(Reading time: 14 - 28 minutes)

தொடர்கதை - காதலான நேசமோ - 14 - தேவி

Kaathalana nesamo

ஷ்யாம், மித்ரா தவிர அனைவருமே இந்த கல்யாணத்தை சந்தோஷத்தோடு வரவேற்றனர்.

கல்யாண மாப்பிள்ளை மாறிய விஷயத்தை உறவினர்களுக்கு பக்குவமாக சொல்லும் பொறுப்பை ஷ்யாமின், தாத்தா பாட்டி ஏற்றுக் கொண்டனர்.

மித்ராவின் பாட்டி சைந்தவி, சுமித்ரா இருவரையும் பார்த்து “பிள்ளைங்களா நீங்க போய் சீக்கிரம் படுங்க. நாளைக்கு நீங்க ரெண்டு பேரும் தான் பொண்ணு, மாப்பிள்ளை கூட அதிக நேரம் இருக்கப் போறீங்க. அப்புறம் போட்டோ, வீடியோவில் பார்க்க நல்லா இருக்காது” என்று கூறினார்.

“அத தான் பாட்டி டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கோம். நாளைக்கு எங்க மேக் அப் எல்லாம் ஏற்கனவே பண்ண மாதிரி இருக்கட்டுமா? இல்லை மாத்தலாமான்னு யோசிச்சுட்டு இருக்கோம்”

“என்ன மேக் அப் போட்டாலும் இருக்கிறது தான் தெரியப் போகுது.” என்று அவர்களை வாரினார் பாட்டி.

“இப்போ என்ன நாங்க நல்லா இருக்கோம்ன்னு சொல்றீங்களா? இல்லைன்னு சொல்றீங்களா? – இருவரும் இடுப்பில் கை வைத்து பாட்டியை வம்பு இழுக்க,

“நான் ஒண்ணுமே சொல்லலை. போங்க போய்ப் படுங்க” என்று பாட்டி விரட்டினார்.

அஷ்வின் தற்போதைய மாறுதல்களால் வேறு சிலரை நேரில் அழைக்க வேண்டியவர்களை அழைக்கச் சென்று இருந்தான்.

சிறியவர்களை விரட்டிய பாட்டி, ஷ்யாம் மித்ரா இருவரையும் பார்த்து

“மிது, ஷியாம் ரெண்டு பேரும் போய்ப் படுங்க. எதுவும் யோசிக்காம தூங்குங்க. இதுதான் கடவுள் போட்ட முடிச்சுன்னு தோணுது. நாளைக்கு நிச்சயம் தானே. காலையில் கொஞ்சம் மெதுவா எழுந்துருங்க. “ என்று கூறி விட்டுச் சென்றார்.

ஷ்யாம் எப்போதும் போல் மித்ராவிடம் அதே அக்கறையுடன்

“குட் நைட் மித்து. “ என்றுவிட்டு சென்றான்.

மித்ராவும் தலையை மட்டும் அசைத்தாள். அவர்கள் இருவரும் அவரவர் அறைக்குச் சென்றனர். இந்த தீடிர் திருமணத்திற்குச் சரி என்று சம்மதித்தாலும், அதை ஜீரணித்துக் கொள்ள இருவருக்கும் கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது.

மித்ராவிற்கு ஒரு பக்கம் விடுதலை ஆன உணர்வு தான் தோன்றியது. அவள் வாழ்க்கையில் ஆண்கள் என்றால் அவள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் தான் தெரியும்.

வெளியில் எல்லாம் அத்தனை தூரம் பழக மாட்டாள். அவள் வெளி மனிதனாக முதல் முதலில் அறிமுகம் ஆனவன் சரவணன் தான். ஆனால் அவனின் பேச்சுக்களைக் கேட்டவளுக்கு சந்தோஷமோ , ரசிப்போ வருவதற்குப் பதில் பயம்தான் ஏற்பட்டது.

நடுவில் ஷ்யாமைப் பற்றி அவன் பேசிய போது இவள் கோபமாகப் பேசிய பின் அவனின் பேச்சில் சில வித்தியாசம் தெரிந்தது. தன்னைப் பற்றி மட்டுமே பேசுபவன், ஷ்யாமைப் பற்றிய விவரங்களைக் கேட்டான். அப்போதும் மித்ரவைப் பற்றி எதுவும் கேட்கவில்லை.

அதை எல்லாம் அப்போதே யோசிக்க ஆரம்பித்து இருந்தாள். இப்படி தன்னிலேயே மூழ்குபவனை எப்படி நம்புவது என்று எல்லாம் யோசித்தாள்.

இன்றைக்கு ஷ்யாம் அத்தானோடு திருமணம் என்றான பின் , அவளுக்கு ஒரு நிம்மதி வந்து இருந்தது. தெரிந்த இடத்திற்குத் தான் போகப் போகிறோம் என்ற பலம் கிடைத்து இருந்தது. ஆனால் அடிமனதில் ஏதோ ஒரு தயக்கம் இருந்தது.

ஷ்யாமிற்கோ அவன் அம்மா, அப்பா சொன்ன சில விஷயங்களை வைத்து சம்மதம் சொல்லியிருந்தாலும், அவளோடான தன் வாழ்க்கை எப்படிக் கொண்டு போக வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தான்.

இருவருமே இதை எல்லாம் எண்ணி வெகு நேரம் விழித்து இருந்து விட்டு, நேரம் கழித்துதான் கண்ணயர்ந்தார்கள்.

தீடிர் ஏற்பாடுகள் என்றாலும் எந்த குறையும் இருக்கக் கூடாது என்று ராம், முரளி இருவருமே விரும்பினார்கள். அதையே அவர்கள் உறவினர்களும் கூற, சபரி, முரளி இருவரும் மாப்பிள்ளைக்காக செய்ய வேண்டிய முறைகளை ஷ்யாமிற்குத் தகுந்தார் போல் மாற்றும் வேலைகளை பார்த்தார்கள்.

சபரியும் முரளியும் தெரிந்த கடையில் சொல்லி ஷ்யாமிற்கு மட்டும் இல்லாமல் அவன் வீட்டில் அனைவருக்கும் துணிமணிகளை நல்ல விலையில் வாங்கினார்கள். ஏற்கனவே வாங்கி இருந்தாலும், அவர்களுக்கு சம்பந்தி என்ற முறையிலும் இன்னொரு செட் துணிகள் வாங்கினார்கள்.

சந்தோஷ் குடும்பத்திற்கும் இப்போது ராம், மைதிலி இன்னொரு செட் ஆடைகள் எடுத்தனர். மைதிலிக்கு உடன் பிறந்தவன் செய்யும் சீர் எப்போதும் சந்தோஷ் செய்வதுதான். எனவே அவர்கள் தான் ஷ்யாமின் தாய் மாமா முறை என்று அவர்களுக்கு தேவையானதை செய்தனர்.

அதே போல் மைதிலியின் அம்மா வழி உறவுகள் என்று இருந்தவர்களை வரவழைக்க ஏற்பாடுகள் செய்துவிட்டு, அவர்களுக்கும் மரியாதைக்கு என்ன செய்ய வேண்டுமோ ஏற்பாடு செய்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.