(Reading time: 12 - 24 minutes)

தொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 13 - சகி

Uyiril kalantha urave

னிதனாகப்பட்டவன் என்று தனது சிரத்தில் உள்ள ஆணவம்,அகங்காரம்,தன்னலம்,தலைக்கனம் இவற்றை தன்னிலை உணர்ந்து மண்ணில் இறக்கி வைக்கிறானோ அன்று அவனது சிரத்தில் தர்மம் என்ற மணிமகுடம் சூட்டப்படுகிறது.எவ்வாறு மனிதர்களில் சிலர் எவ்வாறு தான் இவற்றின் பாரத்தினை சுமக்கின்றனரோ, தாயின் உதிரத்தில் இருந்து தோற்றம் பெறும் மனிதனானவன் சுதந்திரமானவன்,அன்பின் வடிவமாவான்,கருணை உடையான், பேதமற்றவன்,சங்கடம் களைபவன்.இறைவனின் படைப்பில் அனைத்தும் எழிலுடையவை! ஆனால்,அந்த அழகை மனிதர் கொச்சைப்படுத்தும் விதத்தை தான் காணுங்களேன்!என்ன சாதனைக் கிட்டப்போகிறது?மனதில் ஏனைய அகம்பாவத்தால் வசீகரிக்கப்படும் மனிதன், அவற்றுக்கு அடிமை ஆகின்றான்.காலம் உள்ளவரை அவனை அச்சங்கிலி பின்னிப்பிணைந்து வேதனை நல்குகின்றது.எனில் பெருமை கொள்ளுங்கள்,தங்கள் மனதினை வசீகரிக்க மேற்கண்ட வஸ்துகளால் இயலவில்லை அல்லவா!!!

இரவு நெடுநேரம் உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தான் அசோக்.மனதினில் இப்போதும் சலனங்கள் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன. தான் யார் என்ற இரகசியம் உடைப்பட்டப் பின்னரும் தன் தாயின் அதிகாரம் அவருக்கு கிட்டவில்லை.இந்நேரம் அவர் உயிருடன் இருந்திருந்தால்?

"நிச்சயம்...சூரிய நாராயணனுடன் அவர் வாழ நான் அனுமதி தந்திருக்க மாட்டேன்.அப்படி அவருக்கு அவர் காதல் பிரதானம் என்றால்,என் சவத்தை தாண்டி அவர் சென்றிருக்க வேண்டும்!" கடுகடுத்தான் இதயத்துள்!!

"பொறுப்புகள் கூடிவிட்டன,உன்னையே அனைத்துமாய் எண்ணி உன்னுடன் வாழ வந்தவளுக்கு என்ன செய்ய போகிறாய்?"சிவன்யாவின் எண்ணங்கள் அவன் மனதிற்கு மருந்தாய் அமைந்தன. 

"கலெக்டர் சார்! கலெக்டர் சார்!" இருமுறை அழைப்பிற்கு பின் சுயநினைவை அடைந்தான் அவன்.

"என்னம்மா? என்னாச்சு?"

"என்னாச்சுன்னு நான் தான் கேட்கணும், நான் வந்து டி.வி.யை ஆப் பண்ணதுக் கூட தெரியலை, கவனம் எங்கே இருக்கு கலெக்டருக்கு?" புன்னகைத்தாள் அவள்.

"இங்கே இருக்கு!" என்று ஏதோ ஒரு பெரிய கவரை நீட்டினான் அவன்.

"என்ன இது?"

"பாரு!" பிரித்துப் பார்த்தாள் அவள். அதனுள், அழகிய வேலைப்பாடுகள் அமைந்த ஒரு பட்டுப்புடவை இருந்தது.

"உன்னை தான் கூட்டிட்டுப் போய் வாங்கணும்னு நினைத்துக் கொண்டிருந்தேன்.இது பார்த்த உடனே பிடித்துப் போச்சு, உனக்கு அழகா இருக்கும்னு தோணுச்சு வாங்கிட்டு வந்தேன்.பிடிக்கலைன்னா நாளைக்கு வேற வாங்கிக்கலாம்!"என்றான் அமைதியாக!

"ஆனா, இப்போ எதுக்கு இது?"

"ம்! டீச்சருக்கு இப்படியே இருந்துவிடலாம்னு தோணுதா? இந்த அப்பாவியை கல்யாணம் பண்ணிக்கிற எண்ணம் இல்லையா?" பாவமாய் கேட்டான் அவன்.சட்டென அவள் முகத்தில் படர்ந்தது நாணம்!

"சிம்பிளா கோவிலில் கல்யாணம் பண்ணிக்கலாம், மேரேஜ் ரெஜிஸ்ட்ரேஷனுக்கும் ஏற்பாடு பண்ணிட்டேன். நீங்க 'உம்'னு சொன்னா நாளைக்கே கல்யாணம்! யாரும் ஒரு வார்த்தைக் கூட உன்னை தப்பா பேசிவிட கூடாது!"- மனம் வென்றவனையே விவாஹம் புரிய பேகிறோம் என்று மகிழ்வதா? அல்லது பிரிய தாய் தந்தை இல்லாமல் விவாஹம் நிகழ இருக்கிறதே என்று வேதனையுறுவதா? இரண்டிற்கும் மத்தியில் நின்றாள் அவள்.

குழப்பத்தில் இருந்தவளது கரத்தை ஆறுதலாக பற்றினான் அவன்.

"எனக்கு புரியுதும்மா, உன் வேதனையை என்னால உணர முடியுது! நான் உனக்கு எந்தத் தடையும்  போடலை. நீ உங்க வீட்டுல இதைப் பற்றி கலந்து ஆலோசிக்கலாம், உன் விருப்பம் எதுவோ அதை செய்யலாம். ஆனா, எனக்கு யாரும் ஒரு வார்த்தைக் கூட உன்னை தாழ்த்தி பேச  கூடாது. அதற்காக தான் அவசர அவசரமா கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யுறேன். நீ எனக்கு கிடைத்த வரம், உன்னை நான் இழக்க விரும்பலை." தீர்க்கமாக உரைத்தான் அவன்.

"நான் அவங்களா கூப்பிடுற வரைக்கும்,அந்த வீட்டுப்படியை கூட மிதிக்க மாட்டேன். ஆனாலும், ஒரு மகளா அவங்களை கூப்பிடுறது முக்கியம், நான் காலையில அப்பாக்கிட்ட கால் பண்ணி பேசுறேன்." கண்கள் கலங்கின அவளுக்கு!

"ப்ச்! இங்கே பாரும்மா!" ஆறுதலாக அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான் அசோக். அவனது மார்பில் சாய்ந்து தன் வேதனைகளை கரையவிட்டாள் சிவன்யா.

"ஒண்ணுமில்லை சிவன்யா! எல்லாப் பிரச்சனைக்கும் நான்தான் காரணம், நான் வேணும்னா இன்னொருமுறை அவங்கக்கிட்ட போய் மன்னிப்புக் கேட்கட்டா?" உடனடியாக நின்றது அவளது கண்ணீர்.

"அப்பா,அம்மா வரலையேன்னு கஷ்டப்பட்டேன் தான்!அதற்காக உங்க தன்மானத்தை நீங்க இழந்து எனக்காக போய் பேசணும்னு அர்த்தம் இல்லை. நீங்க எந்தப் பிரச்சனைக்கும் காரணம் இல்லை. எனக்கு அவங்க எவ்வளவு முக்கியமோ அவங்களுக்கு சரி சமமாக நீங்களும் முக்கியம்." உறுதியாக உரைத்தாள். அவள் வார்த்தைகளில் இருந்த உறுதி, அவளது விழிகளில் புலப்பட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.