(Reading time: 13 - 25 minutes)

தொடர்கதை - காதலான நேசமோ - 15 - தேவி

Kaathalana nesamo

திருமணம் நல்லபடியாக முடிந்து இருக்க , வந்தவர்களை கவனிக்கும் வேலையில் அனைவரும் பிஸியாக இருந்தனர். இன்னும் மணமேடையில் சடங்குகள் நடந்த வண்ணம் இருக்க, ஷ்யாம் , மித்ரா இருவருக்கும் பேச எல்லாம் நேரம் கிடைக்கவில்லை.

ராம் மகன் ஷ்யாம் திருமணம் என்று மாறிய பிறகு, அநேகம் பேருக்கு தகவலே முதல் நாள் இரவு தான் கிடைத்தது. அவர்கள் எல்லாம் திருமணத்திற்குக் காலையில் வந்து இருந்தனர். அதனால் சடங்குகளோடு, நடுவில் மணமேடைக்கு வந்து வாழ்த்துக் கூறியவர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டு இருந்தான்.

சைந்தவியும், சுமித்ராவும் தான் அங்கே சற்று ரிலாக்ஸ்டாக இருந்தார்கள். இருவரும் ஷ்யாம், மித்ரா அருகில் அமர்ந்து கொண்டு கேலி செய்து கொண்டு இருந்தார்கள்.

கிட்டத்தட்ட எல்லாம் முடிந்து பொண்ணு, மாப்பிள்ளையை சாப்பிட அழைக்க, இருவரும் மாலைகளை மட்டும் கழட்டி மணவறையில் வைத்து விட்டு டைனிங் ஹால் சென்றனர்.

வழக்கமாக நீள வாக்கில் போடப்பட்டு இருக்கும் சாப்பாட்டு வரிசை, இங்கே வட்டமாக போடப்பட்டு இருக்க, ஒரு இடத்தில் மட்டும் இடைவெளி விட்டு இருந்தது.

ஷ்யாம் மித்ராவை நடுவில் அமர வைத்து, இருபுறமும் இருவரின் சொந்தங்களும் வட்டமாக அமர்ந்தனர்.

பரிமாறுகிறவர்கள் வந்து அனைத்தும் பரிமாறி முடித்ததும், சாதத்தில் கை வைக்கப் போன ஷ்யாமை, கௌசல்யா பாட்டி

“ஷ்யாம் , முதலில் ஸ்வீட் எடுத்து மித்ராவிற்கு ஊட்டி விடு” என, சற்று திகைத்தான்.

அவள் தட்டில் இருந்து எடுத்துச் சாப்பிடுவதோ, ஜூஸ், ஐஸ்கிரீம் ஷேர் செய்வதோ, நன்றாக இருக்கும் டிஷ் எடுத்து டேஸ்ட் பார்க்கக் கொடுப்பதோ இருவரும் செய்து இருக்கிறார்கள் தான். தோழமையோடு செய்யும் செயல்களுக்கும், இன்று கணவனாகச் செய்வதற்கும் வித்தியாசம் உண்டல்லவா.

ஏற்கனவே பேசி வைத்துத் திருமணம் செய்து இருந்தால் இருவருக்கும் அந்த எதிர்பார்ப்பு இருந்து இருக்கும். இருவரும் கணவன், மனைவி என்று மனதில் பதியவே சற்று காலம் ஆகும் என்ற நிலையில், இப்போது  இந்த மாதிரி வேடிக்கைகள் தேவையா என்று தோன்ற, தன் அம்மாவைப் பார்த்தான் ஷ்யாம்.

