(Reading time: 16 - 31 minutes)

தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 20 - சித்ரா. வெ

Nenchodu kalanthidu uravale

சில மாதங்களுக்கு முன்..

ன்று ஒரு ஞாயிற்றுக் கிழமை.. அனைவருக்கும் அது விடுமுறை தினம் என்பதால்,   புகழேந்தியின்  வீடு ஏதோ விஷேஷம் தினம் போல் இருந்தது. எழில் தன் இரண்டு பிள்ளைகளை கூட்டிக் கொண்டு அண்ணன் வீட்டுக்கு வந்துவிட்டாள். மலர்க்கொடியும் மணிமொழியும் கூட பிறந்த வீட்டிற்கு வந்திருந்தனர்.  ஞாயிற்றுக் கிழமையில் மட்டும் மாலையில் தான் ரெஸ்ட்டாரன்ட் திறக்கும் என்பதால் மகியும் அறிவும் கூட வீட்டில் தான் இருந்தனர். அருள்மொழிக்கும் அன்று  கல்லூரி விடுமுறை..

பூங்கொடி, கலை, எழில் மூவரும் சமையல் வேலையில் மூழ்கியிருக்க, சிறியவர்கள் அனைவரும் பக்கத்தில் இருந்த காலி நிலத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். முத்துப் பாட்டியும், புகழேந்தியும் மலர்க்கொடியின் மகனை மடியில் வைத்துக் கொண்டு பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்திருந்தனர்.  இப்படியே மதியம் பொழுது கழிந்து பின் அனைவரும் மதிய சாப்பாடு சாப்பிட்டனர்.  பின் அனைவரும் வரவேற்பறையில் கூடி இருந்தனர். சிறியவர்கள் எல்லாம் தொலைக்காட்சியில் ஒரு புது திரைப்படத்தை பார்க்க அமர்ந்திருக்க, பெரியவர்களும் பேசியப்படி தொலைக்காட்சியை பார்த்திருந்தனர். காலையில் வந்ததிலிருந்தே எழில் ஏதோ யோசனையாகவே இருந்தார். இதை கவனித்த பூங்கொடி..

“என்ன எழில் காலையிலிருந்து ஒரு மாதிரி இருக்க.. ஏதாச்சும் பிரச்சனையா?” என்றுக் கேட்டார்.

“அது ஒரு முக்கியமான விஷயம் தான் அண்ணி.. உங்கக்கிட்டல்லாம் எப்படி சொல்றதுன்னு தான் தெரியல.. தானாகவே முடிவெடுக்கவும் குழப்பமா இருக்கு..” என்று அவள் பீடிகை போட்டு சொன்னதும், சிறியவர்களும் எழில் பேச்சை கவனிக்க ஆரம்பித்தனர்.

“என்னம்மா எழில் முக்கியமான விஷயம்னா ஏதாச்சும் பிரச்சனையா?” என்று புகழேந்தியும் கேட்டார்.

“அண்ணா.. அவரோட முதல் மனைவியும் பொண்ணும் லண்டன்ல இருக்காங்கன்னு உங்களுக்கு தெரியுமில்ல.. இப்போ அவரோட முதல் மனைவி உயிரோட இல்லண்ணா..’

“என்னம்மா சொல்ற.. அவங்களுக்கு என்ன்னாச்சு..”

“அண்ணா.. பத்து நாள் முன்ன ஒரு ஆக்ஸிடெண்ட்ல அவங்களும், அவங்க கணவரும், அவங்க அம்ம்மாவும் இறந்துட்டாங்களாம்..”

“அப்படியா? உனக்கு முன்னமே தெரியுமா? இப்போ தான் எங்களுக்கு சொல்ற..”

“இல்லண்ணா.. அவரோட ப்ரண்ட் ஆனந்தி இருக்காங்கல்ல.. அவங்க நேத்து தான் எங்க ரெண்டுப்பேருக்கும் விஷயத்தை சொன்னாங்க.. அதுவும் இந்த செய்தியை சொல்ல முக்கிய காரணம் அவரோட பொண்ணு சுடரொளி தான்.. இப்போ அந்த பொண்ணு மட்டும் தனியா இருக்காம்.. அப்பா இருக்கும் போது சுடர் ஏன் தனியா இருக்கணும்.. அதனால அவளை இனி நாங்க தான் பார்த்துக்கணும்னு ஆனந்தி சொல்றாங்க ண்ணா..”

“அதுக்கு கதிர் என்னம்மா சொன்னாரு..?’

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“முடிஞ்ச உறவு முடிஞ்சதாகவே இருக்கட்டும்.. இனி அதை எதுக்கு ஒட்ட வைக்க பார்க்கிற.. எந்த உறவையும் புதுப்பிச்சிக்க வேண்டாம்.. இதோட  விட்றுன்னு அவர் ஆனந்திக்கிட்ட சொல்லிட்டாரு அண்ணா..”

“சரி நீ என்ன முடிவெடுத்திருக்க எழில்..” என்று  பூங்கொடி கேட்டார்.

“என்ன இருந்தாலும் சுடர் அவரோட பொண்னு இல்லையா? இங்க வர வேண்டாம்னு சொல்ல மனசு வரல.. ஆனா அவரே இப்படி சொல்லும்போது என்ன செய்யறதுன்னு தான் யோசனையா இருக்கு.. ஆனந்தி என்னடான்னா நீ உன்னோட புருஷன் கிட்ட  பேசு எழில்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க..”

“மாப்பிள்ளைக்கே இதுல விருப்பம் இல்லைங்கிறப்போ எதுக்கு எழில் நீ  யோசிக்கணும்.. இதெல்லாம் சரி வராதுன்னு மாப்பிள்ளையோட ப்ரண்ட் கிட்ட சொல்லிடு..” முத்துப் பாட்டி கூற,

“அத்தை என்ன இருந்தாலும் அந்த பொண்ணு எழில் வீட்டுக்காரு பெத்த பொண்ணு.. அப்பா உயிரோட இருக்கும் போது அந்த பொண்ணு ஏன் அத்தை அனாதை போல  தனியா இருக்கணும்..” என்று பூங்கொடி கேட்டார்.

“அதுக்காக அந்த பொண்ணை அத்தை வீட்டுக்கு கூட்டிட்டு வர சொல்றீங்களாமா?” என்று மகிழ்வேந்தன் குறுக்கே பேசினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.