அவ்வளவு பெரிய மாளிகையில் சுடரொளி மட்டும் தனியாக இருந்தாள். இந்த பத்து நாட்களாக ஒவ்வொருவராக வந்து துக்கம் விசாரித்து இப்போது தான் அது படிப்படியாக குறைந்தது. ஆனால் சுடரொளியை பொறுத்த வரை மூவரின் இறப்பு பெரிய அளவிற்கு துக்கத்தை கொடுக்கவில்லை. தன்னை பெற்ற கடனுக்காக மட்டும் வெண்மதிக்காக துளி கண்ணீர் சிந்தினாள். செங்குட்டுவன் இறப்புக்கு சிறு வருத்தம் மட்டுமே இருந்தது. ஆனால் பாட்டியின் இறப்பு அவளுக்கு விடுதலையை தான் கொடுத்தது. இனி தன் விருப்பம் போல் வாழ்க்கையை வாழலாம் என்ற நிம்மதி தான் அப்போது அவள் மனதிற்கு தோன்றியது. இனி இந்த வீட்டில் இருக்க முடியாது. செங்குட்டுவன் இறந்ததும் அவரின் இப்போதைய சட்டப்படியான வாரிசு அவள் தான் என்பதால் சொத்து முழுதும் அவள் பேருக்கு மாற்றப்பட இருந்தது. ஆனால் செங்குட்டுவனின் இரண்டாம் மனைவி தன் மகன் தான் செங்குட்டுவனின் ரத்த சம்பந்தப்பட்ட வாரிசு என்று சொத்தில் பாதி வேண்டுமென்று வந்தார். அவருக்கு பாதி சொத்து கொடுக்க அவளுக்கு சுத்தமாக விருப்பம் இல்லை. முழுவதுமே அவர்களுக்கே சேரும்படி எழுதிக் கொடுத்துவிட்டாள். அந்த சொத்தை அனுபவிக்க அவளுக்கு அறுவறுப்பாக இருந்தது. இங்கு நடந்த சில கசப்பான சம்பவங்களே அதற்கு காரணம்..
இப்போது அந்த சொத்தை அவர்களுக்கு எழுதி கொடுத்த பின் தான் நிம்மதியாக உணர்ந்தாள். தனக்கென்று ஒரு இடம் பார்த்து செல்லும் வரை மட்டும் இங்கு தங்க அவர்களிடம் அனுமதி கேட்டாள். நீ எப்போதும் இங்கேயே இருக்கலாம் என்று அவர்கள் சொல்லியும் அவள் அதை மறுத்துவிட்டாள். அடுத்து என்ன செயவது? எங்கே இருப்பது? என்ற கேள்வி வந்த போது.. அமுதன் தங்களோடு வந்து இருக்க சொன்னான். ஆனால் ஆனந்தியோ அவளை அவளின் தந்தையோடு சென்று இருக்க சொன்னார். தந்தையை பார்க்க வேண்டும் என்ற ஆசையும் ஆவலும் மனதில் அதிகமாக இருந்தாலும் அவளுக்கு அங்கு செல்ல விருப்பமில்லை. ஆனந்தியிடம் எவ்வளவு மறுத்தும்.. அவர் அதை கேட்கவேயில்லை. அமுதன் கூட எவ்வளவோ மறுத்து பார்த்தான்.
ஆனால் அவரோ, “அவளோட அப்பா இருக்கும் போது எதுக்கு அவ நம்மக்கூட இருக்கணும்..அவளை நல்லப்படியா பார்த்துக்கிறதுக்கு நமக்கு நல்ல வசதி இருக்கு. ஆனாலும் அவ அப்பா கூட போய் இருக்கறது தான் நல்லது..” என்று விடாப்பிடியாக அதற்கான முயற்சியில் இறங்கி.. இதோ சிறிது நேரத்திற்கு முன் தான் அவள் இந்தியா வருவதற்கு அவளின் சிறிய தாய் எழில் சம்மதம் கூறிவிட்டதாக அலைபேசியில் கூறியிருந்தார்.
அவளின் ஏழு வயது வரை தன் தந்தையின் அன்பை திகட்ட திகட்ட அனுபவித்தவள் தான் சுடரொளி.. தன் தந்தைக்கு தான் மட்டும் தான் முக்கியம் என்ற பெருமையோடு இருந்தவள்.. ஆனால் இன்று அவள் தந்தையோடு இருக்க தன் சிறிய தாயின் அனுமதி தேவைப்படுகிறது. வேண்டாம் நான் இப்படியே இருந்து கொள்கிறேன்.. எனக்கு யாரும் வேண்டாம் என்று புத்தி சொன்னாலும், மனமோ தந்தையை பார்க்க வேண்டும், தந்தியோடு சில காலம் இருக்க வேண்டும் என்று மனது சொல்லிக் கொண்டே இருந்தது. தன் நிலைமை இப்படி ஆகிவிட்டதை நினைத்து சுய இரக்கம் கொண்டாள்.
