(Reading time: 14 - 27 minutes)

"மாமா கதவை திற!" என வசந்தின் அறையின் முன் நிலா கத்திக்கொண்டிருந்ததாள்.

சில நிமிடங்கள் கழித்து கதவு திறக்கப்பட்டது. வசந்த் கோபத்தோடு நிலாவை பார்த்தான்.

"இந்தா சாப்பாடு"

"எனக்கு வேணாம், இங்க இருந்து போ" எரிச்சலோடு சொன்னான் வசந்த்.

"அமேலியா அக்காகிட்ட அப்போவே சொன்னேன். கேட்டுச்சா" என்றபடி கிளம்பினாள் நிலா.

"நில்லு"

நிலா நின்றாள்.

"அமேலியாவா சாப்பாடு கொடுத்துவிட்டா?"

"ஆமா"

"சரி கொடு"

"இப்போ தான் வேணாம்னு சொன்ன"

"திடீர்னு பசிக்குது".

சாப்பாட்டினை வசந்திடம் கொடுத்துவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றாள் நிலா. வசந்த் கதவை சாத்தினான். அமேலியாவின் அன்பை எண்ணிப் பார்த்தான். இருந்தும், சாப்பிட அவன் மனம் விரும்பவில்லை. உணவுத் தட்டினை மேஜையின் மேல் வைத்துவிட்டு தொலைந்துபோன தன் கனவினை சிந்தித்தான்.

அடுத்து என்ன செய்வது என்பது கூட அவனுக்கு தெரியவில்லை. உலகமே இருண்டுவிட்டதை போல் உனர்ந்தான். உதறிய வாய்ப்பை ஏற்றிருக்கலாமோ என்று கூட நினைத்தான். அது நியாயமா? நிச்சயம் அப்படியொரு வாய்ப்பு வேண்டாம்.

விஷ்வா போன் மேல் போன் செய்துகொண்டிருந்தார். வசந்த் அவரது அழைப்பினை தவிர்த்தான். போனை எடுத்தால் என்ன சொல்லிவிட போகிறார். 'இதெல்லாம் விளம்பரத் துறையில் சாதாரணம். உன்னை போல் நான் பிடிவாதம் பிடித்திருந்தால், இந்த நிலையை அடைந்திருக்கமாட்டேன்'. இப்படி அவர் நிலையைப் பற்றி மட்டுமே பேசுவாறே தவிர என் நிலையை யோசிக்கமாட்டார்.

நீண்ட மூச்சினை இழுத்து விட்டான் வசந்த். வெளியே எங்காவது செல்லலாமா என்று எண்ணினான். ஆனால் வீட்டிலிருப்பவர்கள் கேட்கும் கேள்விகளை எப்படி சாமளிப்பது? தான் ஏதோ மனக்கவலையில் இருப்பதை இந்நேரம் தெரிந்துகொண்டிருப்பார்கள். அப்பா அட்வைஸ் என்னும் கத்தியை கூர் தீட்டி வைத்திருப்பார். "கடவுளே!" என நெற்றியை தேய்த்துக்கொண்டான் வசந்த்.

திடீரென பரபரப்போடு நுழைந்தாள் ஜெஸிகா. மேகலா, நாரயணனை பார்த்து, "வசந்த் மேல தான இருக்கான்?" என அவர்கள் பதிலை கேட்காமல் படபடவென மாடிப்படியில் ஏறினாள்.

அவள் செல்வதை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி இருந்த நாராயணன், "இந்த பொண்ணால தான் வசந்த் பாதி கெட்டான்" என்றார்.

"அப்போ மீதி யார் கெடுத்ததுப்பா?"

"வேற யாரு? நீயும் நானும் தான். அவன் டைரக்டர் ஆகப்போறேன்னு சொன்னானே, அப்போவே புத்தியில உரைக்கிறது போல கண்டிச்சிருந்தா, இப்படி புலம்பிட்டு இருக்க மாட்டோம்".

மேகலா சிரித்தாள்/

"அந்த பொண்ணு போட்டுட்டு போச்சே ஒரு பேண்ட், அது யாரு கண்டுபிடிச்சது?".

"டிசைனர்ஸ் தான்ப்பா. இப்போ அது தான் பேஷன்"

"நாகரிகம் உங்ககிட்ட மாட்டிக்கிட்டு நாய் படாதபாடு படுது" என்றபடி தன் அறையை நோக்கி சென்றார் நாராயணன்.

சந்தின் அறையில் ஜெஸிகா அமர்ந்துகொண்டிருந்தாள். அந்த நேரத்தில் அவள் வந்தது வசந்துக்கு பிடிக்கவில்லை என்றாலும் மெளனமாக ஜன்னலை பார்த்தபடி நின்றான்.

"நான் கேள்விப்பட்டது உண்மையா?" ஜெஸிகா பேச்சை துவங்கினாள்.

"ஆமா"

ஜெஸிகாவிற்கு கோபம் வந்தது. பொறுத்துக்கொண்டாள். "காரணம் என்னனு கேக்கமாட்டேன் வசந்த். இது உன் வாழ்க்கை உன் முடிவு".

வசந்த் அமைதியாக நின்றான்.

"என்னை கேட்டா, நீ இந்த விஷயத்தை பொறுமையா கையாண்டிருக்கலாம்னு சொல்லுவேன்".

"எனக்கு அந்த நேரத்துல எதுவும் தோணல. என்னை ஒரு விஷயத்துல கூட சுதந்திரமா செயல்படவே விடல. நான் என்ன தான் செய்யுறது?".

"அதுக்காக? எல்லாத்தையும் உதறி போட்டுட்டு வந்திடுவியா?. உன் கனவை நீயே கொன்னுட்ட வசந்த்"

"அவங்க சொன்னது போல நடந்தாலும் என் கனவு செத்திடும் ஜெஸ்ஸி"

"அடுத்து என்ன செய்ய போற?"

"கழுதை கெட்டா குட்டிசுவரு. எனக்கு வேற ஏது போக்கிடம்? நம்ம ஆபிஸ் தான்"

"விஷ்வா உன் மேல செம கோவத்துல இருக்காரு".

வசந்த் வேதனையோடு சிரித்தான். "அவர் கோவம் நியாமானது தான். அவர்கிட்ட மன்னிப்பு கேக்கணும்".

"நீ மறுபடியும் அந்த தயாரிப்பாளரை ஏன் சந்திக்கக்கூடாது?".

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.