மைதிலியும் தலை அசைக்கவும், மித்ராவைப் பார்த்தான். அவளும் என்ன செய்ய என்ற பாவனையில் தான் பார்த்தாள். மீண்டும் பாட்டியைப் பார்க்க, அவர் கண்களில் ஒரு உறுதி தெரியவே, மித்ராவிடம் மெல்லக் குனிந்து,

“மித்து, இன்னிக்கு ஒருநாள் இவங்க இஷ்டப்படி நடப்போம். பிறகு மற்றதைப் பார்ப்போம் சரியா? என்று கேட்க, மித்ராவும் மெல்லத் தலையசைத்தாள். அவளின் சம்மதம் கிடைத்தப் பின் தன் இலையில் இருந்து ஸ்வீட் எடுத்து ஊட்டினான். மூன்று நான்கு ஸ்வீட் இருந்த போதும் அவளுக்கு மிகவும் பிடித்த காஜூ கதலி தான் ஊட்டினான்.

உடனே ஓஹோ என்று சிறியவர்கள் ஆரவாரம் செய்ய, பெரியவர்களும் மெல்ல சிரித்தனர்.

இப்போது மித்ராவின் பாட்டி “மித்ரா, நீ இப்போ ஷ்யாமிற்கு ஊட்டு” என, அவளும் மெல்லத் தலையசைத்தாள். ஷ்யாம் காஜு கதலி ஊட்டினான் என்று அதையே கொடுக்காமல், அவனுக்குப் பிடித்த அல்வா பீஸ் கொடுத்தாள். இப்போது இன்னும் பெரிய ஆரவாரம் செய்தனர்.

அதற்குப் பின் எல்லோரும் சாப்பிட ஆரம்பித்தனர். சாப்பிடும் போது மித்ரா காய்கறிகள் சிலதை ஒதுக்குவதைப் பார்த்த ஷ்யாம் , அவளை எல்லாவற்றையும் மிச்சம் வைக்காமல் சாப்பிட வைத்தான். மித்ராவும் அவன் சொல்லும் போது சற்று சிணுங்கலோடு மறுத்தாலும், அவன் சொன்னதைச் செய்தாள்.

இருவரும் இயல்பாகப் பேசிச் சிரிப்பதைப் பாராமல் பார்த்த இருவரின் பெற்றோர்களுக்கும் நிம்மதியாக இருந்தது. சாப்பிட்டு முடித்தப் பின் இளைய தலைமுறை அனைவரும் ஹாலில் நடுவில் அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டு இருந்தனர்.

மதியம் மூன்று மணி அளவில் மண்டப்பத்தைக் காலி செய்ய வேண்டும் என்று முரளி கூற, மைதிலி கெளசல்யாவிடம் வந்தாள்.

அப்போது அங்கே வந்த ஷ்யாம்,

“மா, டிரஸ் மாத்திக்கலாமா? “ என்று கேட்டுக் கொண்டிருக்க,

மைதிலியோ “இருடா. நானே முக்கியமான விஷயத்தை மறந்துட்டேன். இரு அத்தை கிட்டே பேசறேன் “ என்று கூறினாள்.

“அப்படி என்ன விஷயம்?” என ஷ்யாம் கேட்க, கௌசல்யாவும் “என்ன மைதிலிமா மறந்த?

“இல்லை அத்தை. நாம எல்லோருமே இங்கே இருந்துட்டோம். வீட்டிற்கு போக வேண்டிய அவசியம் வரலை. இப்போ பொண்ணு, மாப்பிள்ளைய நாம அழைச்சுட்டுப் போகணும். வீட்டு வாசலில் ஒரு வாழை மரம் கூட கட்டலை. “

“அட ஆமாம். இப்போ என்ன பண்றது?”

ஷ்யாமோ “மா, என்னம்மா ஈவென்ட் மானேஜ்மென்ட் நடத்திகிட்டு இருக்கீங்க? வாழை மரம் அரேஞ்ஜ் பண்றது ஒரு மேட்டரா?

இப்போது பாட்டி “டேய் , அது ஒன்னு தான் பிரச்சினையா? பொண்ணக் கொண்டு விட பொண்ணு வீட்டுலே முக்கியமானவங்க வருவாங்க. அவங்களுக்கு விருந்து கொடுத்து, அதோட மரியாதையும் செய்யணும். அது எல்லாம் ஏற்பாடு பண்ண வேண்டாமா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.