(Reading time: 13 - 25 minutes)

“அடக் கொடுமையே. ஷ்யாமா உனக்கு இந்த சோதனை தேவையா? “ என்று டயலாக் கூற, அவனின் தோளில் தட்டிய மைதிலி,

“என்ன சொல்ல வந்தியோ அதைச் சொல்லுடா?

“நல்ல வேளை நியாபகப் படுத்துனீங்க. இப்போ மித்ராவும் என்னோட ரூமில் இருக்கணும் இல்லியா. அதனால, என்னோட கப் போர்டுலே உள்ள பைல்ஸ் எல்லாம் எடுத்து , என் ரூம்லே இருக்கிற அந்த இன்னொரு ரூமில் வச்சிடுங்க. அதே மாதிரி என் புக் செல்ப்லே உள்ளதுவும் எடுத்து அந்த செகண்ட் ரூமில் வச்சிடுங்க”

“ஏண்டா. இவ்ளோ கஷ்டப் படுறதுக்கு, அந்த செகண்ட் ரூம் அப்படியே மித்ராவிற்கு கொடுத்துடலாம் இல்லியா?

“மா, அவளுக்கும் எனக்கும் இந்த கல்யாணத்த நல்ல முறையில் ஏத்துகிட்டு அடுத்த ஸ்டேப் போகணும்னா, அதுக்கு தனிதனியா இருந்தா சரியா வராதும்மா. என்னை அவள் மாமா பையனா மட்டும் தான் பார்த்து பழகி இருக்கா. என் கூடவே இருந்தா தானே என்னோட எல்லா குணங்களும் அவளுக்குத் தெரிய வரும்?

“நீ சொல்றதும் சரிதான்” எனவும், ஷ்யாம் வெளியேறினான்.

மைதிலி ராமிடம் “அவன் என்ன சொன்னான் ராம்?

அவன் சொன்னதை ராம் சொல்ல, இப்போது மைதிலி குழம்பினாள்.

“ஏன் ராம்? உங்க கிட்டே அப்படி சொன்னவன், நம்ம வீட்டில் இப்படி செய்யச் சொல்கிறானே?

“ஹ்ம்ம். அவன் ஏதோ யோசித்துச் செய்கிறான். அப்படியே விட்டுடலாம் மிது”

“சரி. இதை எப்படி முரளி அண்ணாவிடம் சொல்வது? பெண்ணைப் பெற்றவர்களாக அவர்களுக்கு இதை எவ்வளவு தூரம் ஏற்றுக் கொள்ள முடியும் என்று தெரியவில்லை? அதோடு பெரியம்மா வேறு என்ன சொல்வார்களோ என்று யோசனையாக இருக்கிறது?

“அது எல்லாம் ஒன்னும் பிரச்சினை இருக்காது மைதிலி. ஏற்கனவே உள்ள பிளான்படி பொண்ணு, மாப்பிள்ளை அவர்கள் வீட்டிற்கு வருவதாக இல்லை என்பதால், வேறு எதுவும் ஏற்பாடுகள் செய்திருக்க மாட்டார் முரளி. இப்போ இவர்கள் வருகிறார்கள் என்றாலும் , பெரிய அளவில் செய்ய நினைக்க மாட்டார்கள். நானும் நாசுக்காக சொல்லி விடுகிறேன்” என சரி என்று தலை அசைத்து விட்டு சென்றாள் மைதிலி.

மண்டபம் காலி செய்து, மற்றவர்களுக்கு செட்டில் செய்ய வேண்டியதை எல்லாம் செய்த பின், எல்லோரும் கிளம்பினர்.

ராம் வீட்டிலிருந்து பொண்ணு மாப்பிள்ளையோடு கூட செல்வது யாரு என்று எல்லோரும் யோசிக்க, சபரி தன் அம்மாவிடம்

“அம்மா, ஷ்யாம் என் மாப்பிள்ளை ஆகும் முன் என் மருமகன். அவன் அத்தை வீட்டிற்குதான் வருகிறான். சுமிக் குட்டி, சிந்துமா, எல்லோரும் எங்களோடு வரட்டும். பெரியவர்கள் நீங்கள் போய் அங்குள்ள வேலையைப் பாருங்கள் “ என்றுவிட்டு, ஷ்யாமிடம் திரும்பி

“ஷ்யாம், உன் பிரெண்ட் ரவிய கூப்பிடு. உனக்கு பேச்சுத் துணைக்கு அவன் வரட்டும்” என ,

ஷ்யாமோ தன் அத்தையின் பேச்சைக் கேட்டு “அத்தை , எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. பாவம் ரவி வீட்டுக்குப் போகட்டும். டெல்லி போயிருந்தவன நேத்திக்கு அஷ்வின் வீட்டுக் கூட போக விடாம, மண்டபத்துக்கு இழுத்துட்டு வந்துட்டான்” எனவும்

“அப்புறம் என்ன?  கிளம்பலாம்” என்று விட எல்லோரும் கிளம்பினர்.

பொண்ணு , மாப்பிள்ளை வீட்டிற்கு வரவும் , அவர்களுக்கு ஆரத்தி கரைத்து வரவேற்க, உள்ளே சென்ற இருவரையும் பூஜை அறைக்கு சென்று வணங்கி விட்டு, ஹாலில் அமர வைத்தனர்.

அப்போது பால் , பழம் எடுத்து வந்து மித்ராவின் உறவினர் ஒத்தை படை என்று கணக்கு சொல்லி ஏழு பேர் கொடுக்க சாப்பிட்டனர்.

அதோடு முடியவும் ஷ்யாம் “அத்தை , இப்படி பால், பழம் கொடுத்தே ஓட்டிடப் போறீங்களா? காபி, டீ எதுவும் கண்லே காட்ட மாட்டீங்களா?

“போடா அரட்டை” என்று சொல்ல, முரளியின் அம்மா “சபரி” என குரல் கொடுக்க, சட்டென்று “சாரி ஷ்யாம்” என்றாள்.

“அத்தை. கொஞ்ச நேரம் முன்னாடி என்ன சொன்னீங்க? ஷ்யாம் எனக்கு முதலில் அண்ணன் பையன் தான்னு சொன்னீங்கள? எப்போவும் எங்கிட்ட எப்படிப் பேசுவீங்களோ அப்படியே பேசுங்க” என்று கூறியவன் பாட்டியிடம் திரும்பி

“பாட்டி, இத்தனை நாள் எங்க அத்தைய மிரட்டினா மாதிரி மிரட்ட முடியாதாக்கும். இப்போ நான் இந்த வீட்டு மாப்பிள்ளை. எங்க அத்தைய விரட்டினா நான் சும்மா இருக்கமாட்டேன்” என்று கூறினான்.

அவனின் பேச்சைக் கேட்ட மித்ராவின் பாட்டி “போடா அரட்டை. உங்க அத்தைக்கு நீ மருமகன்னா, எனக்கு நீ பேரன் முறையாகனும். அதனால் உன் மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன் பார்த்துக்கோ” என்று அவரும் சரிக்கு சமமாக அவனோடு வம்பிழுத்தார்.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த மித்ராவிற்கு தன்னை அறியாமல் சரவணன் நினைவு வந்தது. அவனைத் திருமணம் செய்து இருந்தால், இந்த வீடு இத்தனை கலகலப்பாக இருந்து இருக்குமா என்று யோசித்தவளுக்கு, நல்லவேளை அவனிடமிருந்து நாம் மட்டுமில்லை, இந்த வீடும் தப்பியது என்றே தோன்றியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.