கதிரவனும் வெண்மதியும் காதல் திருமணம் புரிந்தவர்கள்.. இருவரின் காதல் தீபச் சுடருக்கு பரிசாக கிடைத்தவள் தான் சுடரொளி.. ஆனால் இருவரின் காதலும் ஒரு நாள் கானல்நீராய் மாறக் கூடும் என்பதை கதிரவன் ஆரம்பத்திலேயே அறிந்திருக்கவில்லை.
வெண்மதியின் அன்னை வடிவு பெயருக்கேற்றார் போல் வடிவானவர். அந்த பால் நிலா நிறம் இயல்பிலேயே தனக்கு இருப்பதில் கர்வம் கொண்டவர்.. தன் அழகால் எதையும் பெற்றிட முடியும் என நினைத்தவருக்கு கடைசியில் கையாளாகாத கணவனோடு வாழ்க்கை. அவர் வாங்கும் சம்பளத்தில் வெறும் அடிப்படை தேவைகளை மட்டுமே நிறைவேற்றிக் கொள்ள முடியும்.. இதில் கணவனும் இறந்து போக மகளின் சம்பாத்தியத்தில் தான் இருவரின் தேவைகளும் பூர்த்தியாகி கொண்டிருந்தது.
தன்னை போலவே மகளும் அழகானவள்.. தன்னால் சாதிக்க முடியாததை தன் மகளை வைத்து சாதித்துக் கொள்ளலாம்.. கண்டிப்பாக மகளுக்கு ஒரு ராஜகுமாரன் வருவான். மகள் மூலம் தானும் வசதியாக வாழலாம் என்று தினம் தினம் கற்பனை கோட்டை கட்டியிருந்தார்.
ஆனால் வெண்மதியோ கதிரவனை காதலிப்பதாக சொல்லி அன்னை முன் வந்து நின்றாள். மகள் ஒரு பணக்காரனை காதலித்திருந்தாள் வடிவு மகிழ்ச்சியடைந்திருப்பார். ஆனால் அவளோ ஒரு தனியார் கல்லூரியில் வெறும் சில ஆயிரங்கள் சம்பளம் வாங்கும் தமிழ் விரிவுரையாளர் என்று தெரிந்து மகள் காதலை ஏற்க மறுத்தார். எவ்வளவோ எடுத்துக் கூறினார். ஆனால் அவள் கேட்கவில்லை. கதிரை தான் மணப்பேன் என்று பிடிவாதமாக அவரை மணந்தாள்.
கதிரவனுக்கென்று உறவுகள் யாரும் இல்லாததால் வடிவு அவர்களோடு இருந்தார். கதிரவன் வேலை பார்த்துக் கொண்டே மேற்படிப்பு படிக்க, வெண்மதியும் திருமணத்திற்கு பின் வேலைக்குச் சென்றாள். இதெல்லாம் ஒரு வாழ்க்கையா? உன்னோட அழகுக்கு இப்படி ஒரு வாழ்க்கை வேண்டுமா? என்றெல்லாம் வடிவு மனதை கலைக்க பார்த்தாலும் வெண்மதி கணவன் காட்டும் காதலில் அன்னையின் பேச்சை ஒதுக்கிவிடுவாள்.
சில வருடங்கள் கணவன் குழந்தை என்று மகிழ்ச்சியாக தான் வாழ்க்கை சென்றுக் கொண்டிருந்தது. ஆனாலும் கரைப்பார் கரைக்க கல்லும் கரையும் என்பது போல் வடிவு வெண்மதி மனதில் தொடர்ந்து விஷத்தை விதைத்துக் கொண்டே இருந்தார். இதில் நாளடைவில் அன்னையின் சொல் பேச்சு கேட்டு வெண்மதி கணவனோடு சண்டை போட்டாலும் மகள் மீது உள்ள அன்பிலும் மனைவியின் மீது உள்ள காதலிலும் அனைத்தையும் பொறுத்து கொண்டு போக கதிர் பழகிக் கொண்டார்.
தன்னையும் மகளையும் உரித்து வைத்தது போல் பேத்தி பிறந்திருந்த போது வடிவு மகிழ்ந்தாலும், கதிரவன் மகள் மேல் உயிரையே வைத்திருக்க அதில் பேத்தி மீது கூட மருமகன் மீது உள்ள கோபத்தை காண்பிக்க ஆரம்பித்தார். பெற்றவர்கள் இருவரும் அலுவலகம் சென்றபின் வடிவு தான் சுடரொளியை கவனித்துக் கொள்வார். இதில் அவர் சொல் பேச்சுக் கேட்காமல் ஏதாவது சுடர் குறும்பு செய்தால் அவளை திட்டுவார். சில சமயங்களில் அடிக்கக் கூட செய்வார். ஒருநாள் மாமியார் மகளை அடிப்பதை பார்த்த கதிரவன் கோபத்தில் மாமியாரை அடிக்க கையை ஓங்கிவிட்டார். பின் சுதாரித்துக் கொண்டு அடிக்க ஓங்கிய கையை மடக்கிக் கொண்டார்.