(Reading time: 13 - 25 minutes)

தொடர்கதை - காதலான நேசமோ - 13 - தேவி

Kaathalana nesamo

ரவணனோடு திருமணம் இல்லையென்று ஆன பின், அவர்களை கிளப்பி அனுப்பும் வேலையை சந்தோஷ் , ஸ்ருதி பார்த்துக் கொள்ள, விஷயம் கேள்விப்பட்ட ராமின் அப்பா, அம்மா இருவரும் தங்கள் பேத்தியை காண வந்தனர்.

முரளி, ராம் உறவினர் ஒருவர் கூட ஏன் இந்த கல்யாணம் நின்று விட்டது என்று கேட்கவில்லை. அவர்களுக்கு தெரியும் ராம் இதை செய்து இருக்கிறான் என்றால் சரியான காரணம் இல்லாமல் இருக்காது என்று. இனி அடுத்து என்ன என்ற கேள்வியே எல்லோரிடமும் இருந்தது.

சைந்தவி, சுமித்ரா இருவரும் எதுவும் புரியாமல் மித்ராவின் அருகில் நின்று கொண்டனர். சபரியோ கண்களில் கண்ணீர் வர , தன் மகளை அணைத்து கொண்டு நின்றார்.

அப்போதுதான் மைதிலி கேட்கவும், மைதிலி அப்படி கேட்பாள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. எல்லோரும் அப்படியே நிற்கவும், மித்ராவின் பாட்டி மட்டும் ஆச்சர்யத்தோடு,

“என்ன தீடிர் என்று கேட்கிறாய் மைதிலி?

இப்போது சுதாரித்த ராமின் அம்மா கௌசல்யா,

“மைதிலி கேட்பது சரிதான் அண்ணி. ஷ்யாம் , மித்ராவிற்கு கல்யாணம் முடித்தால் என்ன?

அவருக்கு தெரியும் ராமின் சம்மதம் இல்லாமல் மைதிலி சொல்லியிருக்க வாய்ப்பில்லை. மைதிலி, ராமின் முகபவானை பார்த்தால், அவர்கள் இதை பற்றி ஏற்கனவே பேசியிருக்க வேண்டும் என்று தோன்றியது. இருந்தாலும் இப்போது அதை பற்றி கேட்காமல், அவர்கள் போக்கிலே அவரும் சென்றார்.

“இந்த நிலைமையில் திருமணம் என்றால் அது எந்த அளவு சரி வரும் சம்பந்திம்மா. பொருத்தம் எல்லாம் பார்த்து ஒருவருக்கு ஒருவர் என்று மனதை தயார் செய்து கொண்டிருந்த போதே , இப்படி ஒரு பிரச்சினை. இதில் மனதளவில் இவர்கள் இருவரும் அந்த நினைவு கூட இல்லாது இருந்தவர்கள். அவர்களை திருமண பந்தத்தில் இணைப்பது சரியான முடிவாக இருக்குமா?”

இதற்கு பதிலாக மைதிலி “யார் என்றே தெரியாத ஒருவர் என்றால் நீங்கள் சொல்வது சரி பெரியம்மா. ஆனால் இங்கே ஷ்யாமோ, மித்ராவோ ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தவர்கள். அவள் வாழப் போகும் வீடும் அவளுக்கு இன்னொரு தாய் வீடு போலே தான். முதலில் தடுமாறினாலும் பிறகு சரியாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது.”

“நாம் பேசிக் கொண்டு இருந்தால் போதுமா? சம்பந்தப்பட்டவர்கள் இருவரும் என்ன சொல்கிறார்களோ?

“நிச்சயம் அவர்கள் சம்மதம் இருந்தால் தான் எல்லாமே. ஆனால் அவர்களிடம் பேசுவதற்கு தான் உங்களிடம் கேட்கிறேன் பெரியம்மா.”

மித்ராவை பார்த்தார் அவள் பாட்டி. அவள் என்ன என்றே புரியாமல் தான் நின்றாள். பின் மைதிலியிடம் திரும்பி

“மித்ரா, ஷ்யாமிற்கு சம்மதம் என்றால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை மைதிலி “ என்று விட்டார்.

இப்போது அனைவரும் மித்ராவை பார்க்க, மைதிலி எல்லோரிடமும்,

“சபரி, முரளி அண்ணாவை தவிர எல்லோரும் வெளியில் போகலாம். மித்ரா நீ அப்பா, அம்மாவிடம் உன் மனதை திறந்து பேசு. உனக்கு இந்த ஏற்பாடு பிடித்தால் மட்டுமே ஷ்யாமிடம் பேசுவோம். ஆனால் அதிக அவகாசம் இல்லை என்பதால், அரைமணி நேரத்தில் உன் முடிவை சொல்லு. “ என்று விட்டு வெளியேற எத்தனிக்க,

“யாரும் போக வேண்டாம். இங்குள்ளவர்கள் எல்லோருமே என் நல்லதை நாடுபவர்கள் தான். ஆனால் என்னால் குடும்ப வாழ்க்கை நடத்த முடியுமா என்று சொன்னார்களே? அப்படி இருக்கும்போது எனக்கு கல்யாணம் அவசியமா? என்று கேட்கும்போதே அவள் கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்தது.

“மித்ரா” என்று அனைவரும் அதட்டினர்.

மைதிலி “மித்து, அவர்கள் லூசு மாதிரி ஏதோ கேட்டார்கள் என்றால், அது உண்மை என்று அர்த்தமில்லை. “

“அத்தை, அவர்கள் மிகைபடுத்தி சொல்லியிருந்தாலும் கூட, அடித்தளம் இல்லாமல் இருக்க வாய்ப்பு இல்லையே”

“உனக்கு என்ன தெரியவேண்டும் மித்துமா? “

இப்போது அவள் தயங்கவும், மெதுவாக மற்றவர்கள் வெளியேற, மைதிலி, சபரி மட்டுமே இருந்தனர்.

“சொல்லு மிது, உனக்கு என்ன தெரியனும்?”

“அத்தை, எனக்கு தெரிஞ்சுது எல்லாம் நான் மற்றவர்கள் மாதிரி நார்மல் ஸ்கூலில் படிக்கல. ஸ்பெஷல் ஸ்கூலில் தான் படிச்சேன். எனக்கு படிச்சத நியாபகம் வச்சுக்க கஷ்டமா இருக்குன்னு சொன்னீங்க. அதோட அவங்க நடத்தற வேகம் என்னாலே பாலோவ் பண்ண முடியாது. சோ சாதாரண ஸ்கூலில் ரொம்ப பின்னாடி போயிடுவ. அது உன்னோட தைரியத்த குறைக்கும். ஸ்பெஷல் ஸ்கூல் போட்டீங்க என்று சொல்லியிருந்தீங்க. காலேஜ் வரும்போது நார்மல் காலேஜ் சேர்ந்தேன். ஆனால் இப்போ அவங்க சொல்லிட்டு போறத பார்த்தா வேறே பிரச்சினைகளும் இருக்கும் போலவே. அது என்ன?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.