(Reading time: 14 - 27 minutes)

அமேலியா - 53 - சிவாஜிதாசன்

Ameliya

ரண்டு நாட்களாக வசந்த் வீட்டை விட்டு எங்கேயும் செல்லவில்லை. வீட்டிலிருப்பவர்களைக் கூட பார்ப்பதையும் பேசுவதையும் தவிர்த்தான். மேகலாவிற்கும் நாராயணனுக்கும் வசந்தின் செயல் கவலையைத் தந்தது. என்ன நடந்தது? ஏன் அவன் இவ்வாறு நடந்துகொள்கிறான்? என யூகங்களாக சில கற்பனைக் கதைகளை ஜோடித்து சமாதானம் கூறிக் கொண்டார்கள்.

"மறுபடியும் சான்ஸ் கிடைக்கலை போல. அவனுக்கு நடக்குற போல தான் துவங்கும். ஆனா நடக்காது. இந்த நிலை அவனுக்கு எப்போ தான் மாறுமோ?" என நாராயணன் மேகாலாவிடம் கவலையோடு கூறினார்.

"இல்லப்பா கதையை சரியா எடுக்கணும்னா சில பேர் இப்படி தனிமைய விரும்புவாங்க"

நாராயணன் மேகலாவை நோக்கினார். அவரது இதழ்கள் கேலியாக புன்னகை செய்தது. "ஒரு அப்பனுக்கு தெரியாதா அவன் என்ன நிலையில இருக்கான்னு".

மேகலாவால் பதில் சொல்ல முடியவில்லை.

"எனக்கு என்ன கவலைன்னா, இன்னும் வாழ்க்கை பாடத்தை கத்துக்காம இருக்கானே. இந்த சினிமாவ தூக்கி போட்டுட்டு வேற நல்ல வேலையை பாக்கலாமே"

"வசந்துக்கு அதானப்பா உயிர்"

"இந்த மாதிரி லட்சியம்னு சொல்லிட்டு நிறைய பேர் இருக்குற இடம் தெரியாம மறைஞ்சிட்டாங்க. அவனுக்கும் வயசாகிகிட்டே போகுது. காலா காலத்துக்கு கல்யாணம் செஞ்சிக்கிட்டா தானே நல்லது"

மேகலா அமைதியாக இருந்தாள்.

"புத்திமதி சொல்லும்மா. இவனை இப்படியே விட்டா கடைசியில பிரயோஜனம் இல்லாம போயிட போறான்"

"சரிங்கப்பா"

அமேலியா அறையில் இருந்து மெதுவாக எட்டிப் பார்த்தாள். ஹாலில் நாராயணன், மேகலா அமர்ந்திருந்தது அவளுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. வசந்தை காண முடியாமல் அவள் தவித்தாள்.

'வசந்திற்கு இப்பொழுது தேவை ஆறுதல். அதை தன்னால் தான் தர முடியும்' என அவள் எண்ணினாள். 'ஆனால் இவர்களை தாண்டி எப்படி செல்வது? வசந்த் இன்னும் சாப்பிட கூட வரவில்லை. இவர்களுக்கு சிறிதாவது அறிவிருக்கிறதா' என மனதிற்குள் இருவரின் மேல் கோபம் கொண்டாள். தட்டில் சாப்பாடு போட்டு வசந்திற்கு எடுத்து செல்லலாமா எனவும் அவள் சிந்தித்தாள். பின் அந்த யோசனையை கைவிட்டவள் வேறு யோசனைக்குள் நுழைந்தாள். அந்த யோசனை சரியாக வரும் என அவளுக்கு தோன்றியது.

சமையலறைக்கு சென்ற அமேலியா தட்டில் உணவை போட்டுக்கொண்டு வெளியே வந்தாள். நிலா படுக்கையில் அமர்ந்துகொண்டு வீட்டுப் பாடத்தை  எழுதிக்கொண்டிருந்தாள். நிலாவின் அருகே சென்ற அமேலியா உணவுத் தட்டினை அவள் முன்னே நீட்டினாள்.

எழுதுவதை நிறுத்திவிட்டு அமேலியாவை பார்த்த நிலா, "நான் சாப்பிட்டாச்சு அக்கா" என்றாள்.

உனக்கில்லை என்பது போல் சைகையில் சொன்ன அமேலியா, மேலே கை காட்டி வசந்திற்கு எடுத்து செல்லுமாறு கைகளை ஆட்டி சொன்னாள்.

"மாமாவுக்கா? நான் போக மாட்டேன்"

"ஏன்?" என்பது போல் சைகையில் கேட்டாள் அமேலியா.

"அது கோவமா இருக்குன்னு அம்மா சொல்லுச்சு. இப்போ போய் தொந்தரவு செஞ்சா அடிக்கும். நான் நிறைய தடவை அடி வாங்கியிருக்கேன்".

"எனக்காக கொண்டு போ" என்பது போல் கெஞ்சும் தோரணையில் சைகையில் சொன்னாள் அமேலியா.

"சரி கொடுங்க" என்று உணவுத் தட்டினை வாங்கிக்கொண்டு ஹாலுக்கு வந்தாள் நிலா.

"என்னடி அது?" மேகலா கேட்டாள்.

"பாத்தா தெரியல? சாப்பாடு. மாமாவுக்கு"

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

"பரவாயில்லையே உன் பொண்ணுக்கு இந்த அளவுக்கு அறிவு வளந்திருக்கு. பொறுப்பா சாப்பாடு எல்லாம் எடுத்துட்டு போறா"

"நான் எடுத்துட்டு போல. அமேலியா அக்கா தான் மாமாவுக்கு கொடுத்து அனுப்பினாங்க" என்றபடி மாடிப்படியில் ஏறிச் சென்றாள் நிலா.

நிலா கூறியதைக் கேட்டு இருவரும் அதிர்ச்சியானார்கள். நாராயணன் மேகலாவை முறைத்தார். அப்போது, அமேலியா இரண்டு உணவு தட்டுகளோடு வந்து அவர்கள் அமர்ந்திருந்த சோபாவின் அருகே உள்ள டேபிளில் வைத்துவிட்டு சென்றாள். நாராயணனின் கோபம் சற்று தணிந்தது.

"அமேலியா எல்லாரும் சாப்பிடணும்னு நினைக்கிறாப்பா".

"நாம தான் இன்னும் கொஞ்ச நேரத்துல சாப்பிட போறோமே. இவளுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?".

"கடிகாரத்தை பாருங்க" என்றாள் மேகலா.

நாராயணன் கடிகாரத்தை பார்த்தார். அவர்கள் சாப்பிடும் நேரத்தை விட அரைமணி நேரம் அதிகமாகியிருந்ததை புரிந்துகொண்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.