(Reading time: 14 - 28 minutes)

றுநாள் காலையில் ஷ்யாமின் அறைக் கதவுத் தட்டப்பாடவும் யாரு என்று பார்க்க, அவன் நண்பன் நின்று இருந்தான். சென்னையில் இருக்கும்போது அவனின் ஒய்வு பொழுதுகள் அவனோடுதான் கழியும். ஷ்யாமை விட அஷ்வின் வயதில் சிறியவன் என்பதால் அவனைத் தம்பி மாதிரி தான் எண்ணி இருந்தான். அஷ்வின்க்கு ஷ்யாம் ரோல் மாடல் -போலேதான். தோழமையோடு பழகி இருந்தாலும், இந்த சிக்கலான நேரத்தில் தன்னை விட ஷ்யாமின் நெருங்கிய நண்பன் வந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி, அஷ்வின் தான் ஷ்யாம் பிரெண்ட் ரவியைக் கையோடு அழைத்து வந்து இருந்தான்.

ஷ்யாமிற்கு அவனைப் பார்க்கவும் சந்தோஷமும், கொஞ்சமே கொஞ்சம் வெட்கமும் வந்தது.

“டேய் அஷ்வின் இங்கே பாருடா. உங்க அத்தானுக்கு வெட்கம் எல்லாம் வருது டோய்” என்று கலகலக்க, ஷ்யாம் அவன் வாயைப் பொத்தி உள்ளே இழுத்தான்.

“டேய்.. வந்தவுடனே உன் வேலைய ஆரம்பிச்சுட்டியா? அடங்குடா” என்று அவனை ஷ்யாம் திட்டினாலும், அவன் முகத்தில் ஒரு களை வந்து இருந்தது. இப்போதுதான் அஷ்வினிற்குச் சற்று நிம்மதியாக இருந்தது. அவனின் தங்கை அவனுக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஷ்யாமும் முக்கியம்.

எல்லாம் நல்லபடியாக நடந்து கொண்டு இருந்தாலும் கூட, இந்த கலகலப்பு குறைந்து இருந்தது. இப்போது அதுவும் சேர, பார்க்க நன்றாக இருந்தது.

அவர்களின் கலாட்டவை சிரித்தபடி பார்த்துவிட்டுச் சென்று விட்டான் அஸ்வின்.

அஸ்வின் சென்றபிறகு ரவி “டேய் ஷ்யாம். ஆனாலும் உனக்கு எங்கியோ மச்சம் இருக்குடா. இங்க பாரு நானும் நாலு வருஷமா லவ் பண்ணி, வீட்டிலே சம்மதமும் வாங்கிட்டேன். ஆனால் கல்யாணம் பண்ணிக் வைக்கிறாங்களான்னு பார்த்தா அவ படிப்பு முடியட்டும் வெயிட் பண்ணினாங்க. இப்போ என்னடான்னா எவனோ குருவாம் அவன் வரலையாம். அவன் வரும் வரைக்கும் பேசாம இருக்கனும்ன்னு வெறி ஏத்திகிட்டு இருக்கானுங்க. இங்கே பாரு முதல் நாள் நைட் முடிவு பண்ணி, அடுத்த நாள் நிச்சயம் அதுக்கு அடுத்த நாள் கல்யாணம்னு போயிட்டே இருக்க. நீ கொடுத்து வச்சவன்டா”

“அடப் போடா.. நானே டென்ஷனா தான் இருக்கேன். நீ வேறே ?

“என்னடா டென்ஷன் உனக்கு?

“தெரியலைடா.. ஒரு மாதிரி ரெஸ்ட்லேஸ்சா இருக்கு”

“அது எல்லாருக்கு வர்றதுதாண்டா..”

“இல்லைடா. இன்னைக்கு, நாளைக்கு எல்லாம் மற்றவங்க சொல்றது தான் செய்யப் போறோம். ஆனா அதுக்கு அப்புறம் எங்க வாழ்க்கைய லீட் பண்றது பற்றித் தான் ஒரே யோசனையா இருக்கு”

“அது எல்லாம் ஒன்னும் பிரச்சினை வராதுடா. உன்னைப் பற்றி எனக்குத் தெரியும். நீ அஷ்வின் சிஸ்டர பிடிக்காம கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு இருந்து இருக்க மாட்ட. கொஞ்ச நாளில் எல்லாம் சரியாயிடும். இல்லைன்னாலும் நீ சரி பண்ணிடுவ”

“ம். எனக்கும் அந்த நம்பிக்கைதான் ரவி”

இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும்போதே உள்ளே நுழைந்த ராம், மைதிலி இருவரும்

“வா ரவி. நல்லவேளை ஊரில் இருந்த. இல்லாட்டா ரொம்ப கஷ்டமாயிர்ந்து இருக்கும். உங்க செட்லே மற்றவங்க எல்லோருக்கும் சொல்லிட்டியா?

“சொல்லிட்டேன் பா. முடிஞ்சவரை எல்லோரும் இன்னிக்கு சாயந்திரம் வந்துருவாங்க. இல்லாட்டாலும் காலையில் கண்டிப்பா வந்துருவாங்க”

“ரொம்ப சந்தோஷம்” என்ற ராம் “ரவி , இந்தா உனக்கு பேன்ட் ஷர்ட். “ என்று அவன் கையில் கொடுத்தான்.

ஷ்யாம் “ஏன்ப்பா, இவ்ளோ டென்ஷன்லே இதை எல்லாம் ஏன் இழுத்துட்டு விட்டு இருக்கீங்க?”

“ஷ்யாம், நீ எங்க ஒரே பையன். உன் கல்யாணத்துலே எந்தக் குறையும் இருக்கக் கூடாது.” என்று கூறிய ராம்,

“ஷர்ட் சைஸ் சரியா இருக்கா ரவி?”

“அப்பா அவனுக்கு சைஸ்லே சட்டை எடுத்தது எல்லாம் அந்தக் காலம். இப்போ எல்லாம் பேரெல் கணக்குலே துணி வாங்கி தைக்கிறான்” என்று அவனை வம்புக்கு இழுக்க, ரவி அவனைத் துரத்தினான்.

“ஷ்யாம், என்னடா அப்போ உன் பிரெண்ட்ஸ் எல்லோருக்கும் பேரெல் தான் வாங்கனுமா?” என்று ராமும் கலகலக்க,

“அப்பா , யு டூ “ என்று சண்டை போட்டான் ரவி.

மைதிலியோ “ரவி உன் அப்பா, அம்மா எல்லாம் வந்துருவாங்க இல்லியா?”

“எல்லோரும் வருவாங்க மா.. இந்த தடியன் கல்யாணத்துக்கு வரும் வேலையை விட எதுவும் முக்கியம் இல்லை” என்று பதில் அளித்தான்.

மைதிலி “ஷ்யாம் கண்ணா, இந்த சூட்கேஸ் நிறைய ஷர்ட்ஸ் இருக்கு. சைஸ் வரியா இருக்கு. உன் பிரெண்ட்ஸ் யார் யாருக்கு கொடுக்கணுமோ கொடு. ரவி அவன் கிட்டே கேட்டு நீ வாங்கிக் கொடுத்துடுபா” என்று சொன்னாள்.

“நான் பார்த்துக்கறேன் மா. நீங்க மற்ற வேலையைப் பாருங்க” எனவும், ராம், மைதிலி இருவரும் சிரித்தனர்.

“ஷ்யாம் இன்னும் அரை மணி நேரத்தில் நிச்சயத்திற்கு ரெடி ஆக வேண்டும். நிச்சயம் முடிந்த பின் வேண்டும் என்றால் பார்லர் போய் வா. “ என்றாள் மைதிலி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.