(Reading time: 9 - 17 minutes)

தொடர்கதை - காதல் இளவரசி – 05 - லதா சரவணன்

kadhal ilavarasi

மொத்தம் 30 பேர் கொண்ட ஆண்பெண்கள் கலந்திருந்த குழுதான் அது 

நடந்தவை எல்லாமே கனவுபோல் தோன்றியது உத்ராவிற்கு சென்னை துறைமுகத்தை வந்தடைந்ததும் நெஞ்சை அடைத்தது போன்ற ஒரு உணர்வு ஐந்து தளத்திலான அந்தக் கப்பலில் கால் பதிக்கும் போது பயமோடு கலந்த தவிப்பும் இருந்தது நித்திலனின் முகம் வெகுதூரத்தில் மறைந்ததும் பத்மினி உத்ராவின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள்.

வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் நாம அனைவரும் பிரியத்தான் வேண்டும் உத்ரா டார்லிங், உனக்காக உருக இத்தனை உறவுகள் இருக்கிறது ஆனால் என்னைப்பார் தட்டிக் கேட்கக் கூட ஆளில்லை பிரிந்தவர்களுக்காக அழவேண்டும் எனில் வாழ்வின் முழுமைக்கும் அழுது கொண்டுதான் இருக்கவேண்டும். 

பத்மினியின் தந்தை இராணுவத்தில் பணிபுரிந்தவர் அங்கேயே ஒரு பெண்ணை திருமணமும் செய்து கொண்டார் குடும்பத்தினர் ஏற்காத போதும், மனைவி பிள்ளையுடன் சந்தோஷமாகவே நாட்கள் கழிந்தது. கார்கில் போரில் அவர் வீர மரணம் அடைந்ததும், இரண்டு பெண்களின் வாழ்வும் கேள்விக் குறியானது. உறவுகளின் பாராமுகமும் கணவரின் பிரிவும் அன்னையை வெகுவாய் பாதிக்க மகளிர் விடுதியொன்றில் பணிபுரிந்து மகளையும் அவர்களின் கவனிப்பில் விட்டு இறந்தும் போனார்.

பதினான்கு வயது தாய் இறக்கும்போது பத்மினிக்கு ! எந்த வயதில் அன்னையின் அரவணைப்பு தேவைப்பட்டதோ அப்போது அவரின் இழப்பு பெரும் பாரத்தை உண்டாக்கியது. சுபாவத்திலேயே தைரியமான பெண்ணாக இருந்தபடியால் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு படித்து முடித்தும் விட்டாள்.

தன் தனிமை விரக்தியை மறைக்கவே பத்தினி கலகலப்பாக இருக்கும்படி தன் சுபாவத்தை மாற்றிக்கொண்டாளோ என்று கூட உத்ரா நினைத்திருக்கிறாள். எதுபெயப்படி போனாலும் முதல் சந்திப்பிலேயே தன்னுடன் அதிகம் நெருங்கிவிட்ட அவளை வெகுவாய் பிடித்துப் போனது மற்றவளுக்கு !

மனதில் பட்டதை மறையாமல் பேசும் அவளின் பேச்சும் , சுபாவமும் வெகு நெருங்கிய நட்புவட்டத்தில் கட்டிப்போட்டது. இப்போது இந்த அத்துவான இடத்தில் துணையாய் ! 

25 பேர் கொண்ட குழுவினரோடு கப்பல் அந்தமானை நோக்கிப் புறப்பட்டது. கடல் நீரைக் குத்தி கிழித்து வெண்மையான ரத்தக்கீறல்களை விளைவிப்பதைப் போல கப்பல் முன்னேறிக்கொண்டு இருந்தது. அடிக்குகொரு தண்ணீரோடு கலந்து நுரைக் குழந்தையைப் பிரசவித்துக் கொண்டு இருந்தது கப்பல். உத்ராவின் நினைவுகளில் கடல் நுரைகளாய் தன் உறவுகள்.

சில விஷயங்கள் எப்போதும் நம்மை பிரமிக்க வைத்துக் கொண்டே இருக்கும் அவற்றில் கடலும் கப்பலும் ஒன்று, ஆங்காங்கே உயிர் காக்கும் சிறு படகுகளும், கயிறும், நீச்சல் உடைகளும் என்று நிறைய ரகசியங்களை உள்ளடக்கி வைத்திருந்தது அந்த நீர் ஊர்தி. சென்னையில் ஆரம்பித்த பயணம் இரவு நேரம் என்பதால் கப்பலின் மின்விளக்குளே கடலை பொன்னிறமாய் காட்டியது. மறைத்த இருள் சூழந்த வானம் இதோ தொட்டுவிடும் தூரத்தில் இருப்பதைப் போல தொட முயற்சிக்கும் பயணமாய் ஒரு குழந்தையின் குதூகலம் ஒட்டிக்கொண்டு இருந்தது உத்ராவின் மனதில் !

நித்திலனோடு பேசிய பேச்சும் பாதியிலேயே நின்றுபோக, பத்மினி மெல்ல வந்து அவளின் இடையோடு கட்டிக்கொள்ள ஸ்பரிசம் பட்டதும் சிலிர்த்து திரும்பினாள் உத்ரா

உப்புக்காற்றின் வாசம் நாசியை வருடியது என்ன பத்மினி குரல் கொடுத்து இருக்கலாமே நான் பயந்தே போனேன்

இது நமக்கென ஒதுக்கப்பட்ட ஜாகை இங்கே யார் வந்துவிடக் கூடும், அதிலும் இந்த பத்மினியைத் தாண்டி, இரவு உடையில் இல்லாத காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டாள்.

மற்ற பெண்கள் எல்லாம் உறங்கியே விட்டார்கள். நீ இங்கே தனியாய் எந்த ராஜாவிற்காக காத்திருக்கிறாய் ! ஒரே இடத்தில் வேலைதேடி வந்திருக்கிறோம் எல்லாரிடமும் இயல்பாக இரு உத்ரா, அந்தப்பெண்களும் நம்மைப் போல் எல்லா உறவுகளையும் விட்டு வந்திருப்பவர்கள்தானே நாம் ஒருவருக்கொருவர் ஆறுதலாய் இருக்க வேண்டும் அல்லவா

ம்... ஏதோ யோசனை சட்டென்று பொருந்த முடியாத சூழல் பத்மினி நான் என்னைப் பழக்கப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறேன். சரி நீ ஏன் இன்னும் விழித்துக்கொண்டு இருக்கிறாய் ?

உன்னைப் பார்த்துவிட்டு போகலாம் என்று வந்தேன். மதியத்தில் இருந்தே பார்த்தேன் அந்த மீட்டிங் ஹாலில் இருந்தே உன் பார்வை பரத்தை சுற்றிச் சுற்றி வந்ததேன் ?! அவரை உனக்கு முன்பே தெரியுமா 

அவர் பெயர் பரத் என்பதே நீ சொல்லித்தான் எனக்கு நினைவு வருகிறது. வம்பளக்கமாமல் போய் தூங்கு நான் இன்னும் பத்து பதினைந்து நிமிடங்களில் வந்துவிடுகிறேன்

பாத்தும்மா கடல் காற்று உன் சருமத்தை பதம் பார்த்துவிடப்போகிறது. கிளுக்கிச் சிரித்தவாறு தன் பகுதியை நோக்கிப் போனாள் பத்மினி.

தான் அவனைப் பார்த்ததை பத்மினி கண்டிருக்கிறாளே ?! என்று தவிப்பு இருந்தபோதும், யார் என்று அறிந்திராமல் இருந்த போது பெரும் உதவி செய்தவன் இன்று அவளை நேருக்குநேர் பார்த்தும் கண்டுகொள்ளாமல் சென்று விட்டானே அன்றைய சிக்கலில் தப்பிக்க உதவியனுக்கு ஒரு நன்றியைக் கூட சொல்லாமல் விட்டோமோ ?

ஆனால் இன்று நன்றி சொன்னாலும் அவன் கேட்கும் நிலையில் இல்லையே ? முதன் முதலில் அவனைப் பார்த்தபோதும் அதே நிலையில்தானே அவன் இருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.