(Reading time: 12 - 24 minutes)

"நான் அப்பாக்கிட்ட சொல்லுவேன்.என் கடமையை நான் சரியா செய்வேன், அவங்க வருவதும், வராமல் போவதும் அவங்க விருப்பம் அதை நான் குறை சொல்ல மாட்டேன். எனக்கு நீங்க வேணும் அவ்வளவுதான்!" ஒருநொடி உறைந்துப் போய் அவளை பார்த்தான் அசோக். இவளை பெறுவதற்கு தான் செய்த தவம் தான் என்ன? என்ற எண்ணம் அவனுக்குள் எழுந்தது.

"ஆனா...ஒரு சந்தேகம்!"

"கேளும்மா!"

"அது..வந்து...நீங்க...நீங்க யாருன்னு தெரிந்தப் பிறகும், உங்களுடைய உறவுகளைப் பிரித்து வைக்கிறது நியாயமா இல்லை. அவ்களையும் கல்யாணத்துக்கு..."தயங்கினாள் அவள்.அவனது மனதில் பெரும் வேதனை படர்ந்தது.

"நீ சொல்றது சரிதான். ஆனா, அந்த உறவு எனக்கான அதிகாரத்தையோ, அங்கீகாரத்தையோ கொடுக்கலை. இது இப்போ தான் எனக்கு தெரிய வந்திருக்கு. முடிந்த கதையை புதுப்பிக்க இப்போ எங்க அம்மாவும் உயிருடன் இல்லை." அவன் கூற வருவதன் பொருள் விளங்கியது அவளுக்கு!

"எதையும் குழப்பிக்காமல் நிம்மதியா போய் தூங்கும்மா! நானும் போய் தூங்குறேன். காலையில கொஞ்சம் வேலை நிறைய இருக்கு!குட் நைட்!"

"குட் நைட்!" சோம்பல் முறித்துவிட்டு எழுந்து தனது அறைக்கு சென்று கதவை சாத்திக் கொண்டான் அசோக். அவளிடம் எந்த மாறுதலும் இல்லை.மௌனமாக எழுந்து சென்றாள் அவளது அறைக்கு அல்ல, பூஜை அறைக்கு!! அன்றைய நாள் வரை அதில் தர்மாவின் புகைப்படம் மட்டுமே இருந்தது. அவளுக்கு இறை நம்பிக்கை உண்டு என்பதால் இன்று அவரோடு சேர்ந்து சில தேவ, தேவியரின் புகைப்படங்களும், விநாயகர் சிலையும் சேர்ந்திருந்தன.

ஆனால், அச்சமயம் அவள் கவனமோ தர்மாவிடம் தான் இருந்தது.மௌனமாக நின்றாள். மிக மௌனமாக! கூற வருவதை மௌன பாஷையில் தாயிடம் கூறுகிறாளோ என்னவோ, மௌனத்தை விடவும் உணர்வுகளை எளிதில் புரிய வைக்கும் மொழி உண்டோ? மனதில் உள்ள குறைகளை கூறியப்பின் மின்விளக்கை அணைத்துவிட்டு சிறு விளக்கை உயிர்பித்துவிட்டு அங்கிருந்து சென்றாள் அவள். இனி அந்தத் தாய் கவனித்துக் கொள்வார் அல்லவா! பல ஆண்டுகள் கழித்து, அவனது அடையாளத்தை அவனுக்கு உணர்த்தியவருக்கா தெரியாது எவர் முன்னிலையில் மகன் திருமணம் நிகழ வேண்டும் என்று!!

நிகழ்காலத்தை நோக்கும் முன், கடந்தக் காலத்தை அறிவது அவசியம். ஒருவன் தனது கடந்தக் காலம் யாதென அறிவான் என்றால், நிகழ்காலத்தை அவனால் கசப்பான நிகழ்வுகளிலிருந்து மீட்டு எடுக்கவும் எதிர்காலத்தை உளிக்கொண்டு சலவை கல்லாய் செதுக்காமல், சிலையெனவும் செதுக்கவும் இல்லை. கடந்த காலத்தை சிந்திப்பதால் பயனில்லை என்பர்.இங்கு பயனில்லாதது என்று ஏதுமில்லை. கடந்த காலத்தை சிந்திப்பதால் ஒருவன் ஏற்பட்ட இழப்புகளில் இருந்தும், செய்த குற்றங்களிலிருந்து இனி அதுபோன்ற குற்றங்கள் நிகழாமல் பாதுகாக்கப்படுகிறான். நிகழ்காலத்தை அலசும் முன் தர்மாவின் கடந்தக் காலம் யாது என்பதை தெளிவுறுவது அவசியமல்லவா!!!

ருபத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு....

கூடல்வாய்புரம் (கற்பனை...)

பசுமைக்கும், அமைதிக்கும் பெயர் போன கிராமம் அது! ஒழுக்கக்கேடு என்பது அங்கு என்றும் இருந்ததில்லை. விதிகளை மறந்தோர் உயிரோடு இருந்ததில்லை, உயிருடன் எரித்துவிடுவர் அங்கிருக்கும் ஆன்றோர். அங்கு மதத்திற்கோ, சமயத்திற்கோ என்றும் இடம் இருந்ததில்லை. கலப்புத்திருமணத்தை உயர்வாய் எண்ணுவர், ஆனால், காதலுக்கு மறுப்பு உண்டு. காதல் என்றால் மேற்கூறிய தண்டனை தான் யாராய் இருந்தாலும்! பெண்களை போற்றிப் புகழும் மண் அது! எந்த ஒரு ஆண்மகனும் வேடிக்கைக்காக கூட தன் மனையாளை தவிர வேறு ஒருத்தி மேல் தன் பார்வையை செலுத்த மாட்டர். அத்தகைய மண்ணில் தான் பிறந்தாள் தர்மா. அவரது தந்தை அவரது பிறப்பிற்கு சில காலங்கள் முன் மாண்டுவிட, அவரது தாய் தான் அவளுக்கு அனைத்தும்!! உறவிற்கு மட்டுமல்ல ஊருக்கும் நல்ல வழிகாட்டி அவர்தான். அவர் பேச்சுக்கு மறுபேச்சு உதிர்க்க எவருக்கும் துணிச்சல் வந்ததில்லை. தனது புதல்விக்கு மனதார தர்மராஜன் என்ற அவள் தந்தை பெயரையே சுருக்கி 'தர்மா!' என்று சூட்டி மகிழ்ந்தார். இயற்கையிலே சிறந்த ஞானமும், எழலும் வாய்க்கப் பெற்றவர் தர்மா.அனைவரிடத்திலும் கனிவுக் கொண்டவர். பொறுமையின் இலக்கணமாய் அவரை போற்றினர் யாவரும்!!!அங்கு தான் ஆரம்பித்தது வேதனையும்!! யாவரையும் நல்லோர் என்று நம்பிய மனதிற்கு வரபோகும் துர்நிகழ்வு தெளிந்திருக்கவில்லை.

யாதும் சுகமாய் சென்றிருந்த சமயம், நிகழ்ந்தது சூரிய நாராயணன் மற்றும் அவரது இளவல் நவீன் குமாரின் வருகை! அந்தக் கிராமத்தில் மிக பெரிய தொழிற்சாலை நிறுவ வருகை தந்தனர் இருவரும்! அவர்கள் வந்த நோக்கம் உணர்ந்ததும் விரட்டினார் தர்மாவின் தாயார் பார்வதி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.