(Reading time: 14 - 27 minutes)

"சந்திக்கணும்னு விருப்பப்பட்டா இந்நேரம் என்னை அழைச்சிருப்பாரே?"

"அழைச்சா போவியா?".

"யோசிக்கலாம்".

"நாளைக்கு உனக்கு காலைல பத்து மணிக்கு அப்பாயிண்ட்மென்ட்  தந்திருக்காரு".

புரியாத பார்வையை ஜெஸிகாவின் மேல் வீசினான் வசந்த்.

"விஷ்வா தான் உனக்காக கெஞ்சி, திரும்பவும் சான்ஸ் ஏற்படுத்தி கொடுத்திருக்காரு. அனுபவமில்லாதவன் ஏதோ தெரியாம பேசிட்டான். நான் அவனுக்கு புரியவைக்கிறேன்னு சொல்லி அவரை கூல் பண்ணிருக்காரு. இதை சொல்ல உனக்கு போன் பண்ணினா நீ எடுக்கல அதனால என்னை அனுப்பி விசயத்தை சொல்ல சொன்னாரு".

வசந்த் மௌனமாக நின்றான்.

"நீ என்ன முடிவு எடுத்திருக்க வசந்த்?"

"எனக்கு என்ன சொல்லுறதுனே தெரியல".

"உனக்கு என்ன தோணுதோ அதை சொல்லு".

"எல்லாரும் சேர்ந்து உங்களுக்கு ஏத்த போல என்னை மாத்திக்க சொல்லுறீங்க"

"தெளிவான முடிவு எடுன்னு சொல்லுறோம். நீ வந்து தான் ஆகணும்னு கட்டாயமில்லை. உனக்கு இன்னும் நேரமிருக்கு. இந்த மாதிரி வாய்ப்பு எல்லாம் எல்லாருக்கும் அமையாது".

"எனக்காக இல்லன்னாலும் விஷ்வாவுக்காக போறேன். ஆனா ஒண்ணு ஜெஸ்ஸி, நான் என்னைக்கும் என்னை விட்டு கொடுக்கமாட்டேன்".

"அது உன் இஷ்டம். நான் கிளம்புறேன்" என்று எழுந்தாள் ஜெஸிகா.

"ஒரு நிமிஷம்".

ஜெஸிகா நின்றாள்.

"என்னை டைரக்டரா பாக்கணும்னு நீ ரொம்ப ஆச பட்ட. என் முடிவு உன்னை கஷ்டப்படுத்தியிருந்தா, ஐ ஆம் சாரி"

வசந்த் சொன்னதுக்கு பதிலேதும் கூறாமல் அறையை விட்டு கிளம்பினாள் ஜெஸிகா.

டுமையான குழப்பத்தில் ஆழ்ந்தான் வசந்த். அந்த நிலைமையை எவ்வாறு கையாள்வது என்று சிந்தித்தான். முடிவு கிடைக்கவில்லை. தலையில் கை வைத்தபடி படுக்கையில் அமர்ந்தான் வசந்த்.

இரவு நீண்டுகொண்டே சென்றது. வசந்திற்கு லேசாக பசித்தது. அமேலியா கொடுத்த உணவை பார்த்தான். அவன் எண்ணங்கள் அமேலியாவை நோக்கி திரும்பின. அவளை பார்க்க விரும்பிய வசந்த், அறையை விட்டு வெளியே வந்தான். பூனை போல் மாடிப்படியில் இறங்கியவன், சுற்றும் முற்றும் பார்த்து திரும்பியவன் எதிரில் சில அடி தூரத்தில் ஒர் உருவம் நின்றிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தான்.

இருளில் அந்த உருவத்தின் முகம் சரியாக தெரியவில்லை. மெல்ல மெல்ல அந்த உருவம் வசந்தை நெருங்கியபோது தான் அது அமேலியா என அவனுக்கு புரிந்தது.

இருவர் உள்ளங்களும் ஒரே நேரத்தில் ஒரே எண்ணத்தோடு பயணிப்பதை எண்ணி வசந்த் ஆச்சர்யப்பட்டான். அமேலியாவின் கையைப் பிடித்தவன் அவளை மாடிக்கு அழைத்து சென்றான். யாரும் பார்த்துவிடக்கூடாது என்ற பயமும் அவர்களுக்குள் இருந்தது.

வசந்தின் அறையைக் கடந்து அடுத்திருக்கும் பெரிய அறைக்குள் இருவரும் நுழைந்தார்கள். அதிக வெளிச்சமில்லாத மங்கலான ஒளியைக் கொண்ட அந்த அறையின் ஜன்னலின் ஓரத்தில் இருவரும் நின்றார்கள். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள். அமேலியாவின் முகத்தில் நாணம், வசந்தின் முகத்தில் ஏக்கம்.

இருவருக்குள்ளும் மொழி தடையாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் மௌனத்தோடு காதல் பாஷை பேசுவது வித்தியாசமாகவும் புதுமையாகவும் இருந்தது. 'இந்த உலகில் வித்தியாசமான காதல் கதைகள் ஏகப்பட்டது இருந்தாலும், தன்னோட காதல் அவர்களை விட வித்தியாசமானது' என வசந்த் சிந்திப்பதுண்டு.

வெள்ளி நிலா வான் வீதியில் வலம் வர, குளிர் காற்று உடலைத் தீண்ட இரு உள்ளங்க்ளும் ஒன்று சேர இரவும் அவர்களுக்கு தைரியம் கொடுக்க காதல் வானில் இருவரும் எங்கோ பறந்து சென்றுகொண்டிருந்தார்கள்.

இருவரும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால், மௌனம் அவர்களுக்குள் தூது சென்றுகொண்டிருந்தது. கூடு விட்டு கூடு பாயும் வித்தையை அவர்கள் செய்துகொண்டிருந்தார்கள்.

கருவில் இருக்கும் குழந்தை எந்த மனநிலையில் இருக்குமோ அந்த நிலையில் இந்த உலகை விட்டு எங்கோ சென்றுகொண்டிருந்தார்கள். சில நிமிடங்கள் தான் கற்பனை உலகில் சிறகடித்தார்கள். பல்லாயிர வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த திருப்தி அவர்களுக்குள் ஏற்பட்டது.

ஏதோ எல்லை மீறுகிறது என்று உணர்ந்த அமேலியா அங்கிருந்து செல்ல முடிவெடுத்து சில அடிகள் முன் வைக்க, வசந்த் அவள் கையைப் பிடித்தான். அந்த பிடியை உதறி அங்கிருந்து சென்றிருக்கலாம். அமேலியா அதை செய்யவில்லை. அவன் ஸ்பரிசத்தை விரும்பினாள். அவளை மெல்ல இழுத்து அணைத்தான் வசந்த். இரவு நேர அணைப்பு இருவரையும் மயக்கநிலையை அடையச் செய்தது. மோகநிலை யோகநிலையாக மாறி இருவரும் சிலையென இருந்தார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.