!"

"நீ சொல்ல வருவது புரியலை!"

"பார்வதிக்கு ஒரு பொண்ணு இருக்கா!" இப்போது புரிந்தது அவருக்கு!!

"நீ சொல்ற மாதிரி செய்தாலும் எனக்கும் தானே தண்டனை கிடைக்கும்?" மறுவினா தொடுத்தார்.

"அதுக்கு முன்னாடி இங்கிருந்து கிளம்பிடு! உனக்கு தேவை அவ தலைகுனியும். எனக்குத் தேவை இந்த ஊர்ல பேக்டரி வரணும்!தட்ஸ் இட்!நீ வேற ஊரைப் பார்த்துக்கோ.இந்த ஊர்ல எங்க அப்பா பேக்டரி ஆரம்பிக்கட்டும்!" யோசனை கூறினார். அவருக்கு அப்போது வேண்டியது எல்லாம் பார்வதியின் தலைகுனிவு மட்டுமே!!

"நவீனுக்கு இந்த விஷயம் தெரியக்கூடாது! அவன் இதற்கு சம்மதிக்க மாட்டான்."

"ம்...நான் காலையில ஊருக்கு கிளம்புறேன். எடுத்த காரியத்துல வெற்றி அடைந்துவிட்டு சொல்லி அனுப்பு!" கர்வமாக பேசிவிட்டு நகர்ந்தார் அவர்.

அவர்களின் விளையாட்டிற்கு தர்மா தான் பகடை என்பதை எவரும் அறிந்திருக்கவில்லை. தர்மா வைத்தியத்தில் கைத்தேர்ந்தவர். எந்த ஒரு தீர்க்க இயலாத நோயையும் தீர்க்கும் பாங்கை அறிந்தவர் அவர். அதனாலே, அவருக்கு பெரும் மதிப்பு அவ்வூரில்! வயோதிகரும் கர்வம் பாராட்டாமல் அவரை வணங்குவர். ஒருநாள்...

"ம்...ஏன் ஆச்சி! வயசு தான் எண்பது ஆகுதுல! உன் பிள்ளை என்ன பண்றாரு? நீ ஏன் காடு மேடுன்னு கஷ்டப்படுற?பாரு...!இப்போ மூட்டு வலி, முதுகு வலின்னு வந்து நிற்கிற?" எண்பது வயதான மூதாட்டியை கடிந்தார் அவர்.

"நல்லாக் கேளூ தாயி! நானும் கத்தி பார்த்தாச்சு! காலையில பொழுதுக்கு முன்னாடியே எழுந்து கிளம்பிடுறாங்க!எதுக்கு தாயி கஷ்டப்படணும்?என்ன குறை வைத்தேன்? கை நிறைய சம்பாதிக்கிறேன். வீட்டுல சும்மா கிட ஆத்தான்னா கேட்க மாட்டுது!"

"ம்...இல்லை இல்லை! எனக்கு என்னமோ உங்க மேலே தான் சந்தேகமா இருக்கு. என்ன மாமா அம்மாக்கிட்ட சொல்லட்டுமா?" 

"ஐயயோ!வேணாம் தாயி! யாரு அவங்க கோபத்துக்கு ஆளாவுறது? அவ்வளவு தான்...என்னை கொன்னுடுவாங்க!" பதறினார் அவர்.

"அதெல்லாம் வேணாம் கண்ணு! அவன் என்ன நல்லா தான் பார்த்தக்குறான். நான் தான் அவன் பேச்சை மதிக்கிறதில்லை. எண்பது வயசுலயும் எப்படி சின்னப்பொண்ணு மாதிரி இருக்கேன் பாரு! அவனை இந்த வயத்துல சுமந்து பெற்றேன். அவன் என்ன எனக்கு சோறு போடுறது! நான் சாவுற வரைக்கும் உழைப்பேன்டா மவனே!"

"பார்த்தியா தாயி! இப்படி எல்லாம் வீம்பு பண்ணா, நான் என்ன செய்ய? நீயாவது சொல்லு தாயி!" அவளுக்கோ புன்னகை தான் வந்தது.

"ஆச்சி! நீங்க இனிமே வேலை எல்லாம் செய்ய வேணாம். நான் அம்மாக்கிட்ட சொல்லி, உங்களுக்கு பணம் மாதமாதம் பணம் அனுப்ப சொல்றேன். நீங்க உடம்ப பார்த்துக்கோங்க!"

"தப்பு ஆத்தா! உழைக்காம சாப்பிடுற சாப்பாடு விஷம்! எனக்கு என்ன ஆத்தா, எதாவது நோவுன்னா பார்த்துக்க நல்ல மருமக வாய்த்துட்டா, பேரன் பேத்தியும் பாசமா இருக்குதுங்க, மவனும் கவனிச்சிக்கிறான், வைத்தியம் பார்க்க என்னை காப்பாத்துற குலசாமியா நீ இருக்க போதும் தாயி, இதுக்கு மேலே என்ன சுகம் வேணும்?" அவளது மனதுள் ஆழமாய் பதிந்தன அவ்வார்த்தைகள். இறுதி காலத்திலும் இவ்வாறு ஒரு வைராக்கியமா?வியந்தாள் அவள்.

"சுந்தரம் மாமா! இந்த மூலிகையை அரைத்து, சுண்ணாம்பு கலந்து,  காலையில வெறும் வயற்றுல குடிக்க சொல்லுங்க ஒரு வாரத்துல எல்லாம் சரியாகிடும்!"

"சரி ஆத்தா! அப்போ நான் வாரேன்!"

"வாங்க!" புன்னகையுடன் இருவருக்கும் வழியனுப்பி வைத்தார் தர்மா. அவர்கள் தாயும்,மகனுமாக செல்லும் திசையை வாஞ்சையுடன் பார்த்திருந்தவரை அசைத்தது அந்தக் குரல்!!

"ஏங்க..!" பரிச்சயமானவர் தானோ என்று திரும்பியவரின் முகம் வெளிறியது. மதியாமல் விருட்டென்று முன்னேறினